செவ்வாய், 11 ஏப்ரல், 2017

போட்டுக்கொடுத்த பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் !

வாக்குக்குப் பணம் கொடுத்த தினகரன் தரப்பை கையும்களவுமாகப் பிடிக்க, அமைச்சர் விஜயபாஸ்கரைக் குறிவைத்ததாகச் சொல்கிறார்கள் வருமானவரித் துறையில். நடந்தது என்ன என்பது குறித்து நம்மிடம் விளக்கினார், வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். அதன் விவரம்: ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் தரப்பு என்ன செய்துகொண்டிருக்கிறது என தினமும் வருமான வரித்துறைக்கு சொல்லிக் கொண்டிருப்பவர் ஓ.பன்னீரின் மகன் ரவீந்திரநாத். "வருமானவரித்துறை உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமான ஒரு மாநில அரசின் அதிகாரிக்கு அவர் தகவல் சொல்வார். அந்த மாநில அரசு அதிகாரி, வருமான வரித்துறைக்கு சொல்வார். ரவீந்திரநாத் சொன்ன முதல் தகவல், "தினகரன் வகையறா, எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியான இளங்கோவன் மூலம் கோவையில் தங்கக் காசுகளை வாங்கி சேலம் போச்சம்பள்ளியில் ஆயுதப்படை கமாண்டராக உள்ள பெண் எஸ்.பி. மூலம் கொடுத்து அனுப்புகிறார்கள்' என்பதுதான். அவர் சொன்னதைப்போல அந்த பெண் எஸ்.பி.யும், இளங்கோவனுக்கு சொந்தமான, பதிவு செய்யப்படாத காரில் சென்னைக்கு வந்தார்.

நள்ளிரவில் வந்திறங்கிய அவரைப் பிடிப்பதற்கு வருமானவரித் துறை தயாராக இருந்தது. ஆனால் அந்த காரில் தங்க நாணயங்கள் இல்லை என்றும் அந்த பெண் எஸ்.பி., இளங்கோவனின் நண்பர், எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவந்தார் என்றும் தெரியவர வருமானவரித் துறை பின்வாங்கியது. அடுத்ததாக ரவீந்திரநாத் குறிவைத்தது, தினகரனுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தைத்தான். தளவாயின் பின்னே சுற்றிய வருமான வரித்துறை அவரிடம் பெரிதாக ஒன்றுமில்லை எனக் கண்டுபிடித்தது.
ஆனால் தினகரன் இரண்டு கட்டமாக பணவிநியோகம் செய்யப் போகிறார். அத்துடன் ஏகப்பட்ட கூப்பன்களை பொதுமக்களிடம் கொடுத்து, பெரிய பாத்திரக் கடை களில் பணம் + பொருள் வாங்க டோக்கன் கொடுக்கிறார் என வருமானவரித்துறை, தளவாய் சுந்தரத்தை பின் தொடர்ந்தபோது கண்டுபிடித்தது.
 4-ம் தேதி நள்ளிரவு ஓட்டுக்கு 4,000 ரூபாய், பரிசுப்பொருட்கள் என தினகரன் அணி பண விநியோகம் செய்தது. அதை தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் வீடியோ எடுத்தனர். மொத்தம் 15 லட்ச ரூபாய் தினகரன் ஆட்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது. 5-ம் தேதி தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பண விநியோகத்தில் ஈடுபட்டார்கள். அதையும் தேர்தலை கண்காணிக்கும் அதிகாரிகள் வீடியோ எடுத்தனர். அத்துடன் ஓ.பி.எஸ். அணியினரும் பண விநியோகம் செய்தனர்.
இப்படி தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் முப்பது பண விநியோக வீடியோக்களை எடுத்து டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தார்கள். இதில் பெரும்பாலானவை தினகரன் தரப்புக்குரியவை. வருமானவரித்துறையினரும் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் பண விநியோகத்தின் அபாயகரமான போக்கை தங்கள் தலைமைக்கும் தெரிவித்தனர். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக