புதன், 26 ஏப்ரல், 2017

பன்னீர்செல்வம் :நாங்கள் எல்லோரும் அண்ணன் தம்பிகள்தான்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் புதன்கிழமை காலை அவரது அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். முனுசாமி கூறுகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் பேனர்களை அகற்றியுள்ளனர். இதனை வரவேற்கிறோம். மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இணக்கமான சூழல் வருகிறபோது ஓ.பன்னீர்செல்வம் அமைத்துள்ள குழு பேச்சுவார்தையில் ஈடுபட துவங்கும்.
கேள்வி : பேச்சுவார்த்தை இன்று, நாளை என கடந்த 4 நாட்களாகவே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். பேச்சுவார்த்தை எப்போது நடக்கும். பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது எது?.  தினகரனை மாட்டிவிட்டதே இவர்தான் என்று டில்லி முழுக்கபேச்சுஅதுக்குள்ளார  அண்ணன்  தம்பி டயலாக்குகள் வேற !

பதில்: இன்று வரும், நாளை வரும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஊடகங்களாகிய நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பிகளாக இருக்கிறவர்களுக்கு மனச்சங்கடங்கள் வரும்போது, கருத்து வேறுபாடு வரும்போது, கருத்து வேறுபாடுகளும், மனச்சங்கடங்களும் நிவர்த்தி செய்த பின்பு பேசுகின்றபோது இணக்கமாக வரும். அதற்காகத்தான் எங்கள் அன்பு வேண்டுதல்களை அவர்களிடத்தில் வைக்கிறோம். அவர்களும் ஓரளவுக்கு அதனை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு முடிவுக்கு வரும்போது நிச்சயமாக பேச்சுவார்த்தை நடைபெறும்.

கேள்வி: நாங்கள் (அதிமுக அம்மா அணி) அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் சொல்வதை கேட்கவில்லை. பேச்சுவார்த்தைக்கே வரவில்லை என்று கூறுகிறார்களே?

 பதில்: நாங்கள் போய் பேசவில்லை. பேசுவதற்கு முன்பாகவே சசிகலாவின் கட்அவுட்டுகளை எடுத்துவிட்டார்கள். எங்களின் எண்ணங்கள் அவர்களுக்கு நன்றாக தெரியும். தொடர் நிகழ்வாக எங்கள் எண்ணங்களை நிறைவேற்றக்கூடியவர்கள் அங்கு பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதனை நிறைவேற்றக் கூடாது என்று சொல்பவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களையும் கட்டுக்குள் கொண்டு வந்து இதனை நிறைவேற்றுவதற்கு அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடிய முயற்சியின் அடையாளம் தான் சசிகலாவின் கட்அவுட்டுகளை எடுத்திருப்பது. இந்த இயக்கத்தினுடைய தீய சக்தியாக இருக்கின்ற அந்த குடும்பத்தை வெளியேற்றிவிட்டால் நாங்கள் எல்லோரும் அண்ணன் தம்பிகள்தான். அண்ணன், தம்பிகளுக்குள் சின்ன சின்ன வருத்தங்கள் இருக்கும். இது கலையப்படும்பட்சத்தில் நிச்சயமாக பேச்சுவார்த்தை நடைபெறும்.

கேள்வி: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையில் இன்னும் உறுதியாக இருக்கிறீர்களா.
பதில்: சிபிஐ விசாரணை கோரிக்கை என்பது ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்காக வைக்கப்பட்ட கோரிக்கை. அந்த கோரிக்கை எப்பொழுதுமே விசாரணை வருகின்ற வரையில் நிச்சயமாக அது உயிரோட்டமாக இருக்கும்.

கேள்வி: பேச்சுவார்த்தையில் இதனை வலியுறுத்துவீர்களா?

பதில்: நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். நாங்கள் ஏன் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதற்கு ஒரு உதாரணம். இந்த கட்சியை கைப்பற்றுவதற்காக தினரகன் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் கூட இப்படி ஒரு அசாதாரண சூழல் வந்தது. அப்போது இதுபோன்ற தவறை யாரும் செய்யவில்லையே. தேர்தல் கமிசனுக்கு சென்று பணம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என்ற முயற்சியை யாரும் செய்யவில்லையே. அன்று உண்மையாகவே கழகத்திற்காக உழைத்த தலைவர்கள் இரண்டு அணியாக நின்றார்கள். அப்படி நின்றவர்களை மரியாதைக்குரிய அண்ணியார் ஜானகி அம்மையார் நீங்கள் இரண்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒன்றாக இணையுங்கள். நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்று சொன்னதன் அடிப்படையில் இணைந்தோம். ஜெயலலிதா தலைமை ஏற்றார்.
ஆனால் இன்றைய நிலைமை என்னவென்றால் புறவாசல் வழியாக தேர்தல் கமிசனையே விலைக்கு வாங்கக் கூடிய நிலையில், கட்சியை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். சட்டம் அதன் கடமையை செய்திருக்கிறது. அந்த சட்டத்தின் வாயிலாக நிச்சயமாக தர்மம் வெல்லும். இவ்வாறு கூறினார். தொகுப்பு : ராஜவேல். படங்கள் : செண்பகபாண்டியன்.  nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக