ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

டெல்லியில் ஹவாலா சந்தேக பணம் ரூ.50 லட்சம் சிக்கியது .. இரட்டை இலைக்கு லஞ்சம் தொடர்பு?

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி ஏஜெண்டு நரேசிடம் இருந்து ரூ.50 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது.
இரட்டைஇலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார்.
டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்த விசாரணைக்கு பின் டி.டி.வி. தினகரனை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு அலுவலகமான ராஜாஜி பவனிலும், தினகரனின் அடையாறு இல்லத்திலும் வைத்து 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.


இதேபோல் தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பரான மல்லிகார் ஜுனாவிடமும் போலீசார் ராஜாஜி பவனில் வைத்து விசாரித்தனர்.
சென்னையில் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து போலீசார் நேற்று மாலை டி.டி.வி.தினகரனை பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் தன்னுடன் தொடர் புடைய ஹவாலா ஏஜெண்டுகளின் விவரங்களை டெல்லி போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் டெல்லியில் நரேஷ் என்ற ஹவாலா ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். இவர் மூலமாகவே டி.டி.வி. தினகரனிடம் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு பணம் சென்றிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் நரேசின் டெல்லி வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.50 லட்சம் பணம் சிக்கியது. இது ஹவாலா பணம் என்று தெரியவந்தது.
இந்த பணம் சுகேஷ் சந்திரசேகருக்கு கொடுப்பதற்காக வைத்து இருந்ததாக நரேஷ் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே டி.டி.வி. தினகரனின் வங்கி கணக்குகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு ஸ்டேட் வங்கியில் 5 கணக்குகள் உள்ளன.
இந்த கணக்குகளில் அவர் எவ்வளவு பணம் போட்டுள்ளார். யார்- யாருக்கு எப்போது பண பரிமாற்றம் செய்தார் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
தினகரனின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாளை தினகரன் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
தினகரனிடம் சென்னையில் வைத்து மீண்டும் விசாரிக்க வேண்டி உள்ளதால் அவரை மறுபடியும் சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். இதனால் தினகரனுக்கு மேலும் சில நாட்கள் காவல் நீடிப்பு கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நாளை தினகரன் டெல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும்போது இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்  மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக