சனி, 1 ஏப்ரல், 2017

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 100 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி 15 ந் தேதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 37 நாட்கள் போராட்டம் நடந்த்து. அந்த போராட்டங்களை தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விவசாயிகள் விரும்பவில்லை என்றால் திட்டம் செயல்படாது என்று கடந்த 22 ந் தேதி சொன்னவர் 27 ந் தேதி நெடுவாசல் திட்டம் உள்ளிட்ட 31 திட்டங்களுக்கும் ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டது.
அதனால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பசுமை வீடுகளுக்காண பயனாளிகள் தேர்வு செய்ய மார்ச் 31ந் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கணேஷ் அறிவித்தார். இந்த கூட்டத்தில் திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம சபையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வடகாடு, நெடுவாசல் போராட்டக்குழுவினர் சுமார் 100 கிராமங்களில் ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்தனர்.

முதலில் மாவட்ட நிர்வாகம் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு தீர்மானம் போட வேண்டாம் என்று கிராம சபை நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் கிராம மக்கள் அந்த தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால் அதிகாரிகள் சிறைபிடிக்கப்படுவார்கள் என்ற தகவலை பரப்பினார்கள்.

அதன் பிறகு 31 ந் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் நெடுவாசல், வடகாடு, செரியலூர் இனாம், ஜெமின், சேந்தன்குடி, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட சுமார் 100 கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் என்னும் மண்ணுக்கு அடியில் உள்ள எரிவாயு, எண்ணெய் போன்ற வளங்களை எடுக்க கூடாது. ஜெம் நிறுவனத்திற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை மக்கள் கொண்டு வந்தனர்.
 இந்த தீர்மானங்களை அதிகாரிகள் மறுக்காமல் ஒப்புதல் அளித்தனர். கிராம சபை கூட்ட தீர்மானம் என்பது சட்ட மன்றம், பாராளுமன்றத்திற்கு இணையானது அதனால் இந்த தீர்மானத்தை மீறி எந்த செயலுக்கும் மத்திய அரசு நுழைய முடியாது என்றனர் கிராம சபையில் கூடியிருந்த விவசாயிகளும், கிராம மக்களும். -இரா.பகத்சிங் நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக