சனி, 25 மார்ச், 2017

ஆயா நான் செத்துருவனா ? சிறுமி சர்மிளா கொல்லப்பட்ட கதை !

ஏண்டா பாவிகளா…முதலுதவி பண்ண வேண்டாமா?…என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே…பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா…உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்.
காஞ்சிபுரத்திலிருந்து ஒரு நகரப் பேருந்து.  பக்கத்தில்,  ஒரு பெண் அசதியாக உட்கார்ந்தார்.  உடல் நலமில்லை என்பது பார்த்ததுமே தெரிந்தது. சிறிது நேரம் கழித்து,  “உடம்புக்கு என்னாச்சு” என்றேன்.  “நாலு நாளா, பச்ச தண்ணி பல்லுல படல, மனசே ரொம்ப கஷ்டமாயிருக்கு… சாப்புட நினைச்சாலும், வாந்தி மயக்கமா இருக்கு… அதான் டாக்டரான்ட போய்ட்டு வரேன்” என்றவாறு தன்னுடைய பழைய செல்போனில் வீடியோ ஒன்றை எனக்கும் காட்டினார். அதில், இரண்டு பெண் குழந்தைகள் பள்ளி விழாவில் ஆடுவதற்காக வீட்டில் பயிற்சி செய்துக் கொண்டிருப்பது ஓடியது.  முடிந்ததும் போனை உள்ளே வைத்துவிட்டு  பேசத் தொடங்கினார்.
“சர்மிளா… எங்க பக்கத்துவீட்டுப் பொண்ணு, என் பொண்ணு மாதிரித்தான் இரண்டு பேரும் ஏகனாம் பேட்டை ஸ்கூல 7 வது  படிக்கறாங்க… போன வாரம் இன் நேரம் நினைச்சிக்கூட பார்திருக்கமாட்டோம்…சர்மிளாவ…  வெள்ள துணியில சுத்தி சுடுகாட்டுல புதைப்போம்னு…” சொல்லிக்கொண்டே அழுதார்.

சிறுமி சர்மிளா
எனக்கு, எப்படி ஆறுதல் சொல்லுவது, என்ன விசாரிப்பது என்றே புரியவில்லை… பிறகு, மெதுவாக “ஏன் குழந்தைக்கு ஏதாவது உடம்புக்கு சரியில்லையா?” என்றேன்.
“எம்பொண்ணு… வயசுக்கு வந்திட்டா,சர்மிளா… இப்பவோ, அப்பவோனு இருக்காளேனு பேசிப்போம்.. படிப்புலயும் சுட்டி, வீட்டு வேலைகளை அவ்வளோ மணி மாதிரி செய்யும்… அவங்க, அம்மாவும், அப்பாவும் வண்டியில காய்கறி வியாபாரம்  செய்றவங்க… அவங்களுக்கு மூணுப்பொண்ணு, சர்மிளாத்தான் கடைசி….  அவங்க அம்மா என்கிட்ட சொல்லிட்டு, வீட்டை போட்டதுபோட்டபடியே  விட்டுட்டு போய்டுவா… சர்மிளாத்தான் ஸ்கூல் முடிச்சி வந்ததும் வீட்டை சுத்தம் செய்யும், எல்லா வேலையும் முடிஞ்சதும் உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சுடுவா… போன ஞாயிற்று கிழமை(19-3-17) லீவுங்கிறதால… வீட்டில இருந்தா,  அவளோட அப்பாவும், அம்மாவும் வியாபாரத்துக்கு போய்ட்டாங்க…   காலைல 11 மணியிருக்கும், சர்மிளா, “அக்கா, அக்கா,” னு ஓடி வந்தா. “என்னாடீ” ன்னு கேட்டேன்.. “வீட்டுக்கு பக்கத்துல ஓடு அடுக்கி வைச்சிருக்காங்கள்ள அங்கிருந்த, ஓணான இல்ல என்னனு தெரியல… கடிச்சிருச்சிக்கா…. “னு சொன்னாள்.
எனக்கு பக்குனு ஆயிடுச்சி, எங்க காட்டுனு பார்த்தேன், சோத்துக்கால்ல சுண்டு விரல்ல இரண்டு பல்லு பதிஞ்ச மாதிரி இருந்தது, உடனே குழந்தைய உட்கார வைச்சிட்டு வெளியில் இருந்த என் வீட்டுக்காரர் கிட்ட அடுத்த நொடியே எதிருல இருக்கற அய்யம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு (ஆரம்ப சுகாதார நிலையம்) வண்டில கூட்டிட்டு போக சொன்னேன்…குழந்த தண்ணிக் கேட்டா அதுக்கூட கொடுக்கல…. எதாச்சும் ஆயிடப்போதுனு பயத்துல…..
சீக்கிரமா போனு அவரை தள்ளிவிட்டேன்… அவரும் விழுந்தடிச்சிப் போனாரு…
அங்க போனவரு எனக்கு போன் பண்றாரு… சீக்கிரம் வா… இங்க பாக்க மாட்டாங்களாம்… காஞ்சிபுரத்துக்குத்தான் போகணுமா… ன்னுட்டு…நான் சொன்னேன்…  முதல்ல எதனா ஊசிப் போடச் சொல்லு…ஸ்கூட்டர்ல போக லேட்டாகும்… ஆம்புலன்சு கேளு… னு அவரும் கேட்டீருக்காரு…  ஆனா ஆஸ்பத்திரியில வேலை பார்க்குறவங்க… ஆம்புலன்சுக்கு டிரைவர் இல்ல…. இது,நேரா நீங்க கூப்பிட்ட உடனேல்லாம் வராது. 108-க்கு போன் பண்ணி, விசயத்த சொன்னா, அங்கிருக்கிறவங்க… டிரைவருக்கு தகவல் சொன்னாத்தான் வண்டி எடுப்பாங்க….ன்னு  சொன்னாங்க… உங்க… வண்டி இருக்கே எடுத்துகிட்டு போக வேண்டியது தானே?  என்று, துரத்திவிட்னர்.
எந்த வேதனையும் வெளிக்காட்டாமல், இதையெல்லாம் சர்மிளாவும் உட்கார்ந்து வெறித்து..பார்த்தாள்…..
பிறகு, ஸ்கூட்டரில் காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்கு சென்றதும் ஒபி சீட்டு போடச் சொன்னார்கள்.  ஓபி சீட்டு போட்டுக்கொண்டு வந்து, சர்மிளாவிடம், நடக்க வேண்டாம் தூக்கி செல்கிறேன் என்றதற்கு மறுத்து, சர்மிளா கேட்டிலிருந்து, நடந்தே வந்தாள்.
அங்கு, டாக்டர் “என்ன கடித்தது, அதை கூடவே கொண்டு வந்திருக்கலாமே,  நீங்க யாரு… குழந்தைக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.

சர்மிளாவுக்கு முதலுதவி கூட தராமல் துரத்திய உள்ளூர் சுகாதார நிலையம்
“எங்க பக்கத்து வீட்டு குழந்தை” என்றதும்… டாக்டர், “அம்மா,அப்பாவை வரச் சொல்லு அப்பத்தான் பாப்போம்… அட்மிஷனுக்கு கையெழுத்து வேணும்… என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “இல்ல, இல்ல,, எங்க தங்கச்சிப் பொண்ணு எது ஆனாலும் நான் பொறுப்பேத்துக்குறேன்… குழந்தைக்கு வேர்க்க, ஆரம்பிக்குது என்னான்னு பாருங்க… அப்பா, அம்மா வந்துட்டே இருக்காங்க… ” னு சொல்லி அட்மிசன் போட வைச்சிருக்கிறாரு…என் வீட்டுக்காரு.  அங்கு,  குழந்தய படுக்கவெச்சதும் வாயில நுரை தள்ளிடுச்சி…  டாக்டருங்க எங்கள வெளியில இருங்கனுட்டு இரண்டு ஊசிப் போட்டாங்க… உடனே எங்க வீட்டுக்காரு எனக்கு போன் போட்டு, குழந்தை நிலைமை பயமா இருக்கு, அவங்க அப்பா அம்மாவுக்கு சொல்லி சீக்கிரம் வரச்சொல்லுன்னாரு… நான்  பக்கத்து வீட்டு பாட்டிய அனுப்பி வெச்சேன். அப்புறம்…  நான் குழந்தை கடிப்பட்ட..அந்த இடத்துலப் போய் கிளறிப்பார்த்தேன்…. சின்ன, மெல்லிசான பாம்பு,  அதைப் பார்த்ததுமே அடிச்சி எரிச்சிட்டேன்…
உடம்பு மட்டும் தான் எங்கிட்டருந்ததே ஒழிய உசிரு எங்கிட்ட இல்ல…  உடனே நானும் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன்…  உள்ளவே விடாம.. டாக்டர் மட்டும் பேசிட்டே இருந்தாரு… குழந்தை நிலைமை மோசமா இருக்கு செங்கல்பட்டு போனா காப்பாத்திடலாமுனு அங்க இருந்து, குழந்தைய மூட்டை கட்ட ஆரம்பிச்சாங்க… ஆம்புலன்ஸ்ல குழந்தைய ஏத்துனாங்க… குழந்தை என்னய வெறிச்சி, வெறிச்சிப் பார்த்தா… அவங்க ஆயாக்கிட்ட… “ஆயா, நான் செத்துடுவேனாயா… ” னு கேட்டா… எங்களால தாங்க முடியல… இன்னுமும் அந்த வார்த்தை என் காதுல கேட்டுட்டேயிருக்கு… சாவுற வயசாம்மா அது…    கடைசில இரண்டு மணி நேர அலைக்கழிப்புக்குப் பிறகு,    செங்கல்பட்டு அனுப்பி, சாவடிச்சி, அறுத்து, வெள்ளத்துணியில பொட்டலம் கட்டி அனுப்பிட்டானுங்களே… னு சத்தமிட்டு அழுதார்.
அவரை தேற்றியபோது, “எப்படிம்மா அழாம இருக்க முடியும்… அதுக்கூட ஸ்கூல்ல படிச்ச புள்ளைங்க, சர்மிளா செத்துட்டான்றத நம்ப முடியாம தினமும் வந்து பார்த்துட்டு போதுங்க… அவங்க அம்மாக்காரி மணிக்கொருக்கா எங்கிட்ட, எம்பொண்ணு உங்கிட்டத்தான் கடைசியா பேசியிருக்கு…. என்ன சொல்ல வந்தாளோ, என்ன வேதனைய அனுபவிச்சாளோ, பக்கத்துல இல்லாம பாவியாயிட்டேனேனு பித்து பிடிச்சி பேசறாளே… எப்பிடி பதில் சொல்லுவேன் நான்… அவங்க அப்பா, அம்மா இருந்தா காப்பாத்தி இருப்பாங்களோ,  நாம வுட்டுட்டோமோனு மனசாட்சி… என்ன கொல்லுதே… என்னா அழகு, என்னா பேச்சு….அது கடைசியா, வீட்டு வேலைய செஞ்சத பார்த்தது… கண்முன்னாடிய ஓடுதம்மா…. கடைசியா பேசுன பேச்சுலயிருந்து….. என்னால மீண்டு வர முடியலேயம்மா… என்று அழுதார்.
அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டிய நான், இறந்த குழந்தையின் தாயாரைப் பார்க்க வேண்டும் என்று மனசு பாரமாக அழுத்த, அவருடனே இறங்கிவிட்டேன்.

இறந்த சர்மிளா உடுத்திய துணி, அவளுக்கு பிடித்த பிஸ்கட், மிட்டாய் வைத்து அழுதுக் கொண்டிருந்தார்கள்.
சர்மிளாவின் ஓட்டு வீடு. அங்கு, சர்மிளா பெற்றோர்கள் இறந்த சர்மிளா உடுத்திய துணி, அவளுக்கு பிடித்த பிஸ்கட், மிட்டாய் வைத்து அழுதுக் கொண்டிருந்தார்கள்.  தெருக்காரர்கள் ஆறுதல் சொல்ல, தாங்க முடியாத துயரம் அங்கே இறுகியிருந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, சர்மிளாவின் தந்தையிடம் மெதுவாகப் பேசினேன்.
” எப்படியோ எங்களுக்கு தகவல் வந்ததுமா….. பக்கத்தூர்ல தள்ளு வண்டில காய்கறி வியாபாரம் பண்ணிகினு இருந்தோம்.   அலறி அடித்து காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.  டாக்டருங்க…  என்ன கிட்டவே சேர்க்கல….. போன உடனே குறைஞ்சது பத்து கையெழுத்துக் கேட்டாங்க…. எதையும் யோசிக்காம பொண்ணுப் பொழைச்சா போதும்னு போட்டேன்… கடைசியில….. முடியாது… செங்கல்பட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்கனு….. அவசரப்படுத்தி ஆம்புலன்சுல ஏத்திவிட்டுட்டாங்க….. கடைசி வரைக்கும் கடிப்பட்ட எடத்துல எந்த ட்ரிட்மெண்டும் பண்ணல…. குளுக்கோஸ் மட்டும் ரெண்டு கையிலயும் போட்டு என்னைய பிடிச்சிக்க சொல்லிட்டாங்க…… ஆம்புலன்ஸ்சுல ஏத்துனதும்… குழந்தை துவண்டு கருப்பாயிடுச்சி,  நினைவு இல்ல….  சர்மிளா… சர்மிளா……. னு கத்தினேன் “ம்ம்ம்….ம்ம்ம்……னு” ….மொனவுனா குழந்தா…….ஆம்புலன்சுல வேலை பாக்கிற தம்பி, பயப்படாதீங்க….. சீக்கிரம் போய்டலாம்….னு சொல்லி வேகமா கூட்டிட்டுப் போய் விட்டுடுச்சி……. குழந்தையின் முனகல் சுத்தமா நின்னுடுச்சி…… செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்குபோனா அங்க, குழந்தய கீழ இறக்கறதுக்கு சக்கர நாற்காலி இல்லன்னாங்க…… எங்கப் போய் சொல்லுவேன்…. அந்த கொடுமைய…. சக்கர வண்டிக் கேட்டு சண்ட போடுறதா….. துவண்டு கிடக்கிற புள்ளய தூக்குறதா…… நினைச்சிப் பாருங்க.
கூட இருந்த தம்பி… மருந்து பாட்டில்களை தூக்கிகிச்சி, நான் எம்பொண் இரண்டு கையாலயும் அள்ளிக்கிட்டேன்….. பொறந்தப்ப எப்படி ஒண்ணும் தெரியாம கிடந்ததோ…… அதுபோலவே…… எந்த உணர்ச்சியும் இல்ல….. குழந்தை சில்லுனு இருந்தது………. அங்க… சின்னப் புள்ளங்கதான் டாக்டரா இருந்தாங்க…. பெட்டுல போட சொன்னாங்க… போட்டதும் ஒரு நர்சம்மா வந்து, “…ஒண்ணும் இல்ல எதுக்கு தூக்கி வந்தீங்கனு…..”  சொல்லுச்சி… கூட வந்த பக்கத்து வீட்டம்மா… கத்துனாங்க….. இப்பத்தான்மா புள்ள…. ஆயா நான் செத்துடுவேனானு கேட்டிச்சி, ….பேசிச்சிம்மா ….. பாருங்கம்மா… ன்னு அழுதாங்க. பக்கத்துல இருக்கற டாக்டருங்க “மெஷின் வேண்ணா போட்டு பாக்கலாம்..  ஒரு நாள் கழிச்சித்தான் சொல்ல முடியும்” னு சொன்னதும்…  நமக்குத்தான் படிக்கதெரியாதே,  சரி, படிச்சவங்க காப்பாத்தி குடுப்பாங்கனு… ஒத்துக்கிட்டேன்.

சர்மிளாவின் குடும்பத்தினர்.
ஒருநாள் முழுக்க மெஷினப் போட்டு ஷாக் கொடுத்தாங்க…. டாக்டருங்க எல்லாரும் அடிக்கடி வந்துப் பார்த்து நோட்டுல எழுதிப்பாங்க…. என்னன்னு நமக்கு தெரியும்…. கடைசில பெருக்கறவங்கதான் சொன்னாங்…. “அவங்களெல்லாம் படிக்கிறவங்க… அப்படித்தான் செய்வாங்கனு”…… , நான்  ஜில்லுனு இருந்த குழந்த  கையையும், காலையும் தடவி, தடவி விட்டேன்.அது என் கையே மறத்துப்போச்சி…. ஆனா எந்த பிரயோஜனமும்.. இல்ல…  அப்பத்தான் எனக்கு பட்டது இவங்க புள்ளய வைச்சி பாடம் ஏதுனாச்சும் படிக்கிறாங்கனு…. அப்புறம் கேட்டேன்…. எதனா முன்னேற்றம் தெரியுதா…. எனக்கு ஒண்ணும் புடிபடலேன்னேன்…  அவங்க, பெரிய டாக்டர வரவெச்சி சொன்னாங்க…  “நினைவு திரும்பும்னு எதிர்ப் பார்த்தோம்…. இல்ல…..மெஷன எடுத்துடுறோம்…. போஸ்மார்ட்டம் செய்ததும் வீட்டுக்கு தூக்கிட்டு போய்டுங்க….  ஆம்புலன்சுக்கு ஏற்பாடு பண்றோம்”னு சொன்னாங்  ….. வெள்ளை துணியிலருந்து எல்லாத்தையும் வெளியே வாங்கிக்கு வான்னு  எழுதிக் கொடுத்தாங்க……  மனசு பூரா கோபம் கொப்பளிச்சிது…. குழந்தைய நல்லா அடக்கம் பண்ணனுமே… என்ன செய்ய…. கத்தி கதறிட்டு வந்துட்டேன்…..
என் குழந்தைக்கு …. எந்த உதவியும் செய்யல…எம்பொண்ணு செத்துப்போச்சி….. நமக்குத்தான் ஒண்ணும்.. தெரியாது, டாக்டருக்கு படிச்சிட்டு வர்றவங்களுக்கு, பாம்புகடிக்கு என்ன செய்யணும்னு தெரியாதா? நர்சுக்கு தெரியாதா? அய்யம்பேட்டை ஆஸ்பத்தியில  டாக்டர் வெளியிலகூட வந்துப் பாக்காமா துரத்தியிருக்காங்க…. இதே அவங்க புள்ளயாவோ, பணக்காரன் வுட்டு புள்ளயாவோ இருந்திருந்தா வுட்டுருப்பாங்களா….. ஏழை புள்ளதானே என்னா செய்யப்போறாங்கனு வுட்டுடானுங்க….. நான், பொண்ண புதைச்சிட்டு, மனசு கேக்காம சொந்தகாரங்களோடு ஆஸ்பத்திரிக்கு போனேன்.  கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி டாக்டர வெளிய வரவெச்சேன்…. டாக்டரு இங்க எந்த வசதியும் இல்ல…. இங்க இருந்து டைம வேஸ்ட் பண்ண வேண்டாமுனுதான் அனுப்பினேன்னு சொல்றான்…. அங்க கூட வேலைப் பாக்கிறவங்க…. விதி….. 13 வயசுல பொம்பள புள்ளங்களுக்கு சகடை அடிச்சிருக்கும் அத நீங்கத்தான் முன்னாடிப் பார்த்திருக்கணும்னு சொல்றாங்க….. ஏண்டா பாவிகளா… முதலுதவி பண்ண வேண்டாமா?…… என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே…. பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா….  உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்….
ஒரு விசயம்…. நல்லா யோசிச்சிப் பாருங்க…. எம்பொண்ண சுண்டு விரல்ல பாம்பு கடிச்சிருக்கு….. குழந்தை ஆஸ்பத்திரிக்கு போயிருக்கு, அதுக்கப்புறம் ஸ்கூட்டருல 10 கிலோ மீட்டருக்கு காஞ்சிபுரம் போயிருக்கு…. அங்க இருந்து 100 அடி உள்ள நடந்து போயிருக்கு…..அங்கயும் எந்த கவனிப்பு இல்லாம படுக்க வெச்சிட்டாங்க… நுரை தள்ளிப் போய்ட்டா…. இப்படி.. என்பொண்ணுக்கு வந்த கதி யாருக்கும் வரக்கூடாது……. என ஓவென்று வாய்விட்டு அழுதார்.
அவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது?
– ஜோதி.
காஞ்சிபுரம் என்றால் பட்டுச் சேலைகளும், அந்தப் பட்டுச் சேலைகளின் சங்கமமான பாண்டி பஜாரும் தமிழக தொலைக்காட்சிகளில் அடிக்கடி விளம்பரமாய் ஒளிரும். சங்கரமடம் எனும் மேல் மட்ட அதிகாரத் தரகர் இடத்திற்கு வராத முதலாளிகளோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எவரும் இல்லை. பாஜக-வின் அகில இந்திய தலைவர்கள் முதல் உள்ளூர் நாட்டாமைகள் வரை காஞ்சிபுர சங்கரமடம்தான் அவர்கள் கால் பதிக்கத் தவறாத புண்ணிய பூமி.
இங்குதான் நெசவாளிகள் எனும் பெரும் சமூகப் பிரிவே வதைபட்டு வருகிறது. அழிக்கப்படும் விவசாயத்தின் எச்சமும் மரண அவஸ்தையில் இருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலத்தின் நிறுவனங்களுக்கு அடிமாட்டுக் கூலி வேலைக்காக உடலை சிதைக்கும் இளைஞர்கள் ஏராளம்.
ஆயினும் இங்கே ஒரு பாம்பு கடித்தால் முதலுதவி செய்வதற்கு அரசு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை. ஓடாத ஆம்புலன்ஸ்,  நச்சு முறிவு மருந்தில்லாத மருந்தகம், முதலுதவி செய்யவோ இல்லை பிரச்சினை என்ன என்று விளக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாத மருத்துவமனை ஊழியர்கள் – மருத்துவர்கள்….. அருகாமை பகுதிகளில் மருத்துவமனையோ இல்லை வாகன வசதியோ இல்லாத தமிழக கிராமங்கள் எதுவுமில்லை. ஆனால் இங்கே ஒரு பாம்பு கடிக்காக சிறுமி ஒருத்தி சாக வேண்டியிருக்கிறது. ஜெயா எனும் ஏ 1 குற்றவாளிக்காக கோடிக்கணக்கில் மக்கள் நிதியை செலவழித்த அரசு நிர்வாகம் மக்களை நடத்தும் விதத்திற்கு இந்தக் கொடூரமான கொலை ஒரு சான்று.
செத்துப்போன குற்றவாளி பாசிச ஜெயாவின்  படத்திற்கு முன்னால் கும்பிட்டு விழுகின்ற திருடர்கள் ஒருபுறமும், உயிரோடு சிறையிலிருக்கும் குற்றவாளி சசிகலாவின் காலில் விழுகின்ற திருடர்கள் மறுபுறமும் நின்று லாவணி பாட, இக்கேடுக்கெட்ட கூட்டத்தின் காலடியில் மிதிபடும் தமிழகம் மொத்தமும் சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சுடுகாட்டிற்கு காரணமான கயவர்களை சுளுக்கெடுக்காமல் ஆர்.கே.நகர் தொகுதியில் சுற்றி வருகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகளும், கார்ப்பரேட் ஊடகங்களும்.
மருத்துவமனைகளை செயல்படவைப்பது மட்டுமல்ல, மரத்தும் கொழுத்தும் போன இந்த அரசுக் கட்டுமானத்தை புரட்டிப் போடாமல் இங்கே மக்களுக்கு விடிவு இல்லை.
– வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக