வியாழன், 30 மார்ச், 2017

ஜெயலலிதா படம் போட்ட டைல்ஸ் ... அதிகாரிகள் கலக்கம்



தமிழகத்தில் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள், சுனாமி வீடு, மீனவர்கள் குடியிருப்பு, பசுமை வீடுகளின் முகப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் பதித்த டைல்ஸ் ஒட்டினால்தான் பில் பாஸ்-செய்வார்கள் பி.டி.ஓ.-க்கள். கடந்த 2016இல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதா உருவம் பதித்த டைல்ஸ்களை அரசு அதிகமாக கொள்முதல் செய்தது.
இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மறைந்தபிறகு, தற்காலிக முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்றார். பின், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார்.
ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு குழப்பமான நிலையே தொடர்ந்து இருப்பதால், எதிர்க்கட்சியான திமுக-வினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
மேலும் இதுகுறித்து பொதுநல அமைப்புகளும் நீதிமன்றத்தில் முறையிட்டன. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா படம் இருப்பது தவறில்லை என்றது.
ஆனால் தமிழக அரசு காலண்டர்களில் ஜெயலலிதா படமும், ஓ.பன்னீர்செல்வம் படமும் இடம் பெற்றுள்ள காலண்டர்தான் இன்று வரையில் தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களிலும், தலைமைச் செயலகத்திலும் தொங்கவிடப்பட்டிருக்கிறது என்பது வேறு விசயம். இந்நிலையில், ஜெயலலிதா படம் பதித்த டைல்ஸ்களை அரசு வீடுகளில் ஒட்ட முடியாது. வெளியில் கொட்டவும் முடியாது என்பதால், இந்த டைல்ஸ்களை என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதையடுத்து, இந்த டைல்ஸ்களை கொள்முதல் செய்த ராஜஸ்தான் மாநிலத்துக்கே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநில மக்கள் இதை மலிவான விலையில் வாங்கி சமையல் அறைகளிலும், பாத்ரூம்களிலும் பதித்து வருகிறார்கள். குறிப்பாக, ஜெய்சால்மர் பகுதியில் உணவு விடுதி சமையல் அறையில் பதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு சப்ளை செய்வதற்காக ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்ட டைல்ஸ்களும் அதிகமாக ஸ்டாக் இருக்கிறதாம்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக