வியாழன், 2 மார்ச், 2017

இந்திய வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு பதிலாக இனி சீனா செல்வார்கள் ?

இந்திய மாணவர்களுக்கு குறிப்பாக பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கணிதம் பயின்றவர்களுக்கு, அமெரிக்கா செல்வது வாடிக்கையாகி வெகு காலமாகிறது. உயர்கல்விக்காக செல்லும் அவர்கள் பின்னர் அங்கேயே பணியில் அமர்த்தப்பட்டு தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்க குடிமகனாக ஆவது ஒரு தொடர்கதை. இப்படி போவது அவர்களது கனவு என்பது ஒருபுறம். கிடைக்கும் கல்வியின் தரம் மறுபுறம். இதனால் தான் அமெரிக்க பலகலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பெரும் எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் இருந்து வருகின்றனர். சொல்லப்போனால் வருடாவருடம் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

கடந்த 20 வருடங்களாகவே அமெரிக்க தொழில் உற்பத்தித்துறை பலத்த சரிவை சந்தித்து வருகிறது. கார் உற்பத்தியின் மையமாக விளங்கிய டெட்ராய்ட் போன்ற நகரங்களில் இருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. அங்கிருக்கும் தொழிலாளர்களின் கூலி மட்டம் உயர்வாக இருப்பதும் அதே பொருளை ஆசிய நாடுகளில் மிகக்குறைந்த கூலிக்கு தயாரிக்க இயலுவதும் இதற்கு காரணமாகும். தென் கிழக்கு ஆசிய நாடுகளும், ஜப்பானும், சீனமும் வளர்ந்ததற்கு இதுவே இன்றியமையாத காரணியாகும். இப்படியாகத்தான் 1990களுக்குப் பிறகு சீனம் உலகத்தின் தொழிற்சாலையாக மாறி பெரும் செல்வத்தை சேர்த்தது. அதீத வளர்ச்சியையும் கண்டது.

தொழில்துறை சார்ந்த உற்பத்தி, அதன் வளர்ச்சி, அதன் விளைவாக பெருகும் செல்வம் என்ற சங்கிலித் தொடர் நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் சாத்தியமாகுமா? என்ற கேள்வி உலக அளவில் பல பொருளாதார அறிஞர்களிடம் எழுந்துள்ளது. இதற்கு அடிப்படையாக இருப்பது தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே. கூலி மட்டம் உயர்வாக இருந்ததால்தான் முதல் உலக நாடுகளில் இருந்து உற்பத்தி பெருமளவில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் பெயர்ந்தது. ஆனால் தொழில்நுட்ப மாற்றத்தினால் இயந்திரங்கள் மனிதன் செய்யும் பல பணிகளை ஆற்றும் திறனுடன் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மோட்டார் கார் வாகன உற்பத்தியை எடுத்துக் கொள்வோம். ஏற்கனவே பல வேலைகள் ரோபோக்கள் வாயிலாக செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த ரோபோக்களின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு உயர்ந்துகொண்டே வருகின்றன. வெல்டிங் செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள ரோபோக்கள் மனித ஆற்றலே தேவையில்லாமல் செய்துவிட்டது. இது போன்று பல உற்பத்தியின் கண்ணிகளும் விரைவாக இயந்திரமயமாக்கப்படுகின்றன. இதன் விளைவாக, தொழிலாளர்களுக்கான கூலி என்பது உற்பத்தி செலவில் ஒரு காரணியாகவே இல்லாமல் போய்விடும். அப்போது முதல் உலக நாடுகள் தங்களுக்கு தேவையான பொருட்களை தங்கள் நாடுகளிலேயே ரோபோக்கள் உதவியுடன் செய்துகொள்ள முடியும். இத்தகைய தொழிற்சாலைகளை தொடங்க முதலீடுகள் அதிகம் தேவை என்றபோதிலும் வளர்ந்த நாடுகளிடம் அதற்கான செல்வம் உள்ளது. இதனால்தான் மேக் – இன் இந்தியா என்ற திட்டம் கானல் நீரோ என்ற ஐயம் தோன்றுகிறது.
சீனம் உலகத்திற்கான தொழிற்சாலையாக உருவெடுத்து பெரும் செல்வத்தை குவித்தது. ஆனால் நாம் மேலே கண்ட மாற்றங்கள் அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இச்சூழலில் தனது எதிர் காலத்தை மாற்றியமைக்க சீனம் திட்டமிடுகிறது. ஒரு உற்பத்தி நாடு என்ற நிலையில் இருந்து தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் சார்ந்த வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. அமெரிக்கா தனது உற்பத்தி அடித்தளத்தை இழந்தபோதிலும் தொழில்நுட்பம் வாயிலாக பெறும் செல்வத்தை இன்று வரை ஈட்டி வருகிறது. எடுத்துக்காட்டாக I – Phone. ஐபோனை வடிவமைப்பது ஆப்பிள் கம்பெனி. ஆனால் அதனை உற்பத்தி செய்வது சீனக் கம்பெனிகள். அவற்றை விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுவது மீண்டும் ஆப்பிள் கம்பெனியே. ஆக தொழில்நுட்பம் அமெரிக்கா வசம்தான். இதே போன்றதுதான் செல்போனில் உள்ள chip-களும். உற்பத்தி சீனா, தைவான் போன்ற நாடுகளில்; ஆனால் ஆராய்ச்சி, வடிவமைப்பு ஆகியவை குவால்காம் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் வசம்தான் இன்றளவும் உள்ளன. இதுதான் எதிர்காலம் என சீனம் உறுதியாக நம்புகிறது. ஆகவே அதற்கான முன்னெடுப்புகளில் அது ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே இந்தியர்களுக்கு இணையாகவோ அல்லது அதைவிடவும் கூடுதலாகவோ சீனர்கள் மேல் நாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்றும் பணியாற்றியும் வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டிற்கு ஈர்ப்பதுடன் இவ்வாறு உயர்கல்வி பெற்ற இந்தியர்களையும் ஈர்க்க வேண்டும் என்று சீனம் எண்ணத் துவங்கிவிட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியேற்ற மற்றும் வேலை சார்ந்த விசாக்களுக்கு கடுமையான விதிமுறைகளை கொண்டு வருவதும் வெள்ளையின தீவிரவாதம் தலைதூக்குவதும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்கா செல்வதைக் குறைக்கலாம். சீனம் அமெரிக்கா அளவுக்கு சம்பளமும் வசதியும் செய்து கொடுத்தால் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் சீனம் சென்று பணியாற்றலாம். சீனம் அடுத்த அமெரிக்கா ஆகலாம்.
ஆசிரியர் குறிப்பு:
ஜெ.ஜெயரஞ்சன்
பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராக பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதார பிரச்னைகள் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன.   மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக