திங்கள், 27 மார்ச், 2017

நானே வாரிசுகள் ஒருபுறம்.. தமிழ்த்தாயின் அவலம் பாரீர் ?


மக்கள் பணி எதுவும்  ஆற்றிடாமல், திடீர் திடீரென்று முளைத்து, ‘நானே வாரிசு‘ என,  அரசியலைப் பாடாய்ப் படுத்தும் காமெடி ஒரு புறம் நடக்கிறது. இன்னொரு புறமோ,    போற்றுதலுக்கு உரியவர்களின் வாரிசுகள் அலைக்கழிக்கப்பட்டு வரும் கொடுமையும் நடந்த வண்ணம் இருக்கிறது."நீராரும் கடலுடுத்த'…எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அறியாதவர்கள் கிடையாது. தனது படைப்பான  மனோன்மணீயம் என்னும் கவிதை நாடக நூலில் வரும் இந்தப் பாடலை எழுதியவர் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை.  1970-இல், இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக கலைஞர் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. அதுவே பாடநூல்களிலும் இடம் பெற்றது. ஆண்டுகளே வாழ்ந்த சுந்தரனார், தத்துவப் பேராசிரியராக, கல்லூரி முதல்வராக, வரலாற்று ஆராய்ச்சி அறிஞராகத் திகழ்ந்தவர். திருநெல்வேலி பூர்விகம் என்றாலும்,  கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்தவர் சுந்தரம் பிள்ளை.  திராவிட இன ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், தென்னிந்தியாவில் திராவிட இன உணர்வுக்கும் வித்திட்டார்.தன்னுள் பொதிந்திருந்த திராவிட உணர்வு குறித்து சுந்தரனாரே வெளிப்படுத்திய சம்பவம் இது :‘1982-இல், தான் மேற்கொண்ட ஆன்மீகப் பயணத்தின் போது, என் வீட்டுக்கு விருந்தினராக வந்தார் விவேகானந்தர்.  விருந்துக்குப் பிறகு, பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, எதிர்பாராத வகையில், என்னைப் பார்த்து, “தங்களின் கோத்திரம் என்ன?” என்று கேட்டார் விவேகானந்தர். நான் ஒரு நிமிடம் அமைதி காத்தேன். வேறு யாரேனும் இது போன்ற வினாவினை எழுப்பியிருந்தால், நான் வெகுண்டிருப்பேன். விருந்துக்கு வந்த உத்தம நண்பர் என்பதால், அவரிடம் மெல்லிய குரலில், ‘எனக்கும் கோத்திரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன்.’ என, ஆத்திரமின்றி, விவேகானந்தரின் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.’ என்று தனது குறிப்பு புத்தகத்தில் எழுதியிருக்கிறார் சுந்தரம் பிள்ளை.


பழந்தமிழ் இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் ஆராய்ந்த சுந்தரனார் தமிழ்ச் சான்றோர் என்பதால், அவர் பெயரில்,  1990-இல் திமுக ஆட்சியின் போது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து தென் பகுதிக் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவானது.




அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர் சுந்தரனார். அவரது வாரிசுகளின் கோரிக்கை,   கடந்த 50 ஆண்டுகளாக கேரள அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை. இத்தனை அலட்சியம் ஏன்? வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டுவோம்!

1879-இல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசியராகப் பணியாற்றினார் சுந்தரனார். 1888-இல் வெளிவந்தது இவர் முதலில் எழுதிய நூற்றொகை விளக்கம். இந்த நூலில், இவ்வுலக வாழ்க்கைக்கு ஏற்றவாறு மனித அறிவு வளர, கணிதம், இரசாயணம், உயிரியல் உளநூல், வானவியல், சோதிடம், புவியியல், இலக்கணம், அறம், சிற்பம், கடற்பயணம், போர்க்கலை, மருத்துவம் என, பல்வேறு துறைகள் குறித்து, அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த சொற்களைக் கொண்டு விளக்குகிறார். அந்தக் காலத்தில் வளர்ச்சி பெற்ற அறிவியல் துறைகளைப் பற்றிய விளக்கங்களைத் தொகுத்து, வகுத்து தருவதில் இது முன்னோடி நூலாக விளங்குகிறது. இந்த நூலில் பல புதிய கலைச்சொற்களை சுந்தரனார் கையாண்டிருக்கிறார்.

1885-இல் திருவனந்தபுரத்தில் சைவப் பிரகாச சபையை தோற்றுவித்தார் சுந்தரனார். இந்தச் சபை,  தமிழ் மொழி, கலை, பண்பாட்டினைப் போற்றி வளர்த்தது. மேலும் இச்சபையின் மூலம் தமிழ்ப்பயிற்சி வகுப்புக்களும் நடத்தப்பட்டன. 1891-இல் மனோன்மணீயம் என்னும் நாடகக் காப்பியத்தைப் படைத்தார்.  திருவனந்தபுரத்தின் பூர்வீக அரசியல் வரலாறுகளை ஆராய்ந்து, ‘திருவிதாங்கூர் பண்டை மன்னர்கள் வரலாறு’ என்ற ஆய்வு நூலையும் எழுதினார்.  1896-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு கல்வெட்டுத் துறையைத் தொடங்கியது. அரசுக் கல்வெட்டுத் துறையின் மதிப்புறு தொல்லியல் ஆய்வாளராக நியமிக்கப்பட்ட சுந்தரனார், திருவிதாங்கூரில் பல பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களை ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். சுந்தரனாரின் திறமையை நன்கறிந்த மகாராஜா, தன் அரண்மனையில் ‘பிறவகை சிரஸ்ததார்’ என்னும் உயரிய பதவியை வழங்கி சிறப்பித்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசவைப் பேராசிரியராகவும் இருந்த சுந்தரனாருக்கு, 1892-இல் திருவனந்தபுரம் பேரூர்கடை பகுதியில், 90 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியது அந்த சமஸ்தானம். அங்கு ஒரு மாளிகையை எழுப்பிய சுந்தரனார், தனது பேராசிரியரான ஹார்வேயின் பெயரை வைத்தார். அங்கு, தனது சைவ, இலக்கியப் பணிகளை மேற்கொண்டார்.

மனோன்மணீயம் சுந்தரனாரின் ஒரே வாரிசுதான் பி.எஸ்.நடராஜ பிள்ளை. ஹார்வே இல்லத்தில் வசித்து வந்தார். தன் தந்தையின் சொத்தான 90 ஏக்கர் நிலத்தில், வீடு இருந்த 12 எக்கர் நிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதி இடங்களை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுத்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் காங்கிரஸ் தலைவர் ஆவார். 1916-இல் மன்னராட்சி மக்களை இம்சித்த போது, சமஸ்தானத்துக்கு எதிராக தொடர்ந்து போராடினார் நடராஜ பிள்ளை. தங்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்த நடராஜ பிள்ளையை ஒடுக்குவதற்கு திட்டம் வகுத்தார் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சி.பி.ராமசாமி ஐயர்.  விவசாயத்துக்காக வேண்டும் என, ஹார்வே இல்லத்தையும், அதனைச் சுற்றியுள்ள இடத்தையும், நடராஜ பிள்ளையின் விருப்பத்துக்கு மாறாக கையகப்படுத்தி, சமஸ்தானத்தின் சொத்தாக்கி விட்டார்.

சமஸ்தானம் கையகப்படுத்திய போது, உடல் நலன் பாதிக்கப்பட்டு, ஹார்வே இல்லத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தார் நடராஜ பிள்ளை.  வலுக்கட்டாயமாக அவரைத் தூக்கி, ஒரு ஓலைக் குடிசையில் அனாதையைப் போல் போட்டனர். வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த நிலையிலும், மக்களுக்காக முன்னெடுத்த போராட்டத்தை அவர் கை விடவில்லை. அதனால், சிறைவாசமும் அனுபவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து, திருகொச்சி சமஸ்தானத்தின் பட்டம் தாணுபிள்ளை அமைச்சரவையில் நிதியமைச்சர் ஆனார்.  ஆறு முறை எம்.எல்.ஏ.வாகவும், அதில் 2 முறை அமைச்சராகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்தார். ஆனாலும், சட்டத்துக்குப் புறம்பாக தன்னிடம் இருந்து பறித்த நிலத்தையும், வீட்டையும் மீட்பதற்கான நடவடிக்கைகளில் அவர் இறங்கவில்லை. 

1957-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  ஈ.எம்.ஸ்.நம்பூதிரிபாடு கேரள முதல்வராக இருந்தார். அப்போது, நடராஜ பிள்ளையின் நிலத்தை, கம்யூனிஸ்ட்காரரான நாராயண நாயருக்கு, சட்டக் கல்லூரி கட்டுவதற்காக தாரை வார்த்துக் கொடுத்தனர். 9 மகள்கள், 3 மகன்கள் என, நடராஜ பிள்ளையின் வாரிசுகள் மொத்தம் 12 பேர்.

1968-இல் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டிடம், ஹார்வே மாளிகையைத் திரும்பத் தருமாறு நடராஜ பிள்ளையின்  குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். நம்பூதிரிபாடும் அதனை ஏற்றுக் கொண்டார். ஆனாலும், 1970-இல் கருணாகரன் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசு, நாரயண நாயர் குடும்பத்தினருக்கு அந்த நிலத்தைப் பட்டா போட்டுக் கொடுத்தது.  50 ஆண்டுகள் ஆகியும், சுந்தரனார் வாரிசுகளின் கோரிக்கை கிடப்பிலேயே கிடக்கிறது.

திருவனந்தபுரம் சைவ பிரகாச சபையின் தலைவர் கே.ரவீந்திரன். “நடராஜ பிள்ளையின் வாரிசுகளில் பலருக்குச் சொந்த வீடு கூட இல்லை. சிலர் வறுமையில் வாடுகின்றனர். அதனால்தான், கையகப்படுத்திய  ஹார்வே மாளிகையையும், நிலத்தையும் மனோன்மணீயம் சுந்தரனாரின் வாரிசுகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விடுத்திருக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது.” என்றார் வேதனையுடன்.

நடராஜ பிள்ளையின் பேரன் டாக்டர் எஸ்.மோதிலால் நேருவோ “ஹார்வே மாளிகையை தேசிய அளவிலான ஒரு நினைவுச் சின்னமாக ஆக்க வேண்டும். அதற்கான முயற்சியில் கேரள அரசு ஈடுபட வேண்டும்.” என,  தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘தேன் போன்று தமிழை வளர்க்கப் பிறந்தவன்! செந்தமிழுக்கு உழைத்தே இறந்தவன்!’ என, சுந்தரனாரைப் போற்றுகிறார் பாவேந்தர். ஆங்கில அரசும் கூட சுந்தரனாரின் வரலாற்றுப் புலமையை உணர்ந்து கவுரவித்தது. அவரது வாரிசுகளின் கோரிக்கை நியாயமானதே!  இனியும் காலம் தாழ்த்தாமல், கேரள அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

-சி.என்.இராமகிருஷ்ணன், மணிகண்டன்  nakkeeran 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக