வெள்ளி, 31 மார்ச், 2017

விவசாயிகளுக்கு ஆதரவு : ஸ்டாலின் டெல்லி பயணம்!


டெல்லியில் நடைபெறும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று 31 ஆம் தேதி வியாழன்கிழமை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
விவசாயிகள் தற்கொலைக்கு நஷ்ட ஈடு, கடன் தள்ளுபடி, காவிரி மேலாணமை வாரியம், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 14ஆம் தேதி டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கிய போராட்டம் 17ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களும், வடமாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்களை சந்தித்து தங்கள் கோரிக்கையை வைத்த விவசாய பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள் தகுந்த வாக்குறுதிகளை வழங்க முன்வராததால் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர். இன்று மார்ச் 31ஆம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் விவசாய பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் தீவிரமாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார், டெல்லி செல்லும் அவர், நாளை விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு, மத்திய பெட்ரோலியத்துறை துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து விவசாயிகள் பிரச்சினை குறித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் விரிவாக பேசவுள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக