வெள்ளி, 31 மார்ச், 2017

தமிழக விவசாயிகளின் 18ஆம் நாள் யுத்தம்! டெல்லி ஜந்தர் மந்தரில் கனிமொழி !


தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து 18வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்ந்தன. அதனால், மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், ராதாமோகன் சிங் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. மத்திய அரசு, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என, இன்று மார்ச் 31 வெள்ளிக்கிழமை 18ஆம் நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு, திமுக எம்.பி., திருச்சி சிவா, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மார்ச் 31 வெள்ளிக்கிழமை 18ஆம் நாள் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு திமுக எம்.பி., கனிமொழி ஜந்தர் மந்தர் பகுதிக்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘விவசாயிகளின் இந்தப் போராட்டம் தமிழக விவசாயிகளுக்கு மட்டுமானது இல்லை. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான போராட்டம். மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் கோரும் வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன்’ என்று கூறினார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 29ஆம் தேதியில் இருந்தே தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சமூக ஊடகங்களின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை மெரினா, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டத்தை தடுக்கும்வகையில்,போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அதையும் மீறி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் செய்ததால் கைது செய்யப்பட்டனர். இதனால், மாணவர்களின் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று மார்ச் 31, வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டக் கல்லூரி வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணிப்பதாகத் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்தனர். மேலும் கோவையில் போராட்டம் நடத்த மாணவர்கள் திரளக்கூடும் என்பதால், ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த வ.உ.சி. மைதானத்தில் போலீஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக