வெள்ளி, 31 மார்ச், 2017

மைல் கற்களில் இந்தி! எதிர்ப்பு முனை மழுங்கி விடவில்லை ... ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ் மொழியை மட்டம் தட்டும் உணர்வில் செயல்பட்டால் பா.ஜனதா அரசு புதிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சந்திக்கவேண்டியது இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து உருவாக்கும் விதத்தில் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தமிழகத்தில் உள்ள வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய நெடுஞ்சாலை 75, 77 ஆகிய முக்கிய சாலைகளின் வழியாக உள்ள மைல் கற்களில் இப்படி எழுதி, இந்தி ஆதிக்கத்தை கொல்லைப்புற வழியாகத் தமிழகத்திற்குள் கொண்டுவர துடிப்பது தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத பா.ஜனதாவின் எண்ண ஓட்டத்தை காட்டுகிறது.
மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்ததில் இருந்தே சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பில் தீவிர அக்கறை காட்டி வருகிறது. அவ்வப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்திய பா.ஜனதா அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்து வந்திருக்கிறார். 1938–ம் ஆண்டில் இந்தியை கட்டாய பாடமாக்கியபோது தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போரின் முதல் களம் அமைந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு களங்களை கடந்து, 1965–ம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச்சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்தபோது தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கிளர்ச்சி சரித்திரத்தின் ரத்த எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியாம் எங்கள் தமிழ் காக்க, தங்கள் இன்னுயிரை நீத்தவர்களுக்கு இன்றுவரை மொழிப்போர் தியாகிகள் தினத்தை கொண்டாடி, அவர்களின் உன்னத போராட்ட உணர்வுகளை இன்றைய இளைஞர்கள் மத்தியில் தி.மு.க. உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஆகவே ‘‘இந்தி திணிப்பு’’ எதிர்ப்பு இன்னும் தமிழகத்தில் முனைமழுங்கி போகவில்லை என்பதை பா.ஜனதா அரசு உணர வேண்டும்.
பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு அளித்த ‘‘இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையிலும் ஆங்கிலம் நீடிக்கும்’’ என்ற உறுதிமொழியை மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு புறக்கணித்து தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபடுவதை உடனே கைவிட்டு, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தியை எழுதுவதை நிறுத்தவேண்டும்.
அது மட்டுமின்றி, இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காப்பாற்றும் வகையில் அரசியல் சட்டம் 8–வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாக பாவிக்க முன்வரவேண்டும். இந்தி மொழிக்கு மட்டும் மகுடம் சூட்டுவோம் மற்ற மொழிகளை, குறிப்பாக தமிழ் மொழியை மட்டம் தட்டுவோம் என்ற உணர்வில் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு செயல்படுமேயானால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டகளத்தை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக