வியாழன், 2 மார்ச், 2017

ஜெ.மரணத்தில் மர்மம், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்' பி.ஹெச். பாண்டியன் !

vikatan :
பி ஹெச் பாண்டியன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் புதைந்துள்ளன என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகிறார்கள் ஓ.பி.எஸ். அணியினர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது அ.தி.மு.க.வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் பி.ஹெச்.பாண்டியன்.அப்போது அவர் கூறுகையில்,"ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன என்று நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம்.அதன் தொடர்ச்சியாக அதிமுக எம்பிக்கள் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துஉள்ளோம்.
அதில்,ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.அதற்கு அடுத்த நிகழ்வாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.தலைமையில் அ.தி.மு.க.வினர் தமிழ் நாடு முழுவதும் ஜெயலலிதா மரணத்திற்கு நீதிவிசாரணை கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்.இந்த இரண்டையும் கேட்டவுடன் எனக்கு எழுந்த 5 கேள்விகளை மத்திய அரசானாலும்,மாநில அரசானாலும்,அப்போலா மருத்துவமனை ஆனாலும் இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டும் என்ற ஆசையோடு இங்கு வந்துள்ளேன்.
நம்முடைய மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டிலேயே கீழே தள்ளி விடப்பட்டு,அங்கே இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டார் என்று அப்போலோ மருத்துவமனையின் 'டிஸ்சார்ஜ் சம்மரி' கூறுகிறது.அவர் அப்போலோ கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு,ஆம்புலன்ஸ் வேனுக்காக 1066 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஆம்புலன்ஸ் வேன் அனுப்புங்கள் என்று ஒருவர் கேட்கின்றார்.அவர் ஒரு டி.எஸ்.பி. ஆவார்.அவர் பெயர் என்ன என்று எங்களுக்கு தெரியாது.அந்த நாளில் நடந்தது என்ன,யார் யார் ஜெயலலிதாவுடன் அப்போலோவுக்கு வந்தது.எத்தனை மணிக்கு வந்தார்கள் என்று தெரிந்துகொள்ளவே நாங்கள் இதைக்  கேட்கிறோம்.
அதன் பிறகு அப்போலோ மருத்துவமனைக்கு அவர்கள் எத்தனை மணிக்கு வந்தனர்.அதனுடைய சிசிடிவி படங்கள் பதிவுகளை வெளியிடவேண்டும்.அப்போலோ,போயஸ் கார்டன் இரண்டு இடத்திலும் உள்ள சிசிடிவி பதிவுகளை வெளியிடவேண்டும்.அவற்றை வெளியிட்டால்தான் உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடியும்.அதற்குப் பிறகு நாங்கள் கேள்விப்பட்டது அப்போலோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமராக்கள் ஜெயலலிதா வந்தபிறகு அகற்றப்படுகிறது.அதற்கு உத்தரவு போட்டது யார்?.
இதைவிட இன்னும் முக்கியம்,2016 ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த பிரபல டாக்டர் சாந்தாராம்,ஜெயலலிதாவிடம்,நீங்கள் இங்கே(இல்லத்தில்) பெறுகின்ற சிகிச்சை ஒரு 'ஸ்ட்ரோக்கை' உங்களுக்கு வரவைக்கும் என்று கூறியுள்ளார்.அதனையடுத்து,அடுத்த நாள் முதல் டாக்டர் சாந்தாராம் போயஸ் கார்டன் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அவரை வெளியேற்றிவிட்டார்கள்.இதற்கும் பதில் சொல்ல  வேண்டும்.
அப்போலோ மருத்துவமனை,சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. செய்துள்ளது.அதில்,ஜெயலலிதாவின் உயிரை எடுப்பதற்கு சிகிச்சையை நிறுத்திட அனுமதியளித்தது யார்,இந்த நிலை எங்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.ஜெயலலிதாவின் முடிவை நிர்ணயித்த சக்தி யார். இதை குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர் இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு அதிகாரம் உண்டா.என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.
மத்திய அரசிடம் நாங்கள் ஒன்று கேட்க விரும்புகிறோம்.2015ம் ஆண்டில் மே,ஜூன் மாதங்களில் மத்திய அரசு 'கான்பிடன்சியல் லெட்டர்' அனுப்பியது.அதில், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்-ஐ ஜெயலலிதா சிகிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் எலிசபெத் ஹாஸ்பிடலுக்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்து இறங்கியது.ஜெயலலிதாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல அனுமதிக்காதது யார்?.அந்த முடிவை எடுத்தது யார்?.எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக இருக்கிறது.அப்போலோ வெளியிட்ட மருத்துவ அறிக்கையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.எய்ம்ஸ் அறிக்கை இன்னமும் வெளிவரவில்லை."
என்.எஸ்.ஜி.பாதுகாப்பு இல்லாமல் இருந்து இருக்கிறார் ஜெயலலிதா.அவர்களுக்கு வெளியே செல்ல உத்தரவு இட்டது யார்.மத்திய அரசின் சட்டப்படி என்.எஸ்.ஜி.வீரர்கள் கோழையாக ஓடினாலோ,அல்லது யாரைப் பாதுகாக்கிறார்களோ அவர்களை பாதுகாக்க தவறினாலோ அவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.ஆனால் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு வழங்கியதில் ஏன் இத்தனை மர்மங்கள்.நான் குற்றவாளிகளையே நெருங்கிவிட்டேன்.ஆனால் இப்போது எல்லாவற்றையும் நான் கூறிவிடமுடியாது" என்றார் அவர்.
                  பி ஹெச் பாண்டியன்
அவரையடுத்து பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் கூறுகையில்,"நான் என்ன சாப்பிடவேண்டும் என்பதை அறிந்து எனக்கு உணவளித்த ஜெயலலிதாவின் வீட்டுச் சாப்பாட்டை உண்டவன் என்ற முறையில்,ஒரு சில கேள்விகளை நான் கேட்க விரும்புகிறேன்.ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது அவருக்குப் பலவிதமான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன.அதற்கு எல்லாம் அனுமதிகொடுத்தது யார்.மேலும்,இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள அவருக்கு கொடுக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் சோதிக்கப்பட்ட பிறகே கொடுக்கப்படவேண்டும்.அப்படி கொடுக்கப்பட்ட உணவுகள் சோதனை அறிக்கைகளை வெளியிடவேண்டும்.
நவம்பர் 2ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை வெளிநாட்டு டாக்டர்களான ரிச்சர்ட் பீலே,சிங்கப்பூர் மருத்துவர்கள் ஏன் வரவில்லை.அதன் காரணம் என்ன?சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் தமிழ் தெரியாது. அருகில் இருந்தவர்களுக்கோ ஆங்கிலம் தெரியாது.தமிழ்தான் தெரியும்.அந்தச்சூழ் நிலையில் உண்மை நிலையை அறிந்து அனுமதி கொடுத்தது யார்?.ஜெயலலிதாவின் கன்னத்தில் 4 ஓட்டைகள் இருந்தன. அதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கம்,பிளாஸ்டர் ஒட்டப்பட்டு அதனால் 'ஸ்கின் பீலிங்' ஏற்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.ஆனால் எம்பாமிங் செய்த மருத்துவரோ அதனை நான் பார்க்கவில்லை என்று சொன்னார்.இன்று வரை என்ன காரணம் அதற்கு என்று யாரும் சொல்லவில்லை.
இசட் பிரிவு மெயின்டெய்ன் செய்த லாக் புக்கில் உள்ள விவரங்களை அரசு வெளியிடவேண்டும்.குடும்ப உறுப்பினர் அல்லாதவர் என்று அப்போலோ மருத்துவமனையில்  கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் எவை. என்ன ஆதாரங்கள் என்று வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல்கள் வந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கைவிரலையெடுத்து கைநாட்டு வைக்கப்பட்டுள்ளது.அப்போது அங்கு இருந்த பாலாஜி விசாரிக்கப்படவேண்டும்.அப்போதுதான் மேற்கொண்டு ஜெயலலிதாவின் கைவிரலைக் கொண்டு என்னென்ன விஷயத்துக்காக கைநாட்டுகள் வாங்கப்பட்டன என்று தெரியும்." என்று தெரிவித்தார்.    
- சி.தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக