செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

P.H.பாண்டியன்:போயஸ் இல்லத்தில் மயங்கி விழுந்த ஜெயலலிதாவை யாரும் தூக்கிவிடவில்லை”

jaya-5thetimestamil: முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதிக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணாநாகரில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஹெச்.பாண்டியன், “உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டன் இல்லத்தில் வாக்குவாதம் நடந்ததாகவும் அப்போது கீழே விழுந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை யாரும் தூக்கிவிடவில்லை என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு செல்லப்படும்போதே மயக்கமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரைப் பார்க்க எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. அவரைப் பார்க்க சென்றபோது மெய்க்காப்பாளர்கள் தான் முதலமைச்சர் நலமாக இருக்கிறார், அவர் உணவு எடுத்துக் கொள்கிறார் என்று ஒரே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறினர்.
ஜெயலலிதா இறந்ததாக தகவல் தெரிந்த உடன், அவரது உடலைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டேன். எம்பாமிங் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகும் என்று அப்பல்லோ மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், 15 நிமிடங்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டதாக தற்போது மருத்துவர் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா கவலைக்கிடமாக இருப்பதாக சொன்னபோது சசிகலா மற்றும் அமைச்சர்களிடம் ஒருசொட்டுக் கண்ணீரில்லை. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர் ராஜாஜி ஹாலில் அவரது உடலைச் சுற்றி நின்று கொண்டிருந்தது அதிர்ச்சியை அளித்தது. முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வந்த இடைத்தேர்தல் பணிகளுக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அமைச்சர்களிடம் பதிலில்லை. கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் இணைந்தவர். தமிழகத்தின் முதலமைச்சராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் பதவி வகிக்க தகுதி இல்லாதவர் சசிகலா” என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக