வியாழன், 23 பிப்ரவரி, 2017

ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி :அதிமுக தலைவர் (Defacto) டி.டி.வி.தினகரன்!

சட்டமன்றத்தில் கலவரம் செய்து ஆட்சியைக் கலைக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக  பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றதையடுத்து, கட்சியின் துணை பொதுச்செயலாளராக அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை நியமித்தார். அதையொட்டி, டி.டி.வி.தினகரன் இன்று அதிமுக தலைமைக் கழகத்துக்கு பகல் 12 மணிக்கு வந்தபோது அவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர்.
பின்னர் அவர், தனது அறைக்குச் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு அவைத் தலைவர் செங்கோட்டையன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஜெயக்குமார், காமராஜ், திருத்தணி அரி எம்.பி., வேணுகோபால் எம்.பி., மற்றும் மாவட்டச் செயலாளர் கலைராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், கமலகண்ணன், திருச்சி மனோகரன் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதிமுக பதவியில் பொறுப்பேற்றதும் பால்கனியில் வந்து கீழே திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். அதன்பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘ஜெயலலிதா கூறியதால்தான் கட்சியை விட்டு ஒதுங்கியிருந்தேன். கட்சியின் விதிமுறைப்படிதான் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கணக்கு விவரங்களை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கவனித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு அதிமுக என்ற எஃகு கோட்டையை பாதிக்காது. கட்சி, ஆட்சியில் தனிநபர், குடும்பம் என்ற ஆதிக்கம் இருக்காது. சட்டமன்றத்தில் கலவரம் செய்து ஆட்சியைக் கலைக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். அது நடக்கவில்லை. தோல்வியின் விரக்தியில் அவர் செயல்படுகிறார். மக்கள் அதிமுக மீது கோபமாக இருப்பதாகச் சொல்வது பொய்ப் பிரச்சாரம். திமுக-வினர் மக்கள் என்ற போர்வையில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். 2021இல் மீண்டும் அதிமுக-வே ஆட்சியைப் பிடிக்கும். ஓ.பி.எஸ். என்பது ஒரு அணி அல்ல. அதுவொரு சிறு குழுதான். தாய் கழகத்திலிருந்து பிரிந்துசென்றவர்கள் மீண்டும் வந்தால் தாய் மனதோடு ஏற்றுக்கொள்வோம்’ என்று கூறினார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக