செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம்: போராடும் மக்கள்! மீதேனும் இதுவும் ஒண்ணு.. மத்தியரசு போடும் மண்ணு !


மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தவிருக்கும் கிராமங்களில் போராட்டக் குழு உருவாக்கப்பட்டு மக்கள் விளைநிலங்களில் இருந்தபடி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்தியா முழுவதும் 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் திட்டம் வகுத்துள்ளது. இதுவரை ஹைட்ரோ கார்பனை அதிக விலை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது . இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் இந்தியாவிலே கிடைப்பதை நீண்ட கால ஆய்வின் மூலம் உறுதி செய்தது மத்திய அரசு. இந்நிலையில்தான் தற்போது தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஹைட்ரோ கார்பனை எடுக்கத் தீவிரம் காட்டி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் மட்டுமின்றி, வடகாடு, கரம்பக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதையறிந்த மக்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். இதற்கு இந்தப் பகுதி மக்கள் கூறும் காரணம், “ நெடுவாசல், வடகாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் செழிப்பான விவசாய நிலங்களைக் கொண்டது. இங்கு விளையாத பயிர்கள் இல்லை. நெல், கரும்பு, சோளம், கடலை, எள், தானியப் பயிர்கள், காய்கறிகள், பழமரங்கள் முதல் மிளகு வரை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கே ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால் இந்த பகுதி மண்வளம் அழிந்து விவசாய நிலங்கள் அடியோடு பாதிக்கப்படும். நாங்கள் எக்காரணம் கொண்டும் இங்கே ஹைட்ரோ கார்பனை எடுக்க விடமாட்டோம்.
ஹைட்ரோ கார்பன் என்பது மீத்தேனின் மறுபெயர். மீத்தேன் என்றால் எதிர்ப்பு வருகிறது என்பதை அறிந்த மத்திய அரசு பெயரை மாற்றி இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாங்கள் ஒரு போதும் இடம்தரமாட்டோம்” என்று கூறியுள்ளார்கள். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் மாணவர்கள் மத்தியிலும் தீவிரமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். வருகின்ற 23ஆம் தேதி நெடுவாசல் பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். நமது மின்னம்பலம் குழு நேரடியாக நெடுவாசல் கிராமத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு இந்த ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கட்டுரையை விரைவில் வெளியிடும். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக