செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த ஐந்து திட்டங்கள் பற்றி தலைவர்கள் கூறுவது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தன் முதலமைச்சர் பணியைத் தொடங்கியுள்ளார். பெண்களுக்கு மானியத்தில் மோட்டார் வாககம், மீனவர்களுக்கு வீட்டு வசதி, 500 டாஸ்மாக் கடை மூடல், கர்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை உயர்வு, வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை உயர்வு என அனைத்தும் மக்களைக் கவரக் கூடிய திட்டங்கள்தான். இந்த திட்டங்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள் இதோ:
அன்புமணி
இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும், உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க 50% மானியம் வழங்கப்படும், கருவுற்ற பெண்களுக்கான நிதி உதவி ரூ.18,000 ஆக உயர்த்தப்படும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான நிதி உதவி இரு மடங்காக உயர்த்தப்படும் ஆகியவை முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானவையாகும்.
எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்களால் ஏற்படும் சாதக, பாதகங்கள் ஒருபுறமிருக்க, இத்திட்டங்கள் அனைத்துமே சசிகலாவின் பினாமி அரசு மீது தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் மற்றும் கொந்தளிப்பை சரி செய்வதற்கான முயற்சியாக பார்க்கப்படும்.
அடுத்த 4 ஆண்டுகளுக்கு எந்த இடையூறுமின்றி ஊழல் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யும் போது அதை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் மக்களுக்கு வழங்கப்படும் கையூட்டாகவே இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் திராவிடக் கட்சிகளின் நாடகங்களால் ஏமாந்து, அதன் விளைவுகளை அனுபவித்துள்ள மக்கள் இன்னும் ஒரு முறை ஏமாறத் தயாராக இல்லை.
புதிய முதல்வர் பதவியேற்றதையொட்டி இந்த சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் அதை ஏற்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றபோது எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அதன்பின் கடந்த மாதம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய போது இத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்த கொள்கை அறிவிப்புகள் கூட வெளியிடப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, எடப்பாடி பழனிசாமி அரசு முறைகேடான வழியில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு மக்களின் கோபம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதிலிருந்தே இவற்றின் நோக்கங்களை புரிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் மொத்தம் 7000 மதுக்கடைகள் இருக்கும் நிலையில், அவற்றில் 500 கடைகள் மட்டுமே கடந்த ஆண்டு ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன் மூடப்பட்டன. அப்போதே படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், அதையெல்லாம் செயல்படுத்தாத தமிழக அரசு, இப்போது மேலும் 500 கடைகளை மூடுவதாக அறிவிப்பதால் பயனில்லை. இதே வேகத்தில் சென்றால் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மொத்தம் 14 ஆண்டுகள் ஆகும். அதற்குள் மதுவால் சரி செய்ய முடியாத அளவுக்கு சீரழிவுகள் ஏற்பட்டுவிடும்.
உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 2700 மதுக்கடைகளை மார்ச் 31-ஆம் தேதி மூடும் போது, அவற்றுடன் சேர்த்து மற்ற கடைகளையும் மூடி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் சரியான தீர்வு என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. மகளிருக்கான இரு சக்கர வாகனங்களின் விலை சராசரியாக ரு.50,000 என்ற அளவில் உள்ள நிலையில், அதிகபட்சமாக ரூ.20,000 மட்டுமே மானியம் வழங்கப்படும் என்பது எந்த வகையிலும் பயனளிக்காது.
பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் சென்று வரும் பெண்கள் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்பது தான் தேர்தல் வாக்குறுதியாகும். ஆனால், இப்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. அதிமுகவினருக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படுவதற்கும், மானியம் வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களை அதிமுகவினர் ஏமாற்றுவதற்கும் மட்டுமே இந்தத் திட்டம் பயன்படும். அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்திற்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்குவதாக ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்த நிலையில், வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி இரு மடங்காக உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், ஆட்சிக்காலம் முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதில்லை என்பதை அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் 85 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கும் நிலையில், அவர்களில் 55,228 இளைஞர்களுக்கு மட்டும் இந்த உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஏற்கமுடியாது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் உதவி வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.
ஊழல்கள் மற்றும் இயற்கை வளக் கொள்ளைகள் மூலம் மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்த அரசு, இதுபோன்ற ஏமாற்று அறிவிப்புகளின் மூலம் மக்களின் ஆதரவை பெற்று விட முடியாது. இந்த அரசின் மீதான மதிப்பீடு என்ன? என்பதை விரைவில் வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழக மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
முத்தரசன்
இது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ''எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று, இன்று தலைமைச் செயலகம் சென்று ஐந்து கோப்புகளில் கையழுத்திட்டுள்ளார். முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வர் அறிவித்துள்ள ஐந்து திட்டங்களில் ஒன்றான மகப்பேறு நிதி ரூ 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
முதல்வர் மேற்கொள்ள வேண்டிய 8 நடவடிக்கைகள்:
* பூரண மதுவிலக்கு கோரிவரும் நிலையில் 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார். மற்ற கடைகளையும் விரைவாக மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்திட முன் வரவேண்டும்.
* மதுபானக் கடைகளை மூடும் அதே வேளையில், அங்கு பணியாற்றிய ஊழியர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் அவர்களின் கல்வித் தகுதியை கணக்கில் கொண்டு பணியில் அமர்த்திட வேண்டும்.
* வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித் தொகை முன்பு வழங்கப்பட்டதை இரு மடங்காக உயர்த்தியிருப்பது(ரூ200-400) வரவேற்கத்தக்கது என்றாலும், இன்றைய நிலையில் இது மிகவும் குறைவான தொகை என்பது மட்டுமல்ல, இத்தொகையினைக் கொண்டு வாழ்க்கை நடத்திட இயலாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் கிராம நிர்வாகம் முதல் தலைமைச் செயலகம் வரை ஏறத்தாழ ஐந்து லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்பிட நடவடிக்கை எடுப்பதன் மூலம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
* மீனவர்களுக்கு தனி வீட்டு வசதி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ரூ 1.70 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்படும் என்று அறிவித்துள்ளது போதுமானதல்ல, குறைந்த பட்ச அடிப்படை வசதிகளுடன் வீடு கட்ட, குறைந்தபட்சம் வீட்டிற்கு ரூ.3 லட்சம் என ஒதுக்கீடு செய்திடல் வேண்டும்.
* இவை எல்லாவற்றையும் விட தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்த்து காத்திருப்பது, வரலாறு கண்டிராத வறட்சியின் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்கள் காப்பாற்றப்பட உரிய நடவடிக்கை எடுத்திடல் வேண்டும் என்பதாகும். குறிப்பாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்கிடவும், பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யவும், விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு ரூ 25 ஆயிரம் வழங்கிடவும் வேண்டும்.
* தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமுற்ற 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
* கடுமையான முறையில் நிலவி வரும் குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
* தமிழகத்தில் மிக மோசமாகி வருகின்ற பாலியல் வன்கொடுமை, கொலைகள் உள்ளிட்டவற்றைத் தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழிசை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து கூறும் போது, “தமிழக மக்கள் உங்கள் திட்டங்களை ஏற்கமாட்டார்கள். காரணம் அவர்கள் உங்கள் ஆட்சியை ஏற்கவில்லை. உங்களை முதலமைச்சராக எற்க வில்லை. நீங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற முறையை ஏற்கவில்லை. கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்களின் மனதை மாற்ற இயலாது” என்று கூறியிருக்கிறார்.
மாஃபா பாண்டியராஜன்
இது குறித்து முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் அதிமுக எம்எல்ஏவுமான மாஃபா பாண்டிய ராஜன், “நாங்கள் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களை வரவேற்கிறோம். அம்மா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்தான் இந்த திட்டங்கள். இந்த திட்டங்களுக்கு வடிவம் கொடுத்தவர் அண்ணன். ஓ. பன்னீர் செல்வம் அவர்கள். அதனால் தான் முதல்வரால் இந்த திட்டத்தில் தற்போது எளிதாக கையெழுத்திட முடிந்தது.. இந்த ஆட்சியில் அம்மாவின் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்” என்று கூறினா  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக