செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

கூவத்தூர் 'உல்லாச சிறை'யில் நடப்பதென்ன? நேரடி வர்ணனை! விடிய விடிய குடி மசாஜ் கூத்து ,, ம்ம்ம் ம்ம்

சென்னை அருகே கூவத்துாரில் உள்ள சொகுசு விடுதியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதியின் உள்ளே நடந்த நிகழ்வுகள் குறித்து, கொங்கு மண்டல எம்.எல்.ஏ., ஒருவர், மனக்குமுறலுடன் நேற்று கூறியதாவது: இப்படியொரு இழிநிலை வரும் என, நினைக்கவில்லை. அடிமைகள் போன்று ஆள்பிடித்து வாகனத்தில் அழைத்துச் சென்று, ஆடம்பர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். மனைவி, மக்களிடம் பேசக்கூட அனுமதி கிடையாது; இதை என்னவென்று சொல்வது?
'எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என்ற உத்தரவு, போயஸ் கார்டனில் இருந்து வந்தது. அதனால், 'கூட்டம் முடிந்ததும் உடனடியாக திரும்பி விடுவேன்' என, குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, பிப்., ௭ல், சென்னைக்கு காரில் வந்தேன். மறுநாள் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். கூட்டம் முடிந்ததும், அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறி, பஸ்சில் ஏற்றினர்.


'எங்களின் சொந்த காரிலேயே வருகிறோம்; இடத்தை மட்டும் சொல்லுங்கள்' என்றனர் சிலர். 'அதற்கு வாய்ப்பில்லை; எல்லாரும் பஸ்சில் ஏறுங்கள்' என்றார், அமைச்சர் ஒருவர். அவர் சொல்லியபடி பஸ்சில் ஏறினோம். எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்றெல்லாம் தெரியாது; குழப்பத்தில் ஆழ்ந்தோம். பெண் எம்.எல்.ஏ.,க்கள் அதிகம் குழம்பினர். நீண்ட துார பயணத்துக்குப் பின் கூவத்துார், சொகுசு விடுதியை அடைந்தோம்.

இதற்கு முன் நான் தங்கியதே இல்லை.


இரவு உணவு முடிந்ததும், மீண்டும் அவரவர் இருப்பிடத்துக்கு திரும்பி விடலாம் என, அப்போது நினைத்தோம். ஆனால், அழைத்துச் சென்றவர்கள் வேறு விதமான முடிவை தெரிவித்தனர். விடுதியில், எங்களுக்கான அறைகளை திறந்து காட்டினர். அப்படியொரு ஆடம்பர அறையில், இதற்கு முன் நான் தங்கியதே இல்லை.
'சாப்பிட்டதும் சென்று விடலாமே; அப்புறம் எதற்காக இந்த அறைகள்' என, சீனியர் எம்.எல்.ஏ., ஒருவர் கேட்டார். 'இங்கு தான் தங்கப்போகிறோம்' என, புன்முறுவலுடன் சொன்னார் அருகிலிருந்த அமைச்சர் ஒருவர். அவர், கார்டனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர், செல்வாக்கானவர்; மறுத்து எதுவும் கூற முடியவில்லை.'துணிமணி எடுத்து வரவில்லையே அண்ணே' என்றோம். 'அதற்கென்ன, எல்லாம் இங்கேயே இருக்கிறது' எனக் கூறி, புத்தம் புது வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகள் வழங்கினர். பெண்
எம்.எல்.ஏ.,க்களுக்கு சேலை வழங்கப்பட்டது; டெய்லர்கள் வந்து ஜாக்கெட்டிற்கு அளவெடுத்தனர்.

விடிய விடிய 'குடி'

விடுதிக்கு சென்ற நாங்கள் குளித்து முடிந்ததும், குடி விருந்து குதுாகலம் துவங்கியது. ஆடு, கோழி, மீன் என, சகலமும் தட்டில் அணிவகுத்தன. வெளிநாட்டு மது பாட்டில்கள் வந்திறங்கின. ௫௦க்கும் மேற்பட்ட, 'பார்' சிப்பந்திகள் மது பரிமாறினர். விடிய விடிய ஆட்டம், பாட்டத்துக்கு அளவில்லை. சினிமா பாடல்கள் இசைக்க, எம்.எல்.ஏ.,க்கள் பலர் குத்தாட்டம்போட்டனர்.
சிலர் போதை அதிகமாகி வாந்தி எடுத்து மயங்கி சரிந்தனர். ஈரெழுத்து 'இனிசியல்' உடைய அமைச்சர் அளவுக்கு அதிகமாக குடித்து சாய, அருகில் இருந்தவர்கள், அவரை அலேக்காக தாங்கிப் பிடித்து, அறைக்கு கூட்டிச் சென்று படுக்க வைத்தனர்.
மது போதையில் சிலர், முதல்வர் பன்னீரை திட்டித் தீர்த்தனர். மது அருந்தாத சிலர் மவுனமாக வேடிக்கை பார்த்தனர். நள்ளிரவு கடந்தும் மது விருந்து தொடர்ந்தது. மறுநாள் மதியம் தான், பலர் துாக்கத்தில் இருந்து எழுந்தனர். நான் விடுதியைச் சுற்றிப் பார்க்க கிளம்பினேன்.
நாலைந்து தனித்தனி கட்டடங்கள்; 30, 40 ஆடம்பர அறைகள். பெரும்பாலான அறைகளின் ஜன்னலை திறந்தால் கடல்பரப்பை காணமுடியும். அரை மணிநேரம் சுற்றிப் பார்த்த என்னை, 'எங்கே செல்கிறீர்கள்; என்ன வேண்டும்?' என, எதிர்பட்ட நபர்கள் விசாரித்தனர். அவர்கள் ஓட்டல் ஊழியர்களா, அடியாட்களா என, தெரியாது.

'ரிலாக்ஸ்'சுக்கு மசாஜ்


மதியம், 2:00 மணி அளவில், என் அறை கதவை திறந்த, தென் மாவட்ட எம்.எல்.ஏ., ஒருவர், 'போன் எதுவும் வேலை செய்யலையா?' என்றார். அருகில் இருந்த, 'இன்டர்காம்'மை பரிசோதித்தேன்; செத்துப்போயிருந்தது. ஆபரேட்டரை தொடர்பு கொண்டோம். 'லைன் பால்ட்; சரிபார்க்கிறோம்' என்றனர்.

மொபைல் போனில் பேச முயன்றாலும், 'நெட்வொர்க்' கிடைக்கவில்லை. விடுதி ஊழியர்களிடம் கேட்ட போது, 'இங்கு சிக்னல் சரிவர கிடைக்காது' என்றனர். விடுதி வளாகத்தில், மொபைல் போன்களை செயல் இழக்கச் செய்யும், 'ஜாமர்' கருவி பொருத்தி இருக்கின்றனரா என்றெல்லாம் தெரியாது; ஆனால், பலருக்கும் அந்த சந்தேகம் ஏற்பட்டது.
இது, எங்களுக்கு மிகுந்த கோபமூட்டியது. உடன், சீனியர் அமைச்சர் ஒருவரை சந்தித்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'எங்கள் மீது நம்பிக்கையில்லாமல் தானே இப்படி எல்லாம் செய்கிறீர்கள்.எங்களது சொந்த கார்கள், டிரைவருடன் சென்னை நகருக்குள் நிற்கின்றன. போன் செய்து அழைத்துக் கொள்கிறோம்; எங்களிடம் மொபைல் சார்ஜர்கள் போதிய அளவில் இல்லை. எங்களது டிரைவர்களுடன் வாகனங்கள் வர அனுமதியுங்கள்' என்றனர்.< 'வீண் பிரச்னை கிளப்பாதீர்கள்; இன்று மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும். 'சின்னம்மா' இங்கே வருகிறார்; அமைதியாக இருங்கள்' என்றார். விரக்தியடைந்து நாங்கள் அறைக்கு திரும்பினோம்.
சிறிது நேரத்தில், அறைக்கு வந்த விடுதி ஊழியர்கள், 'உங்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லை; உடற்பயிற்சி செய்வதற்கான, 'ஜிம்' பாயின்ட்; மசாஜ் சென்டர், விளையாட்டு மைய வசதிகளும் உள்ளன; விரும்பியபடி இருக்கலாம்' என்றனர்.

பின், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ஆயில் மசாஜ் எடுத்தனர். சிலர் டேபிள் டென்னிஸ் விளையாடினர். பெண் எம்.எல்.ஏ.,க்களோ, 'விடுதி வளாக பியூட்டி பார்லரு'க்குச் சென்றனர். எம்.எல்.ஏ.,க்கள் பலர் நோய்களுக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள். அவர்களுக்கு புகை, போதையால், உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டு விடக்கூடாது என்பதால், டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்தன. அருகில் உள்ள மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் நாளில், எங்களை குழப்பம் சூழ ஆரம்பித்தது. ஒவ்வொருவராக, ஓ.பி.எஸ்., அணிக்குப் போகும் தகவல் வந்தது. வெளியே என்ன நடக்கிறது என, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினோம். எங்களை கட்டுப்படுத்தி வைத்திருந்த அமைச்சரிடம், 'என்ன அண்ணே, இப்படியெல்லாம் நடக்கிறது' என்றோம்.
'அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்; மாலையில் சின்னம்மா, இங்கு வருகிறார்' என்றார். ஒரு கட்டத்தில், 'மேலிட உத்தரவு; இங்கிருந்து யாரும் தனியாக வெளியே போக முடியாது' என்றனர். அப்போது தான், சிலர் வாக்குவாதம் செய்தனர். 'நாங்கள் என்ன சிறை கைதியா... எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா' என்றெல்லாம், அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அதை கண்டு கொள்ளவில்லை. சிலரை, போனில் யாருடனும் பேசக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதித்தனர்.

அமைச்சர் கூறியதைப் போலவே, மாலையில் பொதுச்செயலர் சசிகலா வந்தார். 'நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம்; குழப்பமடையாதீர்கள்' என்றார். அவர் பேசி முடிந்ததும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அவருடன் உரையாடினர்; எங்களால் எதுவும் பேச முடியவில்லை.
எங்களை சிறை வைத்துள்ள சொகுசு விடுதி, சமீபத்தில் தமிழகத்தில் வருமான வரி சோதனைக்கு உள்ளாகி, கைது செய்யப்பட்ட முக்கிய பிரமுகருக்கு சொந்தமானது என, கூறப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக