புதன், 1 பிப்ரவரி, 2017

போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் – சென்னை ஆர்ப்பாட்டம் செய்தி – படங்கள் !

PP Chennai protest (16)மெரினாவில் அமைதி போராட்டத்தை கலவரமாக்கிய போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்! கைது செய்! சென்னை, குமணன்சாவடியில் 30.01.17 – மாலை 4 மணிக்கு மக்கள் அதிகாரத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிமிடம் முதல்  போலீசு தனது கெடுமிடியைத் தொடங்கியது. மக்கள் யாரையும் கூட்டத்திற்குள் அனுமதிக்கவே கூடாது என்பதிலும் கூட்டத்தை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்று டார்ச்சர் செய்வதையுமே வேலையாகக் கொண்டு இருந்தது. முன்தினம் ஆர்ப்பாட்ட இடத்தில் வைத்த இரண்டு பிளக்ஸ் பேனர்களை இரவோடு இரவோடு பிய்த்து எறிந்துவிட்டது. கொடி கட்டக்கூடாது. மேடையெல்லாம் போட கூடாது. மைக் செட் வைக்க கூடாது என எதாவது சொல்லி கொண்டேயிருந்தது.
இதை தாண்டியும் பள்ளி மாணவர்கள் போராட்டத்திற்கு வந்தனர். பள்ளி மாணவர்கள் போராட்டத்திற்கு வர கூடாது என போலீசு தடுத்தது. தோழர்கள் பேசி வர வைத்த போது, நாளைக்கு பள்ளிக்கு வா! போட்டோ எடுத்துள்ளேன், தொலைத்து விடுவேன் என்று போலீசு மிரட்டியது. எங்களிடம் உன் பாச்சாவெல்லாம் செல்லாது என உற்சாகமான மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்தது குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் என்பதால் பேருந்து நிலையத்தில் அதிகமான மக்கள் நின்று கவனித்தனர். வாகனங்களில் செல்பவர்கள் நின்று கேட்டுவிட்டு சென்றனர்.  கடை வீதி என்பதால் வியாபாரிகள், பொது மக்கள் என பலர் கவனித்தனர். போலீசு ராஜ்ஜியம்… எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்! அனைவரையும் நின்று கவனிக்க வைத்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் தலைமை தாங்கினார்.
அவர் தனது தலைமை உரையில் மெரினா கடற்கரையில் மாணவர்களின் போராட்டத்தை எப்படி அரசு ஒடுக்குகிறது என்பதுதான் முக்கியம் .போராடிய  பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. ஓடி தஞ்சம் புகுந்த வீடுகளை உடைத்து போலீசு தாக்கியது. எதிரி நாட்டு படைகள், ஊருக்குள் புகுந்ததைப்போல போலீசு அட்டூழியம் செய்தது. போலீசு கேட்கிறது “மக்களும் தான் எங்களை தாக்கினர்” அதற்காக எங்களைப் பற்றி பேச மாட்டீர்களா? என்று கேட்கின்றனர். மக்கள் போலீசை தாக்கியது என்பது தற்காப்பு தாக்குதல் தான். காவல்துறையை சேர்ந்தவர்களே உங்களை உங்கள் மேல் அதிகாரி தாக்க சொன்னால் எங்கள் சகோதர சகோதரிகளை அடிக்க முடியாது என்று சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
கார்த்திகேயன் – மக்கள் கலை இலக்கிய கழகம்
PP Chennai protest (1)முத்துகுமார் தீக்குளிப்பின் போது மாணவர்கள் திரண்டனர். நாங்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டோம்.  மீண்டும் 2017 ஜனவரியின் போது மாணவர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்டம், காவிரிப் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை பற்றிய போராட்டமாக மாறியது. மக்களுக்கு போலீசு மீது எப்போதுமே பயம் இல்லை. திருடனை விட பெரிய திருடன் போலீசு தான். மெரினாவில் நடந்த போராட்டத்தில் போலீசு ஒன்றும் மாணவர்களை பாதுகாக்கவில்லை. இளைஞர்கள், முஸ்லீம்கள், மாணவர்கள் தான் செயின் போட்டு போராடியவர்களை பாதுகாத்தனர். விவேகானந்தர் மண்டபத்தில் உட்கார்ந்து போராடியவர்களுக்கு மக்கள் கொண்டு வந்த கொடுத்த சாப்பாடு, பிஸ்கட்டை பிடுங்கி தின்றவர்கள் தான் இந்த போலீசு.
சிங்கம் 3 படம் தள்ளி வைக்கப்பட்டிருகிறது. போலீசு பற்றி மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். இப்போ வெளிவந்தால் படம் ஊத்திக்கும் என்று தள்ளி போட்டுள்ளனர். ஒரு போலீசு அடிவாங்கியதை போல அவர்களே ரெடி செய்து வாட்ஸ்அப் பில் அனுப்புகின்றனர். இது பற்றி அந்த போலீசே இது ஓவர் தான் என்கிறார். இனி போலீசு ராஜ்ஜியத்தை ஒழித்து மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் .
அஜிதா – பெண்கள் விடுதலை முன்னணி – இணை செயலாளர், சென்னை
PP Chennai protest (3)மெரினா கடற்கரையில் நடந்த மாணவர், மக்கள் போராட்டம், திறந்தவெளி பல்கலை கழகம் போல இருந்தது. கற்கவும் கற்றுக் கொடுக்கவும் முடிந்தது. இளைஞர்கள்தான்  இந்த போராட்டத்தில் பெண்களை பாதுகாத்தனர். ஒரு பெண், முகம் தெரியாத நபருக்கு தனது போர்வையை போர்த்தினார். போராட்டம் நடந்த ஆறு நாட்களுக்கு போலீசு இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். 7 வது நாள் அவிழ்த்து விடப்பட்ட வெறிநாயைப் போல போலீசுகாரர்கள் மக்களை அடித்தனர். போலீசு மட்டுமல்ல இந்த அரசே நமக்கு தேவை இல்லை என்பதை இச்சம்பவங்களே உணர்த்துகின்றன
பி. சுகுமார் – சி.பி.ஐ – மாநில குழு உறுப்பினர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
போலீசை கண்டித்து இப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சமூகத்தில் இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. காவிரி, பணமதிப்பிழப்பு நீக்கம், வேலையில்லா திண்டாட்டம் வரை நாம் போராடிய வேண்டிய பிரச்சனை நீள்கிறது.
காக்கிச்சட்டை அணிவதற்கு முன்பு மனிதர்களாகத்தான் உள்ளனர், அணிந்த பின்பு தான் மாறுகின்றனர். திருமண வீட்டில் சீப்பை ஒளித்து விட்டால், திருமணம் நின்றுவிடும் என்று நினைத்தது போலீசு.
PP Chennai protest (4)இது தை மாதம் நடந்ததால்  இது “தை புரட்சி” . மாணவர்கள் போராட்டத்தை வேவு பார்த்தது போலீசு. 10 லட்சம் பேர் மெரினாவில் போராடினார்கள். ஒரு கோடி பேர் தமிழகம் முழுவதும் போராடினார்கள்.
தனது மகன், தனது அண்ணன், தனது பேரன் என்றுதான் தமிழக  மக்கள் அடிப்பட்டவர்களுக்காக போலீசை எதிர்த்து போராடினார்கள். இந்த போராட்டத்தில் சாதி இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை, எவ்வித வேறுபாடும் இல்லை. 200 பேரை கைது செய்தது போலீசு, ஆனால் 47 பேர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். மீதி பேர்கள் எங்கே? அவர்கள் தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பிரின்ஸ் என்னரசு பெரியார் – திராவிடர் கழகம், மாநில இளைஞரணி செயலர்
என்னதான் அமைதிப்போராட்டமாக இருந்தாலும், ஒரு ஸ்டண்ட் சீன் இல்லையானால் முழுமைபெறாது என்று போலீசு மக்களை அடித்தது. போராட்டம் என்பது ஜாலியாக இருக்காது அடிதடியாக தான் இருக்கும் என மாணவர்களுக்கு பாடம் கற்பித்த போலீசுக்கு நன்றி. போலீசு இரண்டு காமிராக்களை வைத்து வீடியோ எடுக்கின்றது. ஆனால் 1000 கேமாராக்கள் அவர்களை வீடியோ எடுத்தது அவர்களுக்கு தெரியாது. போலீஸ்காரர்கள் மனநோயாளியை போல இரவில் பார்த்த வாகனகளையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இதை இரண்டு பெண்கள் மாடியில் இருந்து  படம் பிடித்தார்கள். இப்படிதான் பலர் போலீசின் அட்டூழியங்களை அவர்களுக்கே தெரியாமல்  படம் பிடித்தனர்.
PP Chennai protest (14)இன்று தோழர் என்று சொன்னால் பிரச்சனையா? சாதி, மதம், இனம் கடந்தது தோழர் என்ற வார்த்தை. பெரியார் ரஷ்யாவிற்கு சென்று திரும்பிய போது திரு என்று அழைப்பதற்கு பதிலாக அனைவரையும் தோழர் என்று அழைக்க சொன்னார்.
கருப்பு சட்டை எங்கள் பக்கம், சிகப்பு சட்டை எங்கள் பக்கம், காக்கி சட்டை எங்கள் பக்கம் என கோஷம் போட்டவர்களை தான் அடித்தது போலீசு. இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமா? இல்லை. தண்ணீர் எப்படி 100 டிகிரி கொதிநிலையில் ஆவியாகுமோ? அதுபோல 100-வது டிகிரியாக ஜல்லிக்கட்டு பிரச்சனை. யார் சமூக விரோதி? ஆரியமே சமூகம், ஆரியர்களே மக்கள் என்றால், நாங்கள் சமூக விரோதிகள் தான். மக்கள் போராட்டம் ஒன்றே அனைத்துக்கும் தீர்வு என்று பேசினார்.
முனுசாமி – சி.பி.ஐ(எம்.எல்) – மாநிலக் குழு உறுப்பினர்.
மெரினாவில் போலீசு நடத்திய வன்முறைக்குப் பின்னரும் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராடிய மக்கள் மீது போலீசு அடக்குமுறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை மக்கள் போராட்டத்தின் மூலம் தான் வெல்ல முடியும்.
ராஜூ – மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர்
போராடுபவர்களை போலீசு தாக்குவது புதிதல்ல. வழக்கறிஞர்கள் போராட்டத்தில் நீதிமன்றத்திலேயே ஆறுமுகம் என்ற நீதிபதியை அடித்தனர். உன்னை பார்த்தால் நீதிபதி மாதிரி தெரிவில்லையே என்று கூறி போலீசு நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் அடித்தது. போலீசை பற்றி நாம் சொல்வது வேறு, போலீசே தன்னை நல்லவன் என்று சொல்வதில்லை. சிங்கம் சூர்யா போல ,வேட்டையாடு விளையாடு கமல் போல போலீசு ரொம்ப நல்லவன் என்று சொன்னால் மக்கள் நம்புவார்களா? இந்த குமணன்சாவடி எஸ்.பி ரொம்ப நல்லவர் லஞ்சம் வாங்க மாட்டாரு என்று நாம் சொன்னால் மக்கள் நம்புவார்களா?
PP Chennai protest (6)ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு என்று மெரினாவில் திரண்டது மாணவர் படை. இடதுசாரிகளை விட மாணவர்கள், இளைஞர்கள் தான் மோடியை பற்றி அதிகம் கழுவி கழுவி ஊற்றினார்கள். ஏன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில்  கீழடியில் தொல்லியல் ஆய்வுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
பிழைப்பு தேடி ஆந்திராவிற்கு போகிறவர்கள் தெலுங்கு பேசுகிறார்கள், டெல்லிக்கு போகிறவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள். கேரளாவிற்கு போகிறவர்கள் மலையாளம் பேசுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதம் யாருக்காவது பேச தெரியுமா? சொல்லி கொடுக்க கூடாது என்று வைத்துள்ளான். நம்மவர்கள் இரண்டு வார்த்தை மட்டும் சுவாகா, நமகா மட்டும் கற்றுள்ளனர். இந்த புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருததிற்கு பல கோடி ஒதுக்கீடு. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
போலீசை ஏவியது தமிழ்நாடு அரசு அல்ல, மோடி அரசு தான். இங்கு மக்களின் கொந்தளிப்பை பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் ஒரு மாணவனை சுற்றி எல்லா பாதுகாப்போடும் உள்ள அதிரடிப்படை போலீசு தாக்குகிறது.  ஒரு மீனவ பெண் கேட்கிறார். “உனக்கு தைரியமிருந்தால் ஒண்டிக்கு ஒண்டி வாடா” என்கிறார். பத்து பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது வீரமா? கோழைத்தனம்.
“தோழர் என்று பேசினால் போனை கட் செய்து விடுங்கள்” என்று கோவை கமிஷனர் பேசுகிறார். போலீசு பயிற்சியில் இது தான் கற்று தருகிறார்களா? இல்லை இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் தான் கற்று தர படுகிறது. எல்லாரும் சமம். போலீசை எதிர்த்து போராடினாலும் அனுமதி தரவேண்டும் என்று தான் சட்டத்தில் உள்ளது. அது தான் ஜனநாயகம். யாரோ பின்லேடன் படத்தை வைத்திருந்தார்,   ஜனவரி 26-ஐ கருப்பு நாளாக அனுசரிப்போம் என அட்டை வைத்திருந்தனர் என கூறி மக்கள் அனைவரையும் அடிப்பதற்கு போலீசு காரணம் கூறுகிறது.
போலீசை கண்டு அஞ்சி போராட்டம் ஓயாது. அது நெருப்பை பொட்டலம் கட்டுவதைப் போல கொள்கைக்காக போராடுபவர்களை கூலிக்காக அடிப்பவர்களால் ஒடுக்க முடியாது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக