புதன், 15 பிப்ரவரி, 2017

நீதி வென்றுள்ளது: விசாரணை அதிகாரி நல்லம நாயுடு.. சொத்து குவிப்பு வழக்கின் முக்கிய மனிதர் !

nallamanaidu நீதிமன்றத்தில் நல்லம்ம நாயுடு அவர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையே, குற்றவாளிகளுக்கு தண்டனையை தேடி தந்திருப்பதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் நீதி வென்றிருப்பதாக, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் என்.நல்லமநாயுடு தெரிவித்தார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996 வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக காவல் துறையின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி வி.கே.சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
அப்போது, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பொறுப்பு ஏற்க பல அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவில், அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த என்.நல்லமநாயுடு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு நல்லமநாயுடுவின் விசாரணையும், அவர் சேகரித்த தடயங்களும்,ஆவணங்களும் மிக முக்கியமான காரணம் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. அத்துடன் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையே, குற்றவாளிகளுக்கு தண்டனையை தேடி தந்திருப்பதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து, சென்னை பெரவள்ளூரில் வசிக்கும் நல்லமநாயுடு கூறியது:
சொத்து குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் நீதி வென்றுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக லத்திகா சரணை நியமிக்க அரசு அப்போது முடிவு செய்திருந்தது. ஆனால் லத்திகா சரண் விசாரணை அதிகாரி பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் அப்போது ஏ.டி.எஸ்.பி.யாக இருந்த என்னை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்தது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நாள் முதல், பல்வேறு தொந்தரவுகளையும், வேதனைகளையும் அனுபவித்தேன். எனது குடும்பமும் வேதனையை அனுபவித்தது. அதை இப்போது கூற விரும்பவில்லை. ஓய்வுபெற்ற பிறகும்கூட இந்த வழக்கின் விசாரணைக்காக அரசு எனக்கு 4 முறை பணி நீட்டிப்பு வழங்கியது.
கடந்த 2015 மே 11 -ஆம் தேதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டபோது, மனதுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. தற்போது, உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.
இந்த தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார் அவர்.
தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த நல்லமநாயுடு படிப்படியாக பதவி உயர்வு பெற்று, காவல் கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது  தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக