திங்கள், 20 பிப்ரவரி, 2017

ஜெயலலிதா நினைவு சின்னங்கள் அகற்றப்படுமா? தவறான வரலாறு உருவாக கூடாது ! .. சட்டப் பஞ்சாயத்து இயக்கம் !

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதையா? அவரது சமாதியை அகற்ற வேண்டும்' எனப் போராட்டக் குரல் எழுப்புகிறது மக்கள் அதிகாரம் அமைப்பு. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அறிக்கையில், "அரசு சார்பில் ஜெ. பிறந்தநாள் -இறந்தநாள் கடைப்பிடிக்கக்கூடாது. அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படம் இடம் பெறக்கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.;;சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ நம்மிடம், ""வழக்கில் ஜெ.வும் குற்றவாளிதான். உயிரோடு இல்லாததால் அவருக்குத் தண்டனை கொடுக்க முடியவில்லை. ஊழல் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாட்டி வைத்துவிட்டு "அந்த அலுவலகத்தில் அமர்ந் திருக்கும் அரசு அதிகாரியிடம் லஞ்சம் வாங்கக்கூடாது,…ஊழல் புரியக்கூடாது' என்று எப்படி சொல்லமுடியும்? அ.தி.மு.க. அரசு திட்டமிட்டே ஜெயலலிதா குற்றவாளி அல்ல என்பதுபோல் காண்பிக்க முயற்சிப்பதால் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நாங்கள் புகார் கொடுத்து ஒரு மாதத்திற்குள் ஜெ.வின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களிலிருந்து அகற்றப்படவில்லை என்றால் பொதுநல வழக்கு தொடுப்போம்''’ என்கிறார்



;நம்மிடம் பேசிய பிரபல வழக்கறிஞர் இராஜா செந்தூர் பாண்டியனோ ""சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றம் கொடுத்த விடுதலைத் தீர்ப்பைத் தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறதே தவிர, கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்ததை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை. அதற்கான விளக்கத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்பில்… பக்கம் 562-ல் (பத்தி 542-ல்) நீதிபதிகள் விவரித்திருக் கிறார்கள்.

ஜெயலலிதா இறந்துவிட்டதால் தற்போது, கொடுக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு என்னும் சட்ட வழிவகை... சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு இருக்கிறது. இந்தச்சூழலில், ஜெயலலிதா உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குற்றவாளி என குறிப்பிடப்படாத காரணத்தால் அவருடைய படத்தை தற்போதைய தமிழக அரசின் விளம் பரங்களிலோ அரசு அலு வலகங்களிலோ பயன் பாட்டிலும் செயல்பாட்டி லும் வைப்பதற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை. ஜெயலலிதாவுக்கு அரசு செலவிலேயே மணி மண்டபம் கட்டும் சூழலில் அதனைத் தடுக்க முடியாது'' என்கிறார்.

அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் நம்மிடம், ""சிறப்பு நீதிமன்ற நீதியரசர் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். அதன்மூலம், கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை  உச்சநீதி     மன்றம் ஒதுக்கிவிட்டது என்றுதான் அர்த்தம். அப்படிப் பார்த்தால், சசிகலாவைப்போலவே ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்பதில்  மாற்றுக் கருத்தில்லை. ஊழல் குற்றவாளியின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைத்திருக்கிறோம் என்றால் நாம் மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? இவர் போன்று ஊழல் செய்வது நல்லது என்று சொல்கிறோமா?      மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி ஜெயலலிதா. அவரது ஊழலுக்கு துணையாக நின்ற சசிகலா அண்ட் கோவிற்கே இவ்வளவு தண்டனை என்றால் ஊழல் புரிந்த வருக்கு எவ்வளவு தண்டனை கொடுத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது

;ஆளுந்தரப்பினர் இதை மறைத்து, ஊழல் புரிந்ததற்கு பாரத ரத்னா விருது கேட்பார்கள் போல. இதுகுறித்து தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்து ஜெ. படத்தை நீக்க வலியுறுத்து வோம். இல்லையென்றால், அதற்கான போராட்டங்களை முன்னெடுப்போம்' ' என்கிறார்.

"ஜெ. நினைவிடத்தை அகற்றவேண்டும், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களின் பெயர்களையும் அங்குள்ள ஜெ.வின் படங்களையும் அகற்ற வேண்டும்' என்றும் மக்கள் அதிகாரம் போராடத் தொடங்கியுள்ள நிலையில்... அதன் வழக்கறிஞர் ராஜூ நம்மிடம்,
 ""குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு இறுதி முடிவும் வந்த பிறகு, அரசு செலவில் விளம்பரம் செய் வதும், போற்றுவதும் எதிர்கால சந்ததியினருக்கு தவறான பாடத்தைக் கற்பித்துவிடும். அரசின்  வரிப்பணத்தில் கிரிமினல் குற்றவாளியின் புகைப் படத்தை வெளியிடக்கூடாது. அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படம்  இருக்கக்கூடாது. ஜெ.வின் நினைவிடத்தை அவமானச் சின்னமாக இளைய தலைமுறையின் மனதில் பதிவு செய்யவேண்டும்.

அது மட்டுமின்றி, குற்றவாளி களின் ஒட்டுமொத்த சொத்துக்களும் முடக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிலும் இணைந்தால் மட்டுமே ஊழல் நடந்திருக்க முடியும். இதில் அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பதுடன், இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டதற்கு அரசு அதிகாரிகளும் காரணம். ஜெ.வின் ஆட்சிக் காலத்தில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த சொத்துக்களும் பொதுத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

;ஜெ. மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருப்பது மத்திய அரசுக்குத் தெரியாதா? அதன் தீர்ப்புக்காக காத்திருந்தபோது, மரணமடைந்த ஜெ.வை இங்கு அடக்கம் செய்தால் பிறகு பிரச்சனை வரும் என்பது தெரியாதா? அப்படித் தெரிந்தும் சென்ட்ரல் கவர்மெண்ட், ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ததிலிருந்து மத்திய அரசும் இந்த ஊழலை ஆதரிப்பதாகவே இருக்கிறது. இதற்குச் சட்டப் படியான தீர்வு கிடைக்காவிட்டால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை போல் இதையும் நாங்கள் கையில் எடுப்போம்'' என்றார் ஆவேசமாக.

மரணத்திற்குப் பிறகும் மறையாத தனது ஊழல்களால் சர்ச்சைக்குரியவராகவே இருக்கிறார் ஜெயலலிதா. சட்டமும் நீதியும் அவர்மீது ஊழல் முத்திரையை அந்தளவுக்கு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது."
;-மனோ சௌந்தர், அருண்பாண்டியன்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக