சனி, 18 பிப்ரவரி, 2017

டான் அசோக்,: வீரமணி அய்யாவுக்கு : முடிந்தவரை கொள்ளை அடிப்போம் என்று ஆட்சியை களவாடியதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?

donashok:  ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு,
சமீபகாலமாக உங்கள் அறிக்கைகளை படித்து வேதனையுற்ற நான், சட்டமன்றத்தில் நடத்த அமளிகள் குறித்த தங்கள் அறிக்கையை படித்து
மிகவும் எரிச்சலுற்றேன். சசிகலா முதல்வராக வாய்ப்பிருந்தபோது நீங்கள் அவரை ஆதரித்ததில் இருந்த காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றாலும், புரிந்துகொள்ள முடிந்தது. ஓ.பி.எஸ் பாஜகவின் கைப்பாவை என்பதை காரணமாக வைத்தும், மாநில உரிமையில் மத்திய அரசின் தலையீடு என்பது பேராபத்து என்பதை வைத்தும் உங்களின் சசிகலா ஆதரவு அமைந்திருக்கிறது என்பதை பல திமுகவினர் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் கூட, ஒரு திராவிட இயக்க ஆதரவாளனாக நான் முற்றிலும் புரிந்தே இருந்தேன். ஆனால் காட்சிகள் மாறிவிட்டது. தனது சட்டமன்ற உறுப்பினர்களை சசிகலா தரப்பு நடத்திய விதம் மக்களின் வெறுப்பை ஏகமனதாக சம்பாதித்திருக்கிறது. மக்களின் எதிர்ப்பு என்பது நாளுக்கு நாள் வலுத்து ஆட்சியாளர்கள் மீது உச்சகட்ட வெறுப்புணர்ச்சி கொண்டிருக்கிறார்கள்.  கண்ணையும் காதையும் வாயையும் கரன்சிகளால் மூடிகொண்டிருக்கும்  ஆட்சியை  ஒழித்துக்கட்ட வேண்டாமா?

இதெல்லாவற்றையும் விட அடுத்த தேர்தலில் நிச்சயம் ஆட்சிக்கே வர முடியாது என்ற சூழலில், முடிந்தவரை கொள்ளை அடிப்போம் என்ற முடிவில் ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் படுபாதாளத்தில் இருக்கும் தமிழகத்தை இன்னும் சுரண்டி ஒருகாலத்தில் பீகார் இருந்த நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழகத்தை தள்ளிவிடும் ஆபத்தும் இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் மனதில் அதிர்ச்சியை மட்டுல்ல பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இன்று சட்டசபையில் கலைஞர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என கேள்வி எழுப்பியுள்ளீர்கள். எனக்கும் அந்த சந்தேகம் உண்டு. கலைஞரால் இந்த அளவுக்கு ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவை பெற்றிருக்க முடியுமா என்று சந்தேகம் தான். 18/2/2017 ஆன இந்த நாளில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தன் தந்தை பெருமைகொள்ளும் அளவில் செயல்பட்டிருக்கிறார். உங்களின் சசிகலா ஆதரவு நிலைப்பாடு அதை ஏற்க மறுக்கிறது என்றால் கண்டும் காணாமல் இருங்கள். அதை ஒரு குற்றமாக குறிப்பிடாதீர்கள். அது திமுக விரோதம் மட்டுமல்ல, மக்கள் விரோதமும் கூட.
ஏனெனில் சமூகநீதி காத்த வீராங்கனையாம் குற்றவாளி ஜெவுக்கு வாக்களித்த மக்கள் அவர் இல்லாத இந்நாளில் தேர்தலை விரும்புகிறார்கள். தேர்தல் வருவது தனக்கு நன்மையே என்றாலும் ஸ்டாலின் என்ன ஆட்சியை கலைக்கவா சொன்னார்? ரகசிய வாக்கெடுப்புக்கு கோரினார். அதில் என்ன தவறு? நீங்கள் நியாயமாக சபாநாயகர் தனபாலை கண்டித்தல்லவா அறிக்கை விட்டிருக்க வேண்டும்! எதிர்கட்சிகளை வெளியேற்றிவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வது கிட்டத்தட்ட பாதி தமிழக மக்களை மக்கள் மன்றத்தில் புறக்கணிப்பதற்கு ஒப்பாகும் என்பது உங்களுக்கு தெரியாதா?
ஒருவேளை நாளை ஓ.பி.எஸ் கையில் ஆட்சியோ, அதிமுகவோ போனால் இந்துத்துவா வளரும், பாஜக வளரும் என நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் தமிழகத்தில் கட்சிகளை தாண்டி பெரியாரை மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தீர்கள் என்றால் இந்த பயமே தேவை இல்லையே. பெரியாருக்கு பிறகு அவர் கொள்கைகளை பரப்புவதில் ஏற்பட்ட மிகப்பெரிய வேகத்தடையாக அல்லவா திராவிடர் கழகம் இன்று இருக்கிறது. இன்னமும் மக்களிடையே நிலவும் கொள்கைகளின் மூலமாக அல்லாமல், சசிகலாவுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலமே இந்துத்துவத்தை தடுக்கவேண்டிய அவல நிலையில்தானே தமிழகத்தை வைத்திருக்கிறீர்கள்! பெரியார் இருந்தால் இந்நிலை இருந்திருக்குமா?
ஓ.பி.எஸ் ஒரு அரசியல்வாதி. பிஜேபி அவரை பயன்படுத்துகிறது. அவர் பிஜேபியை பயன்படுத்துகிறார். நாளை காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அடிமையாக ஓ.பி.எஸ் மாறிவிடுவார். ஜெயலலிதா காலிலும், அடுத்தநாளே சசிகலா காலிலும் விழுந்த அவருக்கும் அது ஒன்றும் சிரமமாக இருக்காது. அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சிக்கு வருவதே பெரிய கேள்விக்குறியாக இருக்கும் சமயத்தில் தமிழகத்தில் மக்கள் காமடி பீஸ்களாக இருக்கும் பாஜகவுக்கு பயந்து சசிகலா பினாமிகளிடம் தமிழகத்தை நான்காண்டுகளுக்கு தாரைவார்க்கச் சொல்கிறீர்களே நியாயமா?
பெரியார் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் ஆயிரம் வருடமானாலும் செய்யமுடியாததை அந்தக் கிழவர் 94 ஆண்டுகளில் செய்துவிட்டு போய்விட்டார். தமிழகத்தில் பெரியாரியம் என்பது காற்றைப் போன்றது. காற்றை நாம் சுவாசிப்பது நம் கவனமில்லாமல் நடக்கும் விஷயம். அதுபோலத்தான் இங்கே மதச்சார்பின்மை என்பதும். தமிழகத்தில் மதவெறியை பரப்புவதென்பது கஷ்டமான காரியமல்ல, முடியாத காரியம். எனவே தேவையில்லாமல் பீதியுற்று தமிழகத்தை அழிவுக்கு தள்ளும் அறிவுரைகளை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.
இன்றைய சூழலில் அனைத்து துறைகளிலும் நலிவடைந்திருக்கும் தமிழகத்தை சீர்செய்ய முக.ஸ்டாலின் தலைமையிலான திமுகவினால் மட்டுமே முடியும் என்பது மக்களின் எண்ணம். இன்று அந்த எண்ணத்திற்கு ஸ்டாலின் மேலும் வலுவூட்டி இருக்கிறார்.
மக்களின் எண்ணங்களுக்கு நேர்மாறாக துணிச்சலாக பயணிப்பது என்பது பெரியாரின் வழிதான். ஆனால் அது மக்களுக்கு நன்மை பயக்கும் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, பெண்ணுரிமை போன்ற விஷயங்களில் இருக்க வேண்டுமேயொழிய சசிகலா ஆதரவு, எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு என இருக்கக் கூடாது. இப்படி தேவையில்லாத விஷயங்களில் மக்களுக்கு நேரெதிரான கோட்டில் பயணிக்கும்போது மக்களிடம் இருந்து முற்றிலும் அந்நியப் படுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாளை நீங்கள் நல்லது சொன்னாலும் மக்கள் மன்றத்தில் அது எடுபடாமல் போகும். இப்படி செய்து செய்துதான் பாஜகவுக்கு மூளையாக ஆர்.எஸ்.எஸ் செயல்படுவதைப் போல திமுகவுக்கு தி.க என்று கம்பீரமாக செயல்பட்டிருக்க வேண்டிய தி.க இன்று நலிவுற்றுப் போயிருக்கிறது.
பெரியாரை அரசியல் தாண்டி மக்களிடம் பரப்புவீர்கள் என்ற நம்பிக்கை உங்களின் மீதும் ஏனைய பெரியாரிய இயக்கங்களின் மீதும் என்போன்ற இயக்கம் சாரா பெரியாரியர்களுக்கு எப்போதோ போய்விட்டது. அந்த வேலையை நாங்கள் சமூகவலைதளங்களின் வாயிலாக, மக்கள் ஊடகங்களின் வாயிலாக எப்போதோ கையிலெடுத்துக் கொண்டோம். ஒரு அமைப்பாக செயல்பட்டும் கூட, ஒரு அமைப்பாக செயல்படாத பார்ப்பனர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையையும், ஒருங்கிணைந்த சிந்தனையையும், கருத்துக்களை உருவாக்குவதில் அவர்களுக்கு இருக்கும் ஆற்றலையும் உங்களால் திராவிடர்களுக்குள் கொண்டு வரமுடியவில்லை என்றால் எங்கே தோற்றிருக்கிறீர்கள் என்பதை சிந்துத்துப் பாருங்கள். இதை நோக்கித்தான் அடுத்தகட்ட பெரியாரியம் தமிழகத்தில் அமையப்போகிறது. அதை நாங்கள் உறுதி செய்வோம். காலத்திற்கேற்ற மாற்றங்களையும், வழிமுறைகளையும் முரண்பாடுகளையும் உள்வாங்கிக்கொண்டு செயல்பட்ட பெரியாரும் அதைத்தான் விரும்புவார். நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றாலும் சரி, தயவுசெய்து ஓய்வெடுத்துக்கொண்டு வேடிக்கை பாருங்கள். நன்றி.
-டான் அசோக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக