சனி, 18 பிப்ரவரி, 2017

ஜனநாயக விரோத வாக்கெடுப்பு : ஓ.பி.எஸ். சீற்றம்!


குரல் வாக்கெடுப்பின்மூலம் 122 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து தீர்மானத்தை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், முஸ்லீம் லீக் சட்மன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஓ.பி.எஸ். அணியினர் 11 பேரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

அவை ஒத்திவைக்கப்பட்டு சட்டமன்றத்தை விட்டு வெளியேவந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும். உறுதியாகக் கூறுகிறேன். தர்மமே வெல்லும்... இதுதான் சரித்திரம். சட்டமன்றம் தொடங்கியவுடன் நாங்கள் இரண்டே கோரிக்கைகளைத்தான் சட்டமன்றத் தலைவரிடம் முன்வைத்தோம். ஒன்று, கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்துவைக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை ஐந்து நாட்களுக்கு தொகுதிக்கு சுதந்திரமாக அனுப்பிவைக்க வேண்டும். வாக்கெடுப்பு நடத்த 15 நாட்கள் அவகாசம் உள்ளது. ஒரு வாரம் கழித்து சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தலாம் என்றோம். இரண்டாவதாக, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். சட்டமன்றத் தலைவரிடம் எவ்வளவோ எடுத்துரைத்தோம். அவர் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை.
இதே கோரிக்கைகளை திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வைத்தார்கள். ஆனால் திமுக உறுப்பினர்களை பலவந்தமாக தூக்கியும், தாக்கியும், காயப்படுத்தியும் சட்டமன்றத்தைவிட்டு வெளியேற்றினார்கள். எதிர்க்கட்சிகள் யாருமே இல்லாதபோது வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். ஜனநாயகத்துக்கு விரோதமாக வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார்கள். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லுமா? செல்லாதா? என்பதை மக்களின் கருத்துக்கே நாங்கள் விட்டுவிடுகிறோம்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்குச் செல்லும்போது அவர்கள் மக்களின் கண்டனத்துக்கு ஆளாவார்கள். தொகுதி மக்கள் தங்களுக்கு துரோகம் இழைத்ததை எம்.எல்.ஏ.,க்களுக்கு புரியவைப்பார்கள். மாண்புமிகு அம்மா, யாரை கட்சியை விட்டு வெளியேற்றினார்களோ, அவர்களின் தலைமையில் ஆட்சி நடக்கிறது. நாங்கள்தான் அம்மாவின் அணி. தர்மம் வெல்ல சிறிது காலஅவகாசம் தேவைப்படுகிறது. அவ்வளவுதான். தேவைப்பட்டால் நாங்கள் ஆளுநரைச் சந்திப்போம். தர்மயுத்தம் இன்று தொடங்கிவிட்டது. இந்த தர்மயுத்தம் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் மத்தியில் வெடிக்கும். சட்டமன்றத்திலும் வெடிக்கும். எதிர்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் தாக்கி காயப்படுத்தியதற்கு கண்டனங்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மாஃபா பாண்டியராஜன் பேசுகையில், ‘எங்கள் மீது எத்தனையோ தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், ஆபாசமான வசவுகள் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளன. நடந்த நிகழ்வுகள் ஆளுநர் மற்றும் நீதிமன்றங்கள் கவனத்துக்குச் செல்லும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் நாங்களே வெற்றியடைந்திருப்போம். பத்து நாட்களுக்குமேல் சிறையிலடைத்து, வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தி 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுதான் அவர்களுக்குக் கிடைத்தது. இந்த நிலை விரைவில் மாறும். நிச்சயம் பெரியமாற்றம் ஏற்படும்’ என்று கூறினார். மினம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக