சனி, 4 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் :ஷீலா பாலகிருஷ்ணன் விலகல் - பனிப்போரின் தொடக்கம்


minnambalam.com : தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், திடீரென்று தனது பதவியிலிருந்து விலகியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணனின் திடீர் விலகல் என்பது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சிக்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைமைக்கும் ஏற்பட்டுள்ள பனிப்போரின் தொடக்கமாகவே தெரிகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டியும், ஏற்கனவே இருக்கிற தடுப்பணைகளின் உயரத்தைக் கூட்டியும் சீமாந்திர மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளார்கள். விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்துக்கும் பேராபத்து ஏற்படுத்திவிட்டதாக கவலையடைந்துள்ளார்கள். சீமாந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலேயே இதுபோன்று தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளதை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

பாலாறு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் பிரச்னை எழுப்பியபோது பதிலளித்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வரும் வரை அவர்கள் தடுப்பணை கட்ட முடியாது” என்று பதிலளித்தார். ஆனால் நடைபெறும் நிகழ்வுகள் அவர் அளித்த பதிலுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. சீமாந்திர மாநில அரசு தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டும் முயற்சிகளையும், ஏற்கனவே இருக்கிற தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தும் வருகிறது. பாலாறு தண்ணீர் தடுக்கப்படுவதால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி, கல்பாக்கம் அணுமின் நிலையமும் பாதிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 4.50 லட்சம் ஏக்கரில் உள்ள விவசாயத்துக்கான நீர் ஆதாரம், குடிநீர் ஆதாரம் எல்லாம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக நலன்களைப் பாதுகாக்க அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதோடு அக்கறையும் காட்டவில்லை.
அதற்குப் பதிலாக, "முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு தான் முதலமைச்சராவது எப்படி என ஆட்சிக்கு வரத் துடிக்கும் அதிமுக தலைமைக்கும்”, “அதிமுக தலைமையின் விருப்பத்துக்கு மாறாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையின்கீழ் அதிகாரிகளும், ஆலோசகர்களும் செயல்படமுடியாத சூழ்நிலையும்” இன்றைக்கு தமிழக அரசு நிர்வாக இயந்திரத்தை நிலைகுலைய வைத்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் திடீரென்று பதவியிலிருந்து விலகியிருப்பது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சிக்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைமைக்கும் ஏற்பட்டுள்ள பனிப்போரின் தொடக்கமாகவே தெரிகிறது. இப்படியொரு நிலையற்ற ஆட்சியில் பாலாறில் புதிய தடுப்பணைகள், சர்க்கரை மானியம் ரத்து செய்யப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாமல் போனது, “நீட் தேர்வு” சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் குழப்பம், மெரினா புரட்சியான மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை காவல்துறை அதிகாரிகளே சீர்குலைத்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
ஆகவே, முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்னைகள், அண்டை மாநிலங்களால் தமிழகத்துக்கு ஏற்படும் பிரச்னைகள், மாநிலத்துக்கு கிடைக்கவேண்டிய மத்திய அரசு திட்டங்கள், உதவிகள் போன்றவற்றில் தன் முழுக் கவனத்தைச் செலுத்தி, தமிழக நலனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிர்வாகம் தன் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக