சனி, 25 பிப்ரவரி, 2017

அமெரிக்காவில் இந்தியர்களின் உயிர் /வாழ்வு கேள்விகுறி! இங்கிட்டு மோடி அங்கிட்டு ட்ரம்ப்பு..


ஹூஸ்டன்:

எங்களுக்கு இங்கிருக்க தகுதியில்லையா? என்று அமெரிக்காவில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். ஒலாதேவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிவாஸின் மனைவி சுனயானா டுமாலா, அமெரிக்காவில் தங்கியிருந்து பணியாற்றுவது குறித்து முதலில் நான் தயங்கினேன். ஆனால் எனது கணவர்தான், "அமெரிக்காவில் நாம் தங்குவதால் நல்லதே நடக்கும்" என்றார். இதுபோன்ற சம்பவங்கள், அமெரிக்காவில் தங்கியிருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்துகிறது. எங்களுக்கு இங்கிருக்க தகுதியில்லையா? என்றும் அவர் உருக்கத்தோடு கேட்டார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அமெரிக்க அரசு எந்த விதமான நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்றே வியப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


சம்பவத்தின் பின்னணி: அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் ஹைதராபாதைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஒரு இந்தியர் உள்பட 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.

ஹைதராபாதைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) என்பவர், கான்சாஸ் மாகாணம் ஒலாதே நகரில் உள்ள ஜிபிஎஸ் கருவி தயாரிக்கும் கார்மின் நிறுவனத்தின் தலைமையகத்தில் பணியாற்றி வந்தார். அந்நிறுவனத்தில், வாரங்கலைச் சேர்ந்த ஆலோக் மதசானி என்பவரும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கான்சாஸில் உள்ள மதுபான விடுதிக்கு ஸ்ரீநிவாஸும், ஆலோக் மதசானியும் புதன்கிழமை இரவு சென்றனர். அங்கு அவர்கள் இருவருக்கும், அமெரிக்க கடற்படை முன்னாள் வீரரான ஆடம் புரின்டன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீநிவாசையும், ஆலோக்கையும் இன அடிப்படையில் புரின்டன் திட்டியுள்ளார். இருவரையும் பயங்கரவாதிகள் என்று தெரிவித்த அவர், அமெரிக்காவை விட்டு வெளியேறும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து மதுபான விடுதியை விட்டு வெளியே சென்ற புரின்டன், சிறிது நேரம் கழித்து துப்பாக்கியுடன் வந்துள்ளார்.

அந்நேரத்தில் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் தொலைக்காட்சியில் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த புரின்டன், ஸ்ரீநிவாஸ் உள்பட அங்கு கூட்டமாக நின்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ஸ்ரீநிவாஸ், ஆலோக், அமெரிக்கரான கிரிலாட் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஸ்ரீநிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். ஆலோக், கிரிலாட் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில், புரின்டனை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இனவெறியே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனினும், அமெரிக்க போலீஸார் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எஃப்.பி.ஐ. அமைப்புடன் சேர்ந்து விசாரணை நடத்தி வருவதாக மட்டும் குறிப்பிட்டுள்ளனர். தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக