சனி, 25 பிப்ரவரி, 2017

நெடுவாசல் : போராட்டம் தீவிரம் !


நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த ஒன்பது நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று நெடுவாசல் போராட்டக் களத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று சோதனைக்காக தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறுகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘அதிமுக அரசுதான் மீத்தேன் திட்டத்தை எதிர்த்தது. அதிமுக அரசு எப்போதும் விவசாயிகளின் நலன் காப்பதில்தான் முனைப்பு காட்டி வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அரசு செயல்படுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் தமிழக அரசு மவுனம் காக்கவில்லை. பிரதமரை சந்திக்கும்போது ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து தமிழக முதல்வர் முறையிடுவார்" மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்படும் அரசுதான் தற்போதைய அரசு. நெடுவாசல் போராட்டக் குழுவினர் நாளை முதல்வரைச் சந்திக்கவுள்ளார்கள்’ என்று கூறினார்.
அமைச்சருடன் உடன் சென்ற அதிமுக எம்.பி செந்தில்நாதன் மக்களின் எண்ணத்தை நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பேன் என்றும், நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இந்த பிரச்னை குறித்து பேசுவேன் எனவும் உறுதியளித்தார்.
முன்னதாக, இந்தத் திட்டம் குறித்து முதல்வர் பழனிச்சாமி, ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் விவசாயிகள் நலன்களை பாதிக்காதவகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக