"ஓ கடவுளே... மக்களின் எதிரிகளாக இருப்பவர்களின் துப்பாக்கித் தோட்டாக்களை
எதிர்கொள்ளும் வலிமையை எனக்குக் கொடு' -கத்தோலிக்க கிறிஸ்தவர்களான லத்தீன்
அமெரிக்க நாட்டவர், ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு எதிரான தங்கள் போராட்டப்
பிரார்த்தனையாக இந்த வரிகளை உச்சரிப்பார் கள். இது விடுதலை வேதாகமம் (Liberation Theology)
என்ற கோட் பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கோட்பாட்டைப்
பின்பற்றுபவர்தான், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான ஊழல்
குற்றச்சாட்டுகளை நிரூபித்து 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சொத்துகளை
அரசுடைமையாக்கியும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்த பெங்களூரு சிறப்பு
கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.கர்நாடக
மாநிலம் மங்களூரில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவரின்
குடும்பப்பெயர்தான், டி குன்ஹா. ஜான் மைக்கேல் என்பது இவரது பெயர். 12
வயதில் தந்தையை இழந்து, பள்ளி ஆசிரியையான தன் தாயின் எளிய வருமானத்தில்
வளர்க்கப்பட்டவர்தான் குன்ஹா. இவருடன் கூடப் பிறந்தவர்கள் 4 சகோதரிகள்.
"தன்னை மேம்படுத்தி சமுதாயத்துக்கு உதவக்கூடிய கல்வியும், அதன் மூலம்
கிடைக்கும் வாய்ப்புகளில் வெளிப்படும் நேர்மையான செயல்பாடுகளுமே அசையா
சொத்துகள்' என குன்ஹாவுக்கும் அவரது சகோதரிகளுக்கும் அழுத்தமாகப் பதிய
வைத்தவர் அவர்களின் அம்மா.
;மங்களூரில்
பி.எஸ்.ஸி., எல்.எல்.பி. பட்டப்படிப்பு களை முடித்தபின் கிருஷ்ணபட் என்ற
கிரிமினல் வழக்கறிஞருடன் இணைந்து பிராக்டீஸ் செய்யத் தொடங்கினார் குன்ஹா.
ஜெ. மீதான வழக்கை இவருக்கு முன் விசாரித்த நீதிபதி முடிகவுடர், மங்களூர்
முன்சீப் கோர்ட் நீதிபதியாக இருந்தபோது, திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட
ஒருவரின் ஜாமீன் மனுவுக்காக குன்ஹா ஆஜரானார். மனு நிராகரிக்கப்பட்டது.
"குற்றத்துக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் தொடர்பில்லை' என்பதை
உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். தனி நீதிபதி ஏற்கவில்லை. ஆனாலும்
பெஞ்ச் முன் வாதாடி ஜாமீன் பெற்றுத் தந்தார். அப்போது முடிகவுடர் உள்பட
நீதித்துறையைச் சார்ந்தவர்கள், "இவர் பிடிச்சா உடும்புப்பிடியா
பிடிக்கிறாரே' என்று குன்ஹாவின் உறுதியான முயற்சிகளைப் பாராட்டினர்.
வழக்கறிஞராக கவனத்தை கவர்ந்த குன்ஹா, நீதிபதியாக உயர்ந்தார்.
கர்நாடக
தார்வாட் நகரில் மாவட்ட கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டபோது,
டைப்பிஸ்ட்டாக வந்தவர் தேவி. அன்று முதல் தீர்ப்பு நாள் வரை தொடர்ந்த
அவர்தான், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பையும் வெளியே கசியாதபடி டைப்
செய்தவர். தார்வாட் நீதிமன்றத்திலிருந்து பெங்களூரில் லோக் அயுக்தா
நீதிபதியாக இவர் இருந்தபோது, 14 ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார்.
அத்தனையும் தண்ட னைத் தீர்ப்புகள்தான்.
"உயர்ந்த பொறுப்புகளில் உள்ள வர்கள்
ஊழல் செய்வதை அனுமதிக்கக்கூடாது' என்பது அவரது தீர்ப்புகளில்
வெளிப்படும். இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து, குற்றவாளிகள் உயர்நீதிமன்றம்,
உச்சநீதிமன்றம் என சென்றபோதும் குன்ஹாவின் தீர்ப்பே அங்கும் உறுதி
செய்யப்பட்டது. "ஏழைகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும்
அவர்களுக்கு உதவாதவனும், அநீதிக்கு எதிராகப் போராடாதவனும் தூய்மையான
கிறிஸ்தவன் அல்ல' என்கிறது விடுதலை வேதாகமம். குன்ஹா இதனைத் தன் மனதில்
நிலைநிறுத்தியவர் என்கிறார்கள் அவருடன் பணியாற்றும் நீதித்துறையினர்.
;ஹூப்ளியில்
இவர் முதன்மை நீதிபதியாக இருந்த சமயத்தில்தான், அங்கு முஸ்லிம்கள் வழிபாடு
நடத்தும் ஈக்தா மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் மத்தியப்பிரதேச
முதல்வராக இருந்த பா.ஜ.கவின் உமாபாரதி. "இந்து கோயில்களில் தேசியக்கொடிகளை
ஏற்ற மறுக்கும் பா.ஜ.க., ஏன் எங்கள் இடத்தில் ஏற்று கிறது' என
இஸ்லாமியர்கள் கோபமடைந்தனர். இது தொடர்பான வழக்கை, கர்நாடகத்தில் பா.ஜ.க.
-மத சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு அமைந்தபோது வாபஸ் பெற முயன்றனர்.
""நினைத்தால் வழக்கு போடுவதற்கும், திடீரென வாபஸ் வாங்குவதற்கும் கோர்ட்
ஒன்றும் அரசியல்வாதிகளின் விளையாட்டு மைதான மல்ல'' என்ற குன்ஹா, வழக்கை
வாபஸ் பெற அனுமதிக்கவில்லை. இதனால் உமாபாரதி தனது முதல்வர் பதவியிலிருந்து
விலகவேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் அரசு
வக்கீலுக்கு வழக்கை வாபஸ் வாங்க அதிகாரம் உண்டு என்ற உத்தரவைப் பெற்றது
கர்நாடக அரசு.
பெங்களூரு
குடும்பநலக் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்து பல வழக்குகளில் தீர்ப்பு
வழங்கிய குன்ஹா, பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற ரிஜிஸ்ட்ரார் (விஜிலென்ஸ்)
ஆக நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பிலிருந்துதான் அவர் ஜெ.வின் சொத்துக்
குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதியாக
நியமிக்கப்பட்டார். வழக்கு முடிவடைந்ததையடுத்து, அக்டோபர் 7-ந் தேதி முதல்
மீண்டும் ரிஜிஸ்ட்ரார் (விஜி லென்ஸ்) பொறுப்புக்குத் திரும்பினார்.2014
செப்டம்பர் 27-ந்தேதி ஜெ. உள்ளிட்டோர் குற்றவாளியென தீர்ப்பு
வழங்கப்பட்டபோது, பெங்களூரு சுத்துகுண்டபாளையாவில் உள்ள ஒரு குடியிருப்பில்
இருந்தது, மைக்கேல் டி குன்ஹாவின் ஃப்ளாட். வீட்டுப்பணிகளை மனைவி
கவனித்துக்கொள்வார். 2 பெண் பிள்ளைகளில் மூத்தவர் இன்ஜினியர். இரண் டாமவர்
பிஸினஸ் நிர்வாகம் தொடர்பாகப் படித்துள்ளார். ஒரே மகன், +2 படித்தார்.
மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 82 வயதாகும்
குன்ஹாவின் அம்மாவை சகோதரிகள் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு
நாளும் காலை 5 மணிக்கு பிரார்த்தனையுடன் தொடங்குகிறது குன்ஹாவின் பொழுது.
அரைமணி நேரம் வாக்கிங் சென்று உடலையும் மனதையும் புதுப்பித்துக் கொண்டபின்,
வழக்கமான பணிகளை மேற்கொண்டுவிட்டு காலை உணவுக்குப் பின் கோர்ட்டுக்கு
வருவார். காரிலிருந்து இறங்கும்போது, கி.மீ எவ்வளவு என்பதை நோட்
பண்ணிக்கொண்டு டிரைவரை அனுப்புவார். திரும்பிச் செல்லும்போது சரியாக
இருக்கிறதா என கவனிக்கத் தவறமாட்டார்.
கோர்ட்டில்
ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டிருக்கும் இயேசு சிலை முன் 5 நிமிட
பிரார்த்தனை செய்து, சிலைக்கு முத்தம் கொடுத்துவிட்டு பணிகளைக் கவனிக் கத்
தொடங்கினால் மதிய உணவு நேரம் வரை அநா வசியமான எந்த இடையூறுகளையும்
அனுமதிக்க மாட்டார். மதிய உணவில் அவருக்கு மீன் இருக்கவேண்டும். ஜெ.
தரப்பின் நகைகளை மதிப்பிடுவதற்காக அவர் சென்னை வந்தபோது, மதிய உணவில்
அவருக்கு மீன் வேண்டும் என்பதையறிந்து திருவல்லிக்கேணி நாயர்
மெஸ்ஸிலிருந்து மீன் வாங்கி வந்திருக்கிறார்கள். "அரை கிளாஸ் டீ மட்டுமே
அவருக்கான புத்துணர்வு' என்கிற கோர்ட் ஊழியர்கள், "ரொம்பவும் டென்ஷனான
வழக்குகள் என்றால் இடையில் தண்ணீர் குடிப்பார், அவ்வளவுதான்' என்கிறார்கள்.
;"சொத்துக் குவிப்பு
வழக்கில் கம்பெனிகள் பல சம்பந்தப்பட்டிருந்ததால் அது தொடர்பான விவரங்களை
தன் இரண்டாவது மகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட குன்ஹா, இதற்காக மகளுடன்
டூவீலரின் பின்சீட்டில் உட்கார்ந்து சென்றுவிடுவார். அரசாங்க காரை
அநாவசியமாகப் பயன்படுத்தமாட்டார்' என்று சொல்கிறார்கள் கோர்ட் ஊழியர்கள்.
கிறிஸ்துமஸையொட்டி அவருக்கு கோர்ட்டில் உள்ளவர்கள் வாழ்த்துச் சொன்னபோது
எல்லோருக்கும் மதிய உணவு வாங்கித் தந்திருக்கிறார். அதுதான் அவர் செய்த
அதிகபட்ச செலவாம். யாருக்கும் பரிசளிப்பதோ, யாரிடமிருந்தும்
அன்பளிப்புகளைப் பெறுவதோ குன்ஹாவுக்கு வழக்கமல்ல.
ஸ்பெஷல்
கோர்ட்டில் டைப்பிஸ்ட், டிரைவர், உதவியாளர்கள் பிச்சமுத்து, சசிகாந்த்
எனக் குறைந்தபட்ச அளவிலான ஊழியர்கள்தான் என்றாலும் அவர்களிடமும் அதிகம்
பேசமாட்டார். தனக்கென்று தனிப்பட்ட முறையில் நண்பர்களும் கிடையாது,
எதிரிகளும் கிடையாது என்ற அடிப்படையில் குன்ஹாவின் வாழ்க்கை முறை
இருக்கிறது. "ஏன் உங்களை யாரும் நெருங்க முடியாதபடி இருக்கிறீர்கள்' என
அவருடைய சமவயது நீதித்துறையினர் கேட்கும்போது, ""நீங்கள் உங்களை எப்படி
வெளிப்படுத்துகிறீர்களோ அப்படித்தான் விளைவுகள் இருக்கும். நீங்கள் அழுகிய
மாம்பழமாக இருந்தால் உங்களைச் சுற்றி ஈ மொய்க்கும். நீங்கள் நெருப்பாக
இருந்தால் ஈ நெருங்காது''’என்று சொல்வார் குன்ஹா.
ஞாயிற்றுக்கிழமைகளில்
ஆன்ட்டணி ஃபெரைரி சர்ச்சுக்கு செல்வதும், ஷாப்பிங் போக வேண்டுமென்றால்
மனைவியை அழைத்துச் செல்வதும் மட்டுமே குன்ஹாவின் தனிப்பட்ட பழக்கங்கள்.
அவருடைய அணுகுமுறையுடன் யாரும் ஒத்துப்போக முடியாது என்பதால் பலவித
கருத்துகள் வெளிப்படும். விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தன்
பணியில் கவனமாக இருப்பது அவரது வழக்கம். மூத்த மகளுக்கு திருமணம்
நிச்சயமாகி, கல்யாணத்தை சீக்கிரம் முடிக்கவேண்டும் என மணமகன் வீட்டார்
வலியுறுத்தியபோதும், "சொத்துக்குவிப்பு வழக்கு முடியட்டும்' எனச்
சொல்லிவிட்டார்.
2014
செப்டம்பர் 27-ந் தேதி பலரும் எதிர்பாராத அதிரடித் தீர்ப்பை அளித்த
நீதிபதி, அன்றைய கோர்ட் நடவடிக்கைகள் முடிந்தவுடன் ஊழியர்களிடம்,
""எனக்குக் கொடுத்த பணியை நான் செய்து முடித்திருக்கிறேன்’''’என்று
சொல்லியுள்ளார். 900 பக்க தீர்ப்பினைப் படித்த நீதித்துறையினரும் சட்ட
வல்லுநர்களும், ""மிக கவனமாகவும் சட்டத்தின் அடிப்படையிலும் தெளிவான
முறையில் ஒவ்வொரு வரியையும் எழுதியிருக்கிறார். அதிலும், "நமது எம்.ஜி.ஆர்
நாளிதழ்' நிதி சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஜெ. தரப்பினர் எப்படியெல்லாம்
திருத்தம் செய்திருக்கிறார்கள் என்பதை நுணுக்கமாக, இன்வெஸ்டிகேஷன்
செய்ததுபோல விரிவாக எழுதியிருக்கிறார்'' என்றார்கள்.
இந்தியாவின்
பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இந்தத் தீர்ப்பு குறித்த
விவரங்கள் தொடர்ந்து கேட்கப்பட்டதால், குன்ஹாவின் வரலாற்று சிறப்பு மிக்க
தீர்ப்பை கர்நாடக அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. குன்ஹாவோ,
""கடவுள் என்னை என்ன செய்யப் பணித்திருக்கிறாரோ அதைச் செய்திருக்கிறேன்''
என்றார் ரொம்பவும் சாதாரணமாக. அவரது தீர்ப்புதான் இப்போது
உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு... தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற
நீதிபதியாக உள்ள குன்ஹா, உச்சநீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பும் உள்ளது.<>-தாமோதரன் பிரகாஷ் நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக