வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

நெடுவாசல் ! வெடிக்கிறது போராட்டம் ! ஹைட்ரோ கார்பன் என்றால் மக்கள் ஏன் இத்தனை அச்சப்படுகிறார்கள்..?

மின்னம்பலம்
தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியை அடுத்தும், புதுக்கோட்டை மாவட்டத்தின் தொடக்கப்புள்ளியிலும் இருக்கிறது நெடுவாசல் கிராமம். ஊருக்கு நடுவே சிறிய கடைத்தெரு. ஊரைச் சுற்றிலும் திரும்பிய பக்கமெல்லாம் தென்னை, வாழை, கரும்பு, சோளம், தானியங்கள் என்று பசுமை பூத்துக் குலுங்கும் கிராமம். அமைதியும் ஆனந்தமும் கைகோர்க்க எளிய மனிதர்களால் நிறைந்த இந்த விவசாய பூமி இன்று போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கடந்த எட்டு நாட்களாக ஒட்டு மொத்த தமிழகமும் நெடுவாசல் கிராமத்தைதான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்த கிராமத்தை இந்தியாவே திரும்பிப் பார்ப்பதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் தென்படத் தொடங்கிவிட்டன. காரணம் ஹைட்ரோ கார்பன் என்னும் எரிபொருள் வஸ்து.

இந்த ஹைட்ரோ கார்பன் மத்திய அரசிற்கு வரமாகவும் நெடுவாசல் கிராமத்திற்கு சாபமாகவும் அமைந்ததுதான் இதில் உள்ள முரண்பாடு.
இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பதாக கண்டறியப்பட, உடனே அதை எடுக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. ஹைட்ரோ கார்பன் பற்றித் தமிழகத்தில் உள்ள சாமானியன் எவனுக்கும் கடந்த வாரம் வரை எதுவும் தெரியாது. ஆனால் இன்று நெடுவாசலில் உள்ள ஐந்து வயது சிறுவன் முதல் உயிரை கையிலே தேக்கி வைத்திருக்கும் பாட்டி வரை ஹைட்ரோ கார்பன் பற்றி அவர்கள் மொழியில் அச்சமூட்டும் பல விவரங்களை சொல்கிறார்கள்.
நாம் காலை பத்து மணி அளவில் நெடுவாசல் கிராமத்திற்குள் நுழைந்தோம். நெடுவாசல் கடைத்தெருவில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக பிரமாண்ட பேனர்கள் பின்னணியில் ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் கூடியிருந்தனர். தமிழகத்தின் முக்கிய செய்தி ஊடகங்கள் அத்தனையும் அங்கே முகாமிட்டிருந்தன. மண்டையைப் பிளக்கும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் தங்கள் போராட்டத்தை முழு முனைப்போடு நடத்திக்கொண்டிருந்தார்கள் நெடுவாசல் கிராம மக்கள். நாம் முதலில் யாரிடம் தகவல் பெறுவது என்று யோசித்தோம். ஆனால் அந்த கேள்விக்கே இடமில்லாமல் போனது. காரணம் யாரிடம் கேட்டாலும் போராட்டம் பற்றிய முழு விவரமும் அவர்கள் விரல் நுனியில் இருந்தது. இதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. அந்த கிராமத்தை சேர்ந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேதியியல் துறையில் நிபுணத்துவம் பெற்று உலக நாடெங்கும் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்த அதே தினத்தில் எச்சரிக்கையடைந்த இளைஞர்கள் இந்த ஹைட்ரோ கார்பன் பற்றிய முழு அறிவையும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் உதவியோடு காட்சித் தொகுப்பாகவும், நீண்ட உரையாகவும் நிகழ்த்தி நெடுவாசல் கிராமம் எதிர்கொள்ளவிருக்கும் அபாயத்தை இக்கிராம மக்களுக்குப் போதித்திருக்கிறார்கள். இதே இளைஞர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் “எங்க ஊர்ல பெட்ரோல் எடுக்கப்போறாங்க’ என்று பெருமையாக கூவித் திரிந்திருக்கிறார்கள். ஆனால் இன்று கல்வியும் தொழில்நுட்ப அறிவும் இவர்களின் கண்களை திறந்துள்ளது.

கசங்கிய சட்டையும், கைலியுமாக போராட்டக் குழுவிற்கு உதவிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நம் கவனத்தை ஈர்த்தார் அவரை அழைத்து எப்படி தொடங்கியது இந்த போராட்டம் என்று கேட்டோம். அந்த இளைஞர் பெயர் நீலவன். எம்எஸ்ஸி முடித்துவிட்டு சென்னையில் தனியார் திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இவர் தான் பிறந்த ஊருக்காக போராட ஊர் திரும்பி கடந்த ஒரு வாரகாலமாகப் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் நம்மிடம் பேசும் போது. “நான் சென்னையில் படித்தாலும் அடிப்படையில் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். அதுதான் என்னை இந்த போராட்ட களத்திற்கு இழுத்து வந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஒரு கேபினட் குழு கூடி நெடுவாசல் உள்ளிட்ட 33 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை வெளியிட்டது. வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் எங்கள் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து ‘சேவ் நெடுவாசல்’ (save neduvasal) என்ற குழுவைத் தொடங்கினார்கள். அந்தக் குழுவில் நாங்கள் 256 இளைஞர்கள் இணைந்தோம். எதற்காக இணைந்தோம் என்றால், எங்கள் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரி வாயுவை எடுக்கும் திட்டத்தை அனுமதித்தால், எங்கள் விவசாய நிலங்களும் எங்கள் விவசாயிகளும் எப்படி அழிக்கப்படுவார்கள்?, எப்படி விவசாய நிலங்கள் பாலைவனமாகும்? என்பதை எங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. எங்கள் குழு முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டர் என அனைத்து சமூக ஊடகங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறது. நாங்கள் எங்கள் கிராம மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம். அதன் விளைவுதான் தற்போது நீங்கள் காணும் எங்கள் கிராம மக்களின் போராட்டம். இந்த போராட்டத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் எடுத்து செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எங்கள் போராட்டத்தை ‘சேவ் நெடுவாசல்’ குழுவில் உள்ள இளைஞர்கள் வழிநடத்தி வருகிறார்கள். எங்கள் ஊரைச் சேர்ந்த பல இளைஞர்கள் வேதியியல் துறையில் நிபுணத்துவம் பெற்று வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் ஆய்வாளர்களாகவும், பொறியாளர்களாகவும் மேலாளர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் இணைந்து உருவாக்கிய காட்சித் தொகுப்பும் உரைவீச்சும் எங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் ஊருக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் வாகனங்கள் வரும். அதைப் பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கும். “ எங்கள் ஊரில் பெட்ரோல் எடுக்கப்போகிறார்கள். எங்கள் ஊர் பணத்தில் மிதக்கப்போகிறது” என்றெல்லாம் கனவில் நாங்கள் மிதந்தோம். அப்போது எங்களுக்கு வேதியியல் தெரியாது. ஹைட்ரோ கார்பன் எடுத்தால் எங்கள் கிராமம் என்ன கதிக்கு ஆளாகும் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. அரசு எதைச் செய்தாலும் அதில் நன்மை இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பும் மக்களாகத்தான் நாங்கள் அன்று இருந்தோம். ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க நாங்கள் பழகிவிட்டோம். கல்வி அறிவு எங்கள் கிராமத்தை கவ்வியிருந்த இருளை போக்கிவிட்டது. இன்று வேதியியல் படித்த எங்கள் கிராமத்து இளைஞர்கள் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அரசிற்கே பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு அந்த துறையில் நிபுணத்துவம் பெற்று கோலோட்சிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட மறுநாளே எங்கள் கிராமத்தில் போராட்டத்தை தொடங்க முடிந்தது. இல்லையென்றால் இடிந்தகரை நிலைமைதான் எங்கள் கிராமத்திற்கும் நிகழ்ந்திருக்கும். இறுதியாக நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்றால் எங்களுக்கு இந்த திட்டம் வேண்டாம். எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம். மத்திய அரசு இந்த திட்டத்தை உடனே கைவிட வேண்டும். நாளுக்கு நாள் எங்களுக்கு ஆதரவு பெருகிவருகிறது. அரசியல்கட்சி தலைவர்கள், சமூக நல அமைப்புகள் எங்களோடு சேர்ந்து போராட வந்து செல்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நானே 25க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். வருகின்ற 26ம் தேதி அன்று நெடுவாசல் கிராமத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் படையெடுக்க உள்ளார்கள். அன்று மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடவில்லையென்றால் இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டத்தை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும்” என்று பேசி முடித்தார்.
நாம் தொடர்ந்து போராட்ட களத்தை கவனித்த போது ஒரு விஷயம் நம்மை பெரிதாக சிந்திக்க வைத்தது. இந்த போராட்டத்தில் ஆண்களை விட பெண்கள், அதுவும் வயல்வெளியில் வேலைசெய்யும் பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் ஊடகங்களிடம் தங்கள் கருத்தை முன் வைத்தனர். அவர்களை கவனித்த போது ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முழுப் புரிதலும் அவர்களுக்கு இருப்பது நமக்கு புரிந்தது. அந்த பெண்கள் கூட்டத்திலிருந்த எழுபது வயதைத் தாண்டிய செல்லக்கண்ணுவிடம் மெதுவாக பேச்சு கொடுத்தோம். மனுஷி எரிமலையாக வெடித்து குமுறிவிட்டார்.

“ எங்களுக்கு இந்த மண்ணெண்ணை பொருளு ஊருக்குள்ளே வேண்டாம் ஸார். (ஹைட்ரோ கார்பனை இவர் மண்ணெண்ணை பொருள் சம்பந்தப்பட்டது என்று புரிந்து வைத்திருக்கிறார்) நாங்க கூலி வேலை செஞ்சு பொழைச்சுக்குவோம். நாலு தென்னை மட்டைய எடுத்து அங்கிட்டு வீசினா டீ பலகாரம் கொண்டாந்திருவாக, 130 ரூபா கொடுப்பாங்க. பன்னண்டு மணிக்கு வீட்டுக்கு போயிடுவோம். எங்களுக்கு அந்த தொழில் போதும். இந்த மண்ணெண்ணை யாவரத்தால யாருக்கு ஆதாயம்?. யாரோ ஆதாயம் பெத்துக்கிற நம்ம எதுக்கு நாட்ட விடனும்? இதுவரைக்கும் வெவரம் தெரியாம இருந்துட்டோம். இனிமே மண்ணெண்ண எடுக்க எவனாவது ஊருக்கு வந்தா தலையோட ஊரு போய் சேர முடியாது. நங்கள் எதுக்கும் பயப்படமாட்டோம். பொண்டுக ராஜ்யம் ஸார் எங்க ஊரு. வடக்கு நெடுவாசல்ல இருந்து பஸ் எடுத்துகிட்டு பொண்டுகல போராட்டத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கேன். எலஷனுக்கு ஒரு ஓட்டு கூட போட மாட்டோம். கவர்மெண்டு பள்ளிகூடத்துக்கு புள்ளைங்கல அனுப்ப மாட்டோம். நாங்க எங்க புள்ளைங்களுக்கு வீட்ல பாடம் சொல்லிக் கொடுத்துக்குவோம். கவர்மெண்டு எல்லாத்தையும் சாத்திட்டு போகட்டும். நாங்கள் எப்படியோ பொழைச்சுக்குவோம். கலைவெட்ட ஒம்பது மணிக்கு போனா ஒரு மணிக்கு வேலை முடிஞ்சுடும். இந்த மத்திய கவர்மெண்ட்டு எங்களுக்கு என்ன பண்ணப்போகுது?. என் புருஷன் செத்துப்போனாரு. கவர்மெண்டு 12 ஆயிரம் கொடுத்துச்சு. அதில தலையாரி 5000 ரூபா புடுங்கிகிட்டான். அந்த 12 ஆயிரம் வந்தா எங்க பொழப்பு ஓடுது? நாங்க வாழ்றது செழிப்பான ஊரு, தென்னை, மாமரம், கொய்யா, நெல்லு, கரும்பு, வாழைன்னு தொட்டதெல்லாம் காசுதான். எங்க வீட்டுல ஒரு முருங்க மரம் இருக்குது.. அதுல ஐயாயிரம் காய் காச்சு கிடக்குது. நாளைக்கு அறுத்து விக்கப்போறேன். ஒரு காய் ஐஞ்சு ரூபான்னு வச்சுக்கங்க. எவ்வளவு கிடைக்கும்னு நீங்களே பாத்துக்கங்க. இந்த மண்ணெண்ணை பொருளால ஊரே தரிசாப் போயிடும்னு படிச்ச புள்ளைங்க சொல்லுதுக. எங்க ஊருல கதிர் அறுவாள எடுத்துகிட்டு போனால் ஆறு மரக்கா நெல்லோட திரும்பி வருவோம். இந்த கவர்மெண்டு புழுத்து போன அரிசி அஞ்சு கிலோ கொடுக்குது. அதுக்கும் ஆதார் அட்டைய காட்டணுமாம். இதுதான் இந்த மத்திய கவர்மெண்டு கண்டு பிடிச்சிருக்கு. மண்ணெண்ண பொருளு எங்க ஊருக்கு வேண்டாம். நாட்டுல எவ்வளவோ தரிசு நெலம் கிடக்குது. அங்க போய் ஆராய்ச்சி பண்ணட்டும். இனிமே இங்க யாராவது வந்தா உயிரோட போய் சேர முடியாது. நான் விளையாட்டுக்கு சொல்ல ஸார். பொண்டுக நாங்க மிதிச்சே கொன்னுருவோம்.” என்று குமுறி விட்டார்.
ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன? எதற்காக இந்த மக்கள் இத்தனை அச்சப்படுகிறார்கள்..? அரசு இந்த நெடுவாசல் கிராமத்தில் எப்போது எப்படி ஆராய்ச்சியை தொடங்கியது? இந்த கேள்விகளுக்கான விளக்கத்தை நாளைய பதிவில் காணலாம்.
தொடரும்...
வேட்டை பெருமாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக