வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

மக்கள் அதிகாரம்: சசி – பன்னீர் இருவருக்குமே குறி பதவியும் அதிகாரமுமே

தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் குறித்து மக்கள் அதிகாரம் (தமிழ்நாடு) வெளியிட்டுள்ள அறிக்கை:
 அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் – எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர்-சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல தேர்தல் சூதாட்டத்தில் ஆளை மாற்றுவதைத் தொடர்ந்தால் இன்று பன்னீர், நாளை சசிகலா, அப்புறம் வளர்மதி என்பதுதான் கதியாகும்.
“மூன்றுமுறை முதல்வராக இருந்த என்னை மிரட்டி பதவியைப் பிடிங்கிக் கொண்டார்கள்” என்று ஒப்பாரி வைக்கிறார், பன்னீர்! அதைப் பார்த்து நாம் அனுதாபப்படலாமா? “இதோ, இன்னும் எங்கள் காயங்கள் ஆறவில்லை, வலிகுறையவில்லை. கடந்த வாரம் நீதானே போலீசை ஏவி எங்கள் மாணவனின் கண்ணைப் பறித்தாய், இன்னொருவனின் கையை முறித்தாய்; எங்கள் மீனவரின் முகத்தைச் சிதைத்து ஜெயிலில் அடைத்தாய்; எங்கள் தாயின் மண்டையை பிளந்தாய்; எங்கள் சொத்துக்களைச் சூறையாடினாய்! இப்போது பதவி பறிபோனதென்று எங்களிடம் வந்து முறையிடுகிறாயே, வெட்கமில்லையா? கடந்த மாதம்தான் அலங்காநல்லூரில் நாங்கள் விரட்டியடித்ததை அதற்குள் மறந்துவிட்டாயா” என்றல்லவா நாம் விரட்டவேண்டும்?

“துரோகம் செய்துவிட்டார்! அம்மாவின் கட்சியைப் பிளந்து விட்டார்! எதிரிகளோடு சேர்ந்து சதி செய்கிறார்!” என்று பன்னீரைப் பார்த்துப் பதறுகிறது, சசியின் மன்னார்குடி மஃபியா 25. ஆண்டுகள் தமிழ்நாட்டையே கொள்ளையடித்துக் கோடி கோடியாக சொத்துக்களைக் குவித்து வைத்துள்ள அந்தக் கும்பலின் கூப்பாட்டிற்குக் காதுகொடுப்பார் எவருமில்லை. தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் அந்தக் கும்பலைத் திட்டித் தீர்ப்பதைக் காண்கிறோம்.
இன்று, கொலை வெறியோடு கத்தியை உருவிக்கொண்டு நிற்கும் சசி – பன்னீர் இருவருக்குமே குறி பதவியும் அதிகாரமுமே. ஜெயலலிதா விவாதம், கட்சி ஒற்றுமை தவிர இப்போது நடக்கும் சண்டையில் கூட தவறியும் அவர்களின் இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளைப் பேசுவதில்லை. அந்தப் பழைய கதைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஜெயலலிதாவும் அவரது கட்சியும் இன்று எந்த நிலையில் தமிழகத்தை விட்டுப் போயிருக்கின்றனர் பாருங்கள்!
 வாழ்விழந்த விவசாயிகள், வேலையிழந்த தொழிலாளர்கள், எதிர்காலம் இழந்த வணிகர்கள், உயிரை பறிகொடுக்கும் மீனவர்கள், கல்வி இழந்த தம்பிமார்கள், சமத்துவத்திற்கு ஏங்கும் சகோதரிகள், சாதி தீண்டாமையால் கருகும் தளிர்கள் என போராட்ட வரிசைகள் ஒன்றை ஒன்று முந்துகிறது. மணலை பறிகொடுத்த ஆறுகளும், நீரை பறிகொடுத்த ஏரிகளும், கிராணைட் கொள்ளையால் அழிந்த மலைகள், தாது மணல் கொள்ளையால் பாழானகடற்கரைகள், நீர்நிலைகளை அழித்தவர்கள்தான் விவசாயிகள் மரணத்தை கொச்சைப்  படுத்துகிறார்கள். செய்த வேலைக்கு ஆறு மாதமாக கூலி கொடுக்க வக்கில்லாதவர்கள், வாங்கிய கரும்புக்கும், பாலுக்கும் காசு கொடுக்க திராணியற்ற இந்த அரசும், அதிகார வர்க்கமமும்தான் மக்களிடம் சுரண்டிய பணத்தை கோடிக்கணக்கில் சம்பளமாகவும், லஞ்சமாகவும், கொள்ளையடித்துத் கொழுக்கிறது! பறிகொடுத்த மக்கள் இந்தக் கொள்ளைக் கூட்டத்திடமே ஆட்சியைக் கொடுக்கலாமா?
 அதிகாரிகள் சட்டப்படி செயல்படுவார்கள்; அரசியல்வாதிகள் மக்கள் விருப்பபடி நடப்பார்கள்; நீதிபதிகள் நடுநிலையோடு மனசாட்சிப்படி தீர்ப்பு சொல்வார்கள்; ஒருவர் தவறு செய்தால் மற்றவர்கள் தடுப்பார்கள், தண்டிப்பார்கள் என நம்பிய காலம் மலைறிவிடட்டது! இதை மாற்றியமைக்கப் போராடுவதுதான் ஒரே தீர்வு. இதை சரி செய்வதோ பழுது பார்ப்பதோ முடியாது. மீண்டும் மீண்டும் இந்த கட்டமைப்புக்குள் தீர்வை தேடினால் வாழ்வாதாரங்களும், வாழ்வுரிமைகளும் மேலும் மேலும் பறிபேகும். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொகுத்து பாருங்கள். மோடி அரசியல், ஓ.பி.எஸ். அரசியல் எல்லாம்  அழுகி நாறுகிறது.
 நல்ல நீதி, நிர்வாகம் நிலைநாட்டப்படும் என யாருக்கும் நம்பிக்கை இல்லை. இந்த அமைப்புமுறைக்குள் மக்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றி தரமுடியாத நிலைக்குப் போய்விட்டது. ஓட்டுக்கட்சிகள் வேண்டாம், அதிகாரிகள் வேண்டாம் நாங்களே பார்த்து கொள்கிறோம் என இந்த அமைப்பு முறைக்கு வெளியில் நின்று போராடிய மாணவர்களோடு குமுறி கொண்டிருந்த அனைத்து மக்களும் ஒன்றிணைந்தனர். அத்தகைய மெரினா போராட்ட உணர்வுக்கு, கருத்தாக்கத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆளை மாற்றி சிந்திப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
 ஊழலும், கெள்ளையும், கிரிமினல்மயமும், தேசத்துரோகமும், புற்றுநோயாக இந்த அரசகட்டமைப்பு முழுவதும் பரவி பயனற்றதாகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டால் அதற்கு செவிசாய்க்காமல் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். மக்கள் விரோதமாக மாறிய, நெருக்கடிக்குள் சிக்கிய இந்த அரசுகட்டமைப்பை சரி செய்யலாம் என மீண்டும் மீண்டும் எடுக்கும் முயற்சிதான் சசிகலாவா? ஓ.பி.எஸ்ஸா? என நிற்கிறது.  மெரினா போராட்ட அனுபவத்தில் இந்த அரசுகட்டமைப்பிற்கு வெளியில் மாற்றை, தீர்வைத் தேட வேண்டும் உருவாக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் தமிழக மக்களை மன்றாடுகிறோம்.
 தீ பிடித்த வீடு போல் தீர்க்கப்படாமல் மக்களின் பிரச்சினைகளால் நாடே பற்றி எரிகிறது. ஆங்கிலேயனிடம் கோரிக்கை வைக்கவில்லை, வெளியேறு நாங்கள் பார்த்து கொள்கிறோம் என போராடினோம். இந்த அரசு கட்டமைப்பை நம்பாமல், தமிழக மக்கள் விடமாட்டோம் என விடாப்பிடியாக போராடியதால் வென்றது மெரினாப் போராட்டம்! எப்படி போராட வேண்டும் என அது கற்றுக்கொடுத்துள்ளது!
 மெரினா போராட்டம்.  குமுறிக்கொண்டிருந்த மக்கள் ஒன்றிணைந்த மாபெரும் மக்கள் எழுச்சி. சாதி மத பிளவுகளை சுக்கு நூறாக்கி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்த முன்னுதாரணமிக்க போராட்டம். மத்திய மாநில அரசுகளை பணிய வைத்த போராட்டத்தை,  அரசும், போலீசாரும் எப்படி பழிதீர்த்தனர் என்பதை கண்கள் சிவக்க, நெஞ்சம் பதற மக்கள் அனைவரும் பார்த்தார்கள். கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என கூசாமல் பழி போட முயன்று அவமானபட்டு தோற்றது போலீசு.
 காளையில் பற்றிய தீ காவிரி உரிமைக்கும், கல்வி உரிமைக்கும், பரவக்கூடாது என்ற பய பீதியால் அலங்காநல்லூரிலும், சென்னையிலும், கோவையிலும் திட்டமிட்டு  நடத்தப்பட்டதுதான் போலீசு வன்முறை வெறியாட்டம். அடைக்கலம் கொடுத்த மீனவர்கள், ஆதரித்த மக்கள்,போராடிய மாணவர்கள், முன்னின்ற இளைஞர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக போராடுவதுதான் வீரம்.
மாணவர்களே, இளைஞர்களே வாருங்கள்! தமிழகத்தை மெரினாவாக்குவோம்!
  • வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் (தமிழ்நாடு).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக