புதன், 22 பிப்ரவரி, 2017

திராவிட மொழி ... பிராகி மொழி பலோசிஸ்தான் .. இசையும் திராவிடம்தான்?


பாகிஸ்தானில், குறிப்பாக பலோசிஸ்தானில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் பேசும் திராவிட மொழி ப்ராக்வி. பாகிஸ்தானை தவிர, இரானி பலோசிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும், ட்ர்க்மெனிஸ்தானில் இருக்கும் மார்வ் ஒயாசிஸ் பகுதியிலும் ப்ராக்வி மொழி பேசும் மக்கள் இருக்கின்றனர்.
இப்பகுதியில் பேசப்படும் வேறு எந்த மொழியோடும் இந்த ப்ராக்விக்கு தொடர்பு கிடையாது. ஆனால், தென்னிந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகளோடு ப்ராக்வி மொழிக்கு தொடர்பு இருக்கிறது. இதைப் போலவே, அண்டை மொழிகளோடு சிறிதும் தொடர்பில்லாத இன்னொரு மொழி, மக்யார். மத்திய ஐரோப்பாவின் ஹங்கேரியில் இந்த மொழி பேசப்படுகிறது. இந்த மக்யார் மொழி, ஹங்கேரியில் இருந்து வெகு தொலையில் இருக்கும் ஃபின்லாந்து நாட்டின் ஃபின்னிஷ் மொழியோடு தொடர்புடையதாக இருக்கிறது.
‘கனாதே ஆஃப் கலத்’ இளவரசு ஆட்சிப்பகுதியாக மாறிய 17 ஆவது நூற்றாண்டின் போதுதான் ப்ராக்வி- மக்கள் இனமாக முதல்முறையாக வரலாற்றில் தோன்றுகிறது.
அதற்கு முன்னர் அவர்கள் முகாலய ஆட்சிக்கு கீழ் இருந்தார்கள் என சொல்லப்படுகிறது. இதற்கு போதுமான வரலாற்று சான்றுகள் இல்லை. இண்டோ-ஆரிய மொழிகள் சூழ்ந்திருக்கும் ஒரு பகுதியில் எப்படி ஒரு திராவிட மொழி வந்தது என்ற கேள்விக்கு பதிலாக சில நிபுணர்கள் கூறுவது, ‘திராவிடமாக இருந்திருக்கக் கூடிய சிந்து சமவெளி நாகரீகத்தின் வழி மரபினர்களாக ப்ராக்வி மக்கள் இருக்கலாம்’ என்பது தான். அந்த நாகரீகம் மாயமான வேளையில், ஒரு குழு பலோசிஸ்தானிற்கு சென்று, அங்கு தங்களுடைய பன்மையான மொழியை காத்துக் கொண்டது. மேலும் ஒரு கோட்பாடு, 12 ஆம் நூற்றாண்டின் போதே ப்ராக்விக்கள் அவர்கள் தற்போது இருக்கும் பகுதிக்கு வந்து விட்டதாக தெரிவிக்கிறது. இரண்டு கோட்பாடுகளுக்குமே எந்த நிரூபணங்களும் இல்லை.
1666 ஆம் ஆண்டு தொடங்கி, 1955 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிற்குள் சேர்த்துக் கொள்ளப்படும் வரை கனாதே ஆஃப் கலாத் தனித்தே இருந்தது. அது மிர் அஹ்மது கான் கம்பிரானி பலோச் என்பவரால் நிறுவப்பட்டது. அதன் கடைசி அரசர் மிர் அஹமது யார் கான் அஹ்மத்ஸாய் பலோச். கலாத்தின் கான்’கள் தனிப்பட்ட முறையில் ப்ராக்வி பேசுபவர்கள் தான். ஆனால்,பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருந்த பலோச் மொழியை ஆட்சி மொழியாக தேர்வு செய்தனர்.
ப்ராக்வி எனும் வார்த்தை, ப்ராக்வி மொழியில் இருந்து உதித்தது கிடையாது. இப்ராஹிம் இனத்தவர்களின் மொழியில் இருந்து பெறப்பட்ட சிரைகி பிராகோவில் இருந்து அந்த வார்த்தை கடன் வாங்கப்பட்டிருக்கிறது. ப்ராக்வி மக்கள் தற்போது இருக்கும் பிரதேசத்திற்குள் குடியேறியதாக சொல்லப்படும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், இந்த வார்த்தை அறிமுகமாகியிருக்கலாம். ஆனால், இது வெறும் யூகம் தான். இதற்கு போதுமான சாட்சியங்கள் கிடையாது.
தற்போது, ப்ராக்வி பிரபஞ்சத்தில் மொத்தம் இருபத்தியேழு பழங்குடிகள் இருக்கின்றன. ஆனால், ப்ராக்வி என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் எல்லாம் ப்ராக்வி மொழி பேசுபவர்களாக இருப்பதில்லை. பழங்குடிகளின் குழுவை குறிப்பதற்கும் ப்ராக்வி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் சில ப்ராக்வி மொழியும் பலோச் மொழியும் பேசுகிறார்கள். சிலர் பிரத்யேகமாக பலோச் பேசுகிறார்கள். ப்ராக்வி பழங்குடி நபர் மற்றும் ப்ராக்வி மொழி பேசுபவர் எனும் போது ஒரு மக்கள் குழுவை நாம் குறிப்பதில்லை. இதன் காரணமாக, ப்ராக்வி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பது பெரும் சிரமமாகி இருக்கிறது. தற்போது இருக்கும் எண்ணிக்கைகள் சிறந்த யூகங்கள்.
ஆங்கிலேயர்கள் இந்திய துணைகண்டத்திற்குள் நுழைந்த வேளையில் தான், முதன்முதலாக, ப்ராக்வி மொழி அதன் அண்டை மொழிகளிலிருந்து வித்தியாசமாக இருப்பதை கவனித்தார்கள். . 1816 ஆம் ஆண்டு முதன்முதலில் ஹெச். பாட்டிங்கர் அதை குறிப்பிட்டார். 1880 ஆம் ஆண்டு, இ.ட்ரம்ப் இந்த மொழி குறித்து முதல் அறிவியல் ஆய்வை வெளியிட்டு, அது திராவிட மொழி என அடையாளப்படுத்தினார். இன்று வட திராவிட துணை குழு மொழிகள் பட்டியலில் , ( மேற்கு வங்களாத்திலும் ஜார்கண்டிலும் பேசப்படும்) குருக் அல்லது ஓரன் மற்றும் (பீஹாரிலும் மேற்கு வங்காளத்திலும் பேசப்படும்) மால்டோ மொழியோடு இது பட்டியலிடப்பட்டிருக்கிறது.
ப்ராக்வி மொழியிலும், பிற திராவிட மொழிகளுக்கும் இருக்கும் ஒற்றுமையை பார்க்கும் போது, இந்த தொடர்பை புரிந்து கொள்ள முடியும். திராவிடத்தில் இருந்து துவங்கும் ப்ராக்வி வார்த்தைகளின் பட்டியல் :
இன்று - ஐனோ (ப்ராக்வி), இன்னு (தமிழ், மலையாளம்)
நீ - நீ (ப்ராக்வி), நீ (தமிழ், மலையாளம்)
வா - பா (ப்ராக்வி), வா (தமிழ், மலையாளம்)
குறட்டை - குர்கௌ (ப்ராக்வி), குறட்டை (தமிழ்)
கண் - ஸன் (ப்ராக்வி), கண் (தமிழ்)
கல் - ஸல் (ப்ராக்வி) , கல் (தமிழ்)
பால் - பால் (ப்ராக்வி), பால் (தமிழ்)
தகவல் - ஹவல் (ப்ராக்வி), தகவல் (தமிழ்)
ப்ராக்வி மொழியின் எண் முறையில்,எண் இரண்டும் (கன்னட ‘இரடு’ வார்த்தையில் இருந்து ‘இரட் அகின்’ வார்த்தை) எண் மூன்றும் ( தமிழ் ‘மூணு’ மற்றும் கன்னட ‘மூரு’ வார்த்தையில் இருந்து ‘முசித் அகின்’) திராவிட மொழிகளில் இருந்து தோன்றியவை . நான்கில் இருந்து, இண்டோ - ஆரிய மொழிகளில் தாக்கம் புலப்படுகிறது. ப்ராக்வி வார்த்தையான ‘அசித்’ - எண் ஒன்று - வேறெந்த மொழிகளோடும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. திராவிட மொழிகளிலிருந்து நீண்ட காலத்திற்கு விலகி இருந்த காரணத்தினால், ப்ராக்வி மொழியின் மீது அதன் அண்டை மொழிகளின் தாக்கம் பெருமளவு இருக்கிறது . தற்போது அதன் சொல்லகராதி 15 சதவிகிதம் மட்டுமே திராவிடமாக இருப்பதாகவும், மீதி பலோச் , பெர்சிய, சிந்தி, உருது மொழிகளால் அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ப்ராக்வியின் உயிர் ஒலிகள் முழுமையாக பலோச் மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. ஆனால், சில பலோச் வார்த்தைகள் ப்ராக்வி மொழியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ப்ராக்வி மொழி பேசும் மொழியாக மட்டுமே இருப்பதாலும், அதை பேசுபவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதாலும் - ப்ராக்வி மொழியின் இலக்கிய மரபு அடிப்படை நிலையிலேயே தான் இருக்கிறது. ப்ராக்வியில் எழுதப்பட்ட முதல் காவியம் 1759 அல்லது 1760 ஆம் ஆண்டில் மலிக்தத் கார்சின் கலாட்டி எழுதிய ‘துஃபத்-அல்-அஜெயிப்’.இதன் கையெழுத்து பிரதி கிடைக்கப்பெறவில்லை; தற்போது இருப்பது 1916 ஆம் ஆண்டில் செய்த மறுபதிப்பு பிரதியில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் மட்டுமே.19 ஆம் நூற்றாண்டில் இப்பிரதேசத்தில் மற்ற மொழிகளில் பயன்பட்டுக் கொண்டிருந்த பெர்சோ- அரபிய அமைப்பைக் கொண்டு ப்ராக்விக்கு கையெழுத்து வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயரான சர் டெனிஸ் பிரேஸ், இம்மொழிக்கு முதல் இலக்கணம் எழுதினார். கல்வியறிவு குறைவாக இருப்பதனால், எழுத்துக்கள் கால இடைவெளியில், விட்டு விட்டு அச்சிடப்படுகின்றன. இது இன்னும் தொடர்கிறது.
இன்று யுனெஸ்கோ, பிராக்வியை ‘அருகிவரும்’ மொழிப்பட்டியலில் சேர்த்திருக்கிறது ப்ராக்வி. தேசம் ஆதரவு அளிக்காத காரணத்தினால், ப்ராக்வி மொழியில் இடத்தில் பலோச் மொழி வந்தமர்ந்து, ப்ராக்வி பேசுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. பாகிஸ்தான் நாடு உருதுவிற்கு முக்கிய இடம் அளித்து, அரசியல் மற்றும் வரலாற்றுக் காரணங்கள் பிராந்திய மொழிகள் பலவற்றை ஒடுக்கியிருக்கிறது.இந்நிலையில்,ப்ராக்வி பல நூற்றாண்டுகள் கடந்து வந்திருப்பது பெரும் ஆச்சரியம். இந்த மொழியை மரணிக்க நாம் அனுமதிப்பது, கவலைக்குரியதாகும்.
கட்டுரையாளர் : கார்த்திக் வெங்கடேஷ் - ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்; அச்சு நிறுவனத்தில் ஆசிரியராக வேலை செய்பவர்.
தமிழில்: சினேகா
http://www.livemint.com/Sundayapp/lWCoIZ2K5dPycrhS1gk6nJ/A-slice-of-south-India-in-Balochistan.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக