புதன், 1 பிப்ரவரி, 2017

திருமாவளவன் : தமிழக அரசின் சட்டம் மாணவர்களை திசைதிருப்புகிறதா?மருத்துவ நுழைவுத் தேர்வு

மருத்துவ நுழைவுத் தேர்வு : தமிழக அரசின் சட்டம் மாணவர்களை திசைதிருப்புகிறதா?
தொல்.திருமாவளவன் கேள்வி? தமிழக அரசு தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ‘'2017ம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்டம்' என்ற பெயரில் புதிய சட்டத்துக்கான மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. அதுபோலவே முதுநிலைப் படிப்புகளுக்கான சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் இயற்றப்படுவதால் தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதவேண்டியதில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கான சட்டம் மத்திய அரசால் முதலில் அவசர சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு பின்னர் கடந்த ஜூலை 2016 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது. இந்திய மெடிக்கல் கவுன்சில் (திருத்த) சட்டம் 2016 என அழைக்கப்படும் அந்த சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.


மத்திய அரசின் அதிகார பட்டியலில் உள்ள 66 ஆவது பிரிவு உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. அந்த அதிகாரத்தின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையிலும்தான் மத்திய அரசால் நீட் நுழைவுத் தேர்வுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு சட்டத்துக்கு திருத்தம் செய்தோ அல்லது அதற்கு முரணாகவோ மாநில அரசு சட்டம் இயற்றினால் அது செல்லுபடியாகாது. எனவே, நுழைவுத் தேர்வு தேவையில்லை என இப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் ரத்தாவது உறுதியென சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, இந்த சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்பு தமிழக அரசு அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறவில்லையா ? அல்லது அவர் தமிழக அரசைத் தவறாக வழி நடத்துகிறாரா ? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

தற்போதுள்ள சேர்க்கை முறை கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர உதவியாக இருக்கிறது என்பதுபோல சிலர் பேசுகின்றனர். அது தவறு என்பதை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் புள்ளிவிவரம் எடுத்துக்காட்டுகிறது. 2014-15 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் வெறும் 37 பேர்; 2015-16 ஆம் ஆண்டில் அது 24 ஆகக் குறைந்துவிட்டது. மருத்துவப் படிப்பில் 95% இடங்களை தனியார் பள்ளி மாணவர்களே பெறுகிறார்கள். பள்ளிக் கல்வியும் மருத்துவக் கல்வியும் பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் என்ற நிலையை மாநில அரசு உருவாக்கிவிட்டு, கிராமப்புற மாணவர்களுக்கு உதவவே சட்டம் கொண்டுவருகிறோம் என்பது ஏற்புடையதல்ல.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்தாமல், பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு அக்கறை காட்டாமல், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் குரல் கொடுக்காமல் இப்படி சட்டங்களை நிறைவேற்றுவது மாநில அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதற்காக மட்டுமே பயன்படும். இதை நம்பி தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகாமல் இருந்துவிட்டால் அவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது நுழைவுத் தேர்வு வேண்டாம் எனக் கூறுகிற மாநிலங்களுக்கு விலக்களிக்கும் விதமாக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.
தலைவர், விசிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக