புதன், 1 பிப்ரவரி, 2017

பாலூட்டும் தாய் .. ஜெர்மன் விமான நிலையத்தில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.

bbc.com :ஜெர்மனி நாட்டின் பிராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் ஒரு பெண், பாலூட்டும் தாயா என்று நிரூபிக்க தனது மார்பகங்களை அழுத்தி காட்ட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர் என்று அந்த பெண் காவல் துறையினரிடம் என்று புகார் அளித்துள்ளார்.
’அவமானகரமான , அதிர்ச்சியூட்டும் நிகழ்வு’- காயத்ரி போஸ் புகார் செய்துள்ள காயத்திரி போஸ் இந்த அனுபவம் தன்னை ''அவமானப்படுத்துவதாக'' இருந்தது என்றும் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார். பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அவர் 'பிரெஸ்ட் பம்ப்'( breast pump) என்ற பாலூட்டும் தாய்மார்கள் மார்பகத்திலிருந்து பாலை எடுக்கும் கருவியை வைத்திருந்தார். ஆனால் அவர், அவரது குழந்தை இல்லாமல் தனியாக பயணம் செய்ததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை தடுத்தனர்.


அவர் பாலூட்டும் தாய்தானா என்று நிரூபிக்க தனது மார்பகங்களை அழுத்தி காட்ட வேண்டும் என்று கூறினார். ஜெர்மனி போலிசார் இந்தப் பெண்ணை தாய்ப்பால் கொடுக்க முடியுமா என்று நிரூபிக்குமாறு தாங்கள் கேட்டதாகக் கூறப்படுவதை மறுத்தனர். முன்னதாக அவர்கள் இந்தக் குறிப்பான குற்றச்சாட்டுகள் மீது கருத்து தெரிவிக்க மறுத்திருந்தனர். ஆனால் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தாங்கள் கடைப்பிடிக்கும் வழக்கமான நடைமுறையில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். உங்கள் குழந்தை எங்கே ? காயத்ரி போஸ் தனியாகப் பயணம் செய்தார். கடந்த விழயனன்று அவர் பாரிஸ் நகரத்திற்கான விமானத்தில் செல்வதற்காக பிராங்க்ஃபர்ட் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அந்த சமயத்தில்தான் அவர் பாதுகாப்பு சோதனை நிலையத்தில் நிறுத்தப்பட்டார். 'விமானத்திற்குள் எடுத்து செல்லும் கைப்பையில் பிரெஸ்ட் பம்ப் இயந்திரம் இருந்தது. அந்த பை எக்ஸ் ரே இயந்திரத்தின் வழியாக சென்றதும், கேள்வி கேட்பதற்காக என்னை தனியாக அழைத்தனர்,'' என்றார் 33 வயதான சிங்கப்பூரை சேர்ந்த காயத்ரி போஸ் . அவர்களது கேள்வி ஒரு நம்பாத தொனியில் இருந்தது. ''நீங்கள் பாலூட்டும் தாயா?'' உங்கள குழந்தை எங்கே? உங்கள் குழந்தை சிங்கப்பூரில் உள்ளதா?'' என்று கேட்டனர் என்றார். எனது பையில் இருந்த இயந்திரம் பாலை எடுக்கப் பயன்படும் பிரெஸ்ட் பம்ப் கருவி என்று சொன்னபோதும் அவர்கள் நம்பியதாக தெரியவில்லை என்றார் காயத்ரி. கயாத்திரியின் கடவுச்சீட்டு அவரிடம் இருந்து பெறப்பட்டது.

மேலும் விசாரணை செய்ய ஒரு பெண் காவல் துறை அதிகாரியால் அழைத்துச் செல்லப்பட்டார். நிரூபிக்க வற்புறுத்தல் ''அறையின் உள்ளே, அந்த காவல் துறை அதிகாரி நான் பாலூட்டும் தாயா என்று நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்,'' என்றார் காயத்திரி. எனது பிளவுசைக் கழற்றி எனது மார்பகங்களை காட்ட வேண்டும் என்றும் பாலுட்டுவதாகவும் தாய்ப் பால் வெளியேறுவதாகவும் இருந்தால், எனது மார்பில் எதையும் ஏன் பொருத்தவில்லை என்றும் கேட்டனர்,'' என்றார். 'அந்த கருவியை நான் எப்போதும் பொருத்திக்கொள்ள தேவை இல்லை என்றும் அதை முலைக் காம்பில் பொருத்திக்கொண்டால், அந்த கருவி வேலை செய்யும் என்றேன். எனது கையால் அழுத்தி சிறிதளவு பாலை வெளிப்படுத்துமாறு அந்த பெண் அதிகாரி கேட்டார்,'' என்றார்.

 ''அந்த அதிகாரி சொன்னது போல செய்தேன். நான் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தேன். செய்யச் சொன்னதை செய்துகொண்டிருந்தேன் . என்னை சிரமப்படுத்த அவர்கள் முடிவு செய்திருந்தால் என் நிலை என்ன என கவலைப்பட்டேன்,'' என்றார் காயத்ரி. ''எனக்கு என்ன நடந்தது என்று அந்த அறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்.நான் அழத் தொடங்கினேன். மிகவும் கவலை அடைந்தேன்,'' என்றார். காயத்ரியின் கடவுச்சீட்டை தருவதற்கு முன்பு அவரது பிரெஸ்ட் பம்ப் கருவியை சோதனை செய்தனர். பிறகு தான் பாரிசுக்கு செல்ல அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறினார். அவரை சோதனை செய்த அதிகாரியின் பெயரை கேட்டபோது, ஒரு தாளில் தன் பெயரை எழுதித் தந்தார் என்று கூறினார் காயத்ரி.

 'மிகவும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு 45 நிமிடங்கள் நடந்த அந்த சம்பவம் மிகவும் அவமானப்படுத்தும்" மற்றும் "மிகவும் அதிர்ச்சியூட்டும்" நிகழ்வாக இருந்தது என்றார் காயத்ரி. இறுதியாக சோதனை முடித்தும், இவ்வாறு ஒரு நபரை நடத்தக்கூடாது என்று நான் அவர்களிடம் தெரிவித்தேன். நீங்கள் என்ன செய்தீர்கள் தெரியுமா? எனது மார்பை காட்ட சொன்னீர்கள் என்றேன். அந்த அதிகாரி ’’தற்போது எல்லாம் முடிந்து விட்டது. தயவு செய்து கிளம்புங்கள்’’ என்று கூறினார். அவர் தனது செயலுக்கு வருத்தப்பட்டதாகவோ அல்லது பச்சாதாபம் கொண்டது போல தெரியவில்லை,'' என்றார் காயத்ரி . காயத்ரி ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தையும், ஏழு மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளன. விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட சம்பவத்திற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் சத்தியம் குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
சந்தேகம் ஏற்பட்டால் பொருட்களை சோதனை செய்வதற்கான தேவையை நான் மதிக்கிறேன்.ஆனால் ஒரு நபரின் தன்மானத்தை மீறும் அளவில் அது நடந்தால், அது சரியல்ல. அது எல்லை மீறல்,'' என்றார். இந்த சாதாரண நிகழ்வு அல்ல பிராங்பேர்ட் விமான நிலையத்தின் போலிஸ் பிரிவின் செய்தி தொடர்பாளர், காயத்ரி போஸ் பாதுகாப்பு சோதனைக்காக நிறுத்தப்பட்டார் என்றும் அவரது பிரேஸ்ட் பம்ப் கருவி வெடிபொருளாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார். ஆனால் காயத்ரி குறிப்பிட்டது போல ஒரு பெண் அதிகாரி அவர் பாலூட்டும் தாயா என்று நிரூபிக்குமாறு கூறியதாக காயத்ரி தெரிவித்ததை அவர் மறுத்தார்.

''கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காயத்ரியின் குற்றச்சாட்டை பெடரல் காவல் துறையினர் அறிந்துள்ளனர். காயத்ரி ஒரு பெண் அதிகாரியால் சோதனை செய்யப்பட்டார் என்றும் அந்த அதிகாரியும் இரண்டு குழந்தைகளுக்கு தாய்,'' என்று காவல் துறையினர் பிபிசி மின்னஞ்சல் வாயிலாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். ''பயணி காயத்ரி ஒரு பாலூட்டும் தாய் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று பாதுகாப்பு சோதனையில் சொல்லப்பட்டது என்ற குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம்,'' என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. 'பாலூட்டும் தாய் என்று ஒரு தாயை நிரூபிக்குமாறு சொன்னது மிகவும் கேலிக்குரியது ", என்றார் பிளைட்குளோபல் என்ற விமான போக்குவரத்து சஞ்சிகையை சேர்ந்த விமான போக்குவரத்து நிபுணர் எல்லிஸ் டெய்லர். ''இது சாதாரண நிகழ்வு அல்ல. அதிகாரத்தில் உள்ள ஒரு சிலர் எல்லையை மீறி செயல்படுகின்றனர்.

என்னை பொறுத்தவரை இது முன்னெப்போதும் இல்லாத மற்றும் மிகவும் அவமானகரமான நிகழ்வு,'' என்றார். பயணியின் பொருட்களை ஒரு எக்ஸ்-ரே இயந்திரத்தின் ஊடாக செலுத்தச் சொல்வது தான் வழக்கமான நடைமுறை. இதற்கு பின், அவர்களின் பொருட்களில் ஏதாவது வெடி பொருட்களின் எச்சங்கள் உள்ளனவா என்று சோதனை செய்வதுதான் இது வரை உள்ள நடைமுறை என்று அவர் கூறினார். அதிகாரிகள் , பயணி கொண்டுவரும் பிரேஸ்ட் பம்ப் கருவி எவ்வாறு வேலை செய்கிறது என்றும் அதை சுவிட்ச் ஆன் செய்ய சொல்லலாம் .
ஆனால் இந்த கருவியை கொண்டுவர ஒரு பயணிக்கு தேவை இருக்கிறதா என்று விசாரிப்பது விநோதமானது. இந்த கருவியை ஒரு ஆண் கொண்டுவந்திருந்தால் என்ன செய்யமுடியும்? அவரால் தான் தாய்ப்பால் கொடுப்பவர் என்று நிரூபிக்க முடியாது,'' என்றார் எல்லிஸ் டெய்லர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக