ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

மக்களையும் செய்தியாளர்களையும் தாக்கும் மன்னார்குடி குண்டர்கள் ! வேடிக்கை பார்க்கும் போலீஸ்!

கல்பாக்கம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் பொதுமக்கள், செய்தியாளர்களைத் தாக்கிய மன்னார்குடி குண்டர்களை பாதுகாக்கும் வகையில் போலீசார் நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மன்னார்குடி குண்டர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருவதால் அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்துவிடக் கூடாது என்பதற்காக கைதிகளாக கல்பாக்கம் அருகே கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலாவால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 90 எம்.எல்.ஏக்கள் இந்த ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மன்னார்குடி குண்டர் படையின் கட்டுப்பாட்டில் மக்களின் பிரதிநிதிகளாக எம்.எல்.ஏ.க்கள் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கூவத்தூர் பொதுமக்களையும் இந்த மன்னார்குடி குண்டர்கள் படாதபாடுபடுத்தி வருகின்றனர்.
இதனால் கூவத்தூர் பொதுமக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று மாலை கூவத்தூர் ரிசார்ட்டுக்கு 2-வது முறையாக சசிகலா சென்றார். அங்கு எம்.எல்.ஏக்களிடம் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
அப்போது ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்க வேண்டும் என பொதுமக்களும் செய்தியாளர்களும் செல்ல முயன்றனர். ஆனால் மன்னார்குடி குண்டர்கள் பொதுமக்களையும் செய்தியாளர்களையும் தாக்கினர்.
மன்னார்குடி குண்டர்கள் போலீசுக்கு பின்புறம் நின்று கொண்டிருந்தனர். அப்போது தங்களைத் தாக்கிய குண்டரை பொதுமக்களும் செய்தியாளர்களும் அடையாளம் காட்டி கைது செய்யுங்கள் என வலியுறுத்தினர். ஆனால் போலீசார் பொதுமக்கள், செய்தியாளர்களை தடுத்து வாக்குவாதம் செய்வதில்தான் குறியாக இருந்தனர்.
அத்துடன் பொதுமக்கள், செய்தியாளர்கள் கையில் மன்னார்குடி குண்டர்கள் சிக்கிவிடாமல் இருக்க அந்த கும்பலுக்கு போலீஸ் பாதுகாப்பாக இருந்தனர். இதனால் கூவத்தூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகிறது.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக