செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ரித்திகா 3 வயது ! பாலியல் பலாத்காரம் .. கொள்ளை .. கொலை ! குண்டர்கள், கொலைகாரர்கள் ஆட்சி செய்தால்....

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் பழனி. இவர், மீன்பிடி தொழில் இல்லாத நேரத்தில் பிரிண்டிங் போன்ற கூலி வேலைக்கு செல்வார். இவரது மனைவி கலைவாணி. இவர்களது குழந்தைகள் பாலா (12), ரித்திகா (3). கடந்த 18ம் தேதி காலை 11 மணிக்கு ரித்திகா வீட்டு வாசலில் விளையாட சென்றவள் வெகு நேரமாகியும் வரவில்லை. உடனே, தாய் கலைவாணி வெளியே வந்தார். அவளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர் வீடுகள் மற்றும் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அன்று மாலை ரித்திகாவின் பெற்றோர் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் திருவொற்றியூர் ராஜாஜி நகர் அருகே குப்பை கிடங்குக்கு வந்த ஒரு லாரி சேகரித்த குப்பை கழிவுகளை தானியங்கி தொழில்நுட்பம் மூலம் வெளியேற்றிக் கொண்டு இருந்தது. திடீரென ஒரு குழந்தை உடலில் தீக்காயத்துடனும், தலையின் பின் பகுதியில் ரத்தக்காயத்துடனும், வாயில் துணி அமுக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக கீழே விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஊழியர்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரித்தனர். ஏற்கனவே, எண்ணூர் போலீசார் கடந்த 18ம் தேதி ஒரு குழந்தை மாயமாகி உள்ளதாக அனைத்து காவல்நிலையங்களும் தகவல் தெரிவித்திருந்தனர். இதை கருத்தில் கொண்டு அங்கு வந்த போலீசார், எண்ணூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.


அதன்பேரில், குழந்தை மாயமானதாக புகார் அளித்த ரித்திகாவின் தந்தை பழனி மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு எண்ணூர் போலீசார் திருவொற்றியூர் குப்பை கிடங்குக்கு விரைந்தனர்.அங்கு சடலத்தை பார்த்ததும் தங்களது குழந்தைதான் என்பதை உறுதி செய்த தந்தை பழனி மற்றும் உறவினர்கள் கதறினர். இது, அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. போலீசார் ரித்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிறகு ரித்திகா உடல் அன்று மாலையே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் ரித்திகாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். இரவு சுமார் 7.30 மணிக்கு திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி, ஆர்டிஓ வீரப்பன், மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் வந்து ரித்திகா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். அங்கிருந்து புறப்பட முயன்றபோது, 200க்கும் மேற்பட்டோர் கலெக்டர் சுந்தரவல்லியை முற்றுகையிட்டு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். அதிகாரிகள் அவரை மீட்டு, பத்திரமாக காரில் அனுப்பினர்.இந்நிலையில், நேற்று காலை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எர்ணாவூர் - மணலி சாலையில் கூடி, சிறுமியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எண்ணூர் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சுனாமி குடியிருப்பில் போலீசார் குவிக்கப்பட்டனர்.கொலை செய்யப்பட்ட ரித்திகாவின் உடலுக்கு, மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம், திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி, முன்னாள் கவுன்சிலர் கே.பி.பி.சங்கர், திமுக நிர்வாகிகள் தனியரசு, குறிஞ்சி கணேசன் மற்றும் பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். மாதவரம் சுதர்சனம் சொந்த நிதியில் இருந்து ₹10 ஆயிரம் நிவாரண உதவியாக ரித்திகா பெற்றோரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, ரித்திகாவின் கொலை தொடர்பாக எண்ணூர் போலீசார் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் விசாரணை நடத்தினர். அதில், கடந்த 18ம் தேதி காலை ரித்திகா தனது வீட்டுக்கு எதிர் வீட்டில் உள்ள ரேவதி என்பவரது குழந்தையான கமலியுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். பின்னர், கமலியுடன் ரித்திகா ரேவதியின் வீட்டுக்கு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால், போலீசார் ரேவதியிடம் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக ரேவதி பதிலளித்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, ரேவதி ரித்திகாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ரேவதியை போலீசார் கைது செய்து விசாரணையில் நடத்தினர்.

அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: ரித்திகா வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் ரேவதி (27). இவரது கணவர் கமலக்கண்ணன். இவர்களுக்கு 2 குழந்தைகள். தம்பதியினர் லாண்டரி தொழில் செய்து வந்தனர். ரேவதியின் நடத்தை சரியில்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரேவதியை விட்டு கமலக்கண்ணன் பிரிந்துவிட்டார். கணவர் பிரிந்து சென்றவுடன் ரேவதி தனது தந்தை சேகர், தாய் ராஜாம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துள்ளார். அப்போது, ரேவதிக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரை சந்திக்க வீட்டுக்கு அடிக்கடி பல ஆண் நண்பர்கள் வந்துள்ளனர்.

ரித்திகா மாயமானதாக கூறப்பட்ட அன்று, எதிர் வீட்டில் வசிக்கும் ரேவதியின் வீட்டுக்கு ரித்திகா சென்றுள்ளார். அப்போது, அவளது இடுப்பில் வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் காலில் வெள்ளி கொலுசு அணிருந்தாள். இதை பார்த்ததும் ரேவதிக்கு அந்த வெள்ளி நகையை அடைய வேண்டும் என ஆசை வந்துள்ளது. உடனே, அரைஞான் கொடி, கொலுசை ரேவதி கழட்டி உள்ளார். அங்கு குடிபோதையில் இருந்த தந்தை சேகரை ரேவதி அழைத்து அரைஞாண் கொடியை கழற்றி கொடுக்குமாறு கூறியுள்ளார். உடனே, சேகர் ரித்திகாவின் ஆடைகளை கழற்றி அரைஞாண் கொடியை அறுக்க முயன்றுள்ளார். குழந்தை ரித்திகா கூச்சலிட்டுள்ளார். இதனால், பாதுகாப்புக்காக மகள் ரேவதியை வெளியே நிறுத்தி உள்ளார். அரைஞாண் கொடியை அறுத்து கொடுத்தவுடன் ரேவதி, எர்ணாவூர் ராமகிருஷ்ணன் நகரில் உள்ள அடகு கடைக்கு சென்று, அதை வைத்து ₹2,200 வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

இதற்கிடையே, போதையில் இருந்த சேகர் ரித்திகாவை ஆடையில் இல்லாமல் பார்த்ததும், அவளை பலாத்காரம் செய்துள்ளார். ரித்திகா கதறியதால் அவள் வாயில் துணியை அமுக்கி, தாக்கியுள்ளார். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளாள். பிறகு, ரித்திகாவை இன்னொரு துணியால் சுற்றி வீட்டின் ஓரத்தில் வைத்துள்ளார். அடகு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய ரேவதி, குழந்தை ரித்திகா உயிரிழந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கினார்.

அப்போது, வீட்டுக்கு வெளியே விளையாடிய ரித்திகா காணாமல் போனது குறித்து அனைவரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பதை கேட்டார். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால், என்ன நடக்குமோ என பயந்து அன்று மதியம் ரித்திகாவை ஒரு கட்டைப் பையில் போட்டுக்கொண்டு, வீட்டின் அருகே தெருமுனையில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் வீசியுள்ளார். மேலும் சந்தேகம் ஏதும் வரக்கூடாது என்பதற்காக ரித்திகா சடலத்தின் மேல் குப்பையையும் கொட்டியுள்ளார்.
இந்த தகவலை ரேவதி வாக்குமூலமாக அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதன்பிறகு ரேவதியின் தந்தை சேகரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஆனால், அவர் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கொலைக்கு மகள்தான் காரணம் என்றார். இரண்டு பேரும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை பார்த்தால், வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரேவதியின் தந்தை சேகர், தாய் ராஜாம்மாள் மற்றும் ராஜசேகர், செந்தில்குமார், செல்வகுமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ரித்திகாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
7 கி.மீ. பயணித் ரித்திகாவின் உடல்:

ரித்திகா மாயமான அன்று இரவு அவருடைய சடலத்தை ரேவதி கட்டை பையில் போட்டு குப்பையில் வீசியுள்ளார். மறுநாள் (19ம் தேதி) காலை 11.30 மணியளவில் சுனாமி குடியிருப்பில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டிகளில் கொட்டப்பட்ட குப்பையை சேகரிக்க மாநகராட்சி தானியங்கி குப்பை வண்டி வந்துள்ளது. அதன்பிறகு, சுனாமி குடியிருப்பில் உள்ள மற்ற தொட்டிகளில் குப்பையை சேகரித்துக் கொண்டு மதியம் 12 மணிக்கு திருவொற்றியூர் ராஜாஜி நகரில் உள்ள குப்பை கிடங்குக்கு சென்றுள்ளது.எப்போதுமே, குப்பை தொட்டியில் இருக்கும் குப்பையை சேகரிக்க வரும் மாநகராட்சி ஊழியர்கள் தொட்டியில் குப்பையை தவிர வேறு ஏதேனும் உள்ளதா என ஒரு கம்பை நுழைத்து கிளறி சோதனை செய்வார்கள்.

ஆனால், சுனாமி குடியிருப்பில் குப்பை எடுக்கும்போது ஊழியர்கள் சோதனை செய்தார்களா, குப்பை தொட்டியை தானியங்கி வண்டியில் நிறுத்தி குப்பை கொட்டும் போது அவர்கள் கண்களுக்கு குழந்தை தெரியவில்லையா, குப்பையை லாரியில் கொட்டியவுடன் தானியங்கி இயந்திரம் மூலம் குப்பையை உள்ளே தள்ளிவிடும். அப்போது ரித்திகாவின் உடல் நசுங்கி ரத்தம் வெளியேறி இருக்கும். இதையும் மாநகராட்சி ஊழியர்கள் பார்க்கவில்லையா? என பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. சுனாமி குடியிருப்பில் இருந்த ரித்திகாவின் சடலம் சுமார் 7 கிலோ மீட்டர் தூரமுள்ள திருவொற்றியூர் குப்பை கிடங்குக்கு 30 நிமிடத்தில் சென்றுள்ளது.  தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக