வியாழன், 2 பிப்ரவரி, 2017

நந்தினியைக் கொன்ற இந்துமுன்னணியின் பின்னணி – நேரடி ரிப்போர்ட் 2

2002 குஜராத் இனப்படுகொலையின்போது கவுசர் பீ என்ற இசுலாமியப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அதே கொடுமையைத்தான் நந்தினி என்ற “இந்து” பெண்ணுக்கும் இழைத்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள்.
நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட் – 2 தலையில் காவித் துண்டு கட்டிய சிறு கும்பல் அந்த மேடையின் அருகில் பெரும் கூச்சலோடு நிற்கிறது. ஒவ்வொருவரின் நெற்றியிலும் செந்தூரத் தீற்றலும், வாயில் டாஸ்மாக் சரக்கு வாடையும் தூக்கலாக இருக்கின்றன. அந்த வாய்களில் வழிந்த மட்டமான சாராய வாடைக்கு இடையே அவ்வப் போது பாரத மாதாவும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேடையில் இவர்களை உற்சாகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தான் அவன். அந்த நேரம் பார்த்து மேடைக்கு சற்றுத் தொலைவில் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்து சென்று கொண்டிருந்தார் ஒரு கருப்புச் சட்டைக் காரர்.
“டேய்… போடா போ… என்னிக்கு இருந்தாலும் உன்னோட நெஞ்சுல கடப்பாறையை விட்டுச் சொருகப் போறது நான் தாண்டா” என கருப்புச் சட்டையைப் பார்த்து மேடையிலிருந்தவன் மைக்கின் வழியே கூச்சலிடுகின்றான். கருப்புச் சட்டைக்காரர் ஒரு கணம் துணுக்குற்றுப் போகிறார்; அக்கம் பக்கத்திலிருந்த மக்களோ அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் எவருக்கும் எதிர்த்துக் கேட்கத் தோன்றவில்லை பயம்.
மக்களின் இந்தப் பயமும், ‘நமக்கேன் வம்பு’ என ஒதுங்கிச் செல்லும் குணமும் தான் மேடையில் நின்ற ரவுடியின் மூலதனம். அந்த மூலதனத்தின் விளைவு தான் சிறுகடம்பூர் நந்தினியின் பச்சைப் படுகொலை.
அந்த ரவுடி – ராஜசேகரன். இந்து முன்னணியின் அரியலூர் மாவட்டச் செயலாளர்.

Letter
ராஜசேகரனால் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தி.க பிரமுகர் முத்தமிழ்செல்வன் அளித்த புகார் கடிதம்
ராஜசேகரனால் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தி.க பிரமுகர் முத்தமிழ்செல்வனைச் சந்தித்தோம்.
“அவன் மேடையில் பகிரங்கமா கொலை மிரட்டல் விடுத்தது இப்ப ரெண்டு மாசத்துக்குள்ளே நடந்த விசயம் தான். உடனே நான் போலீசிலே புகார் கொடுத்தேன். இப்ப வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லெ” என்றார்.
“அரியலூர் மாவட்டம் திராவிட இயக்கங்கள் வலுவாக இருந்த பகுதி. அப்பேர்பட்ட ஒரு மாவட்டத்தில் இந்து முன்னணி வளர்வதை எப்படி அனுமதித்தீர்கள் தோழர்? ”
“அவனைச் சுற்றி எப்போதும் பத்துப் பதினைந்து ரவுடிகளை வைத்திருப்பான் தோழர். எல்லோரும் இருபதுல இருக்குற இளைஞர்கள். கஞ்சா, சாராயம், விபச்சாரம் என அந்த இளைஞர்களை சீரழித்து வைத்துள்ளான். அவங்களுக்கு எதிரா எங்களால பிரச்சாரம் மட்டும் தான் செய்ய முடிகிறது; இந்து முன்னணிகாரங்களுக்கு போட்டியா நாங்களும் கஞ்சா வாங்கிக் குடுத்து இளைஞர்களை கவர முடியாதே?”
தி.க, முற்போக்கு அமைப்பினர் மட்டுமின்றி பொதுவான வேறு சிலரிடம் பேசிப் பார்த்த போது இந்து முன்னணி அமைப்பைக் கட்டும் ரகசியம் நமக்குப் பிடிபட்டது. இவர்களுக்கு நந்தினியின் கொலையில் மட்டுமின்றி வேறு பல குற்றச் சம்பவங்களிலும் தொடர்பிருப்பதோடு எதிர்காலத்தில் இன்னும் பல கொலைகளையும் கூட்டு வல்லுறவு செய்யும் மிருகங்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள். இவர்களைப் புரிந்து கொள்வதே தமிழ்நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக இந்த பார்ப்பன பயங்கரவாத கும்பலை வேரறுப்பதற்கான முதல் படி.
சுமார் பத்துப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் ராஜசேகரன் ஒரு சில்லரைக் கிரிமினல்; போலீசால் அறியப்பட்ட சிறு ரவுடி. அது தான் அவனது அடையாளம். ஒரு கட்டத்தில் விசாரணை வழக்குகள் அதிகரிக்கவே போலீசுக்கு அஞ்சி ஊரை விட்டு சென்னைக்கு ஓடியிருக்கிறான். ஏ.சி மெக்கானிக் படித்திருந்த ராஜசேகர், சென்னை சிறிய அளவில் குளிர்சாதன இயந்திரங்கள் பழுது பார்க்கும் பட்டறை ஒன்றை நடத்தி வந்துள்ளான். அந்த சமயத்தில் அவனுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியின் அறிமுகம் கிடைக்கிறது.
பெரியார் இயக்கங்களின் தாக்கத்தில் இருந்த அரியலூரில் தற்போது அவ்வியக்கங்கள் வீரியமிழந்து போயுள்ளன. அதே போல மார்க்சிய லெனினியப் பாதையிலிருந்து விலகி, குறுக்கு வழி புரட்சிக்கு முயன்ற குழுக்களும், கட்டப்பஞ்சாயத்து குற்றக் கும்பல்களாக சீரழிந்திருந்தன. இதனால் ஏற்பட்ட இடைவெளியில் பாமக வை ஆளும் வர்க்கம் திட்டமிட்டே வளர்த்தது.
Manikandan
இந்து முன்னணி பிரசுரத்தில் மணிகண்டனின் பெயர்.
சாதி அரசியல் இளைஞர்களை கணிசமாக ஈர்த்திருந்தாலும், பெரியார் இயக்கம் மற்றும் இடதுசாரி அரசியல் மரபின் தாக்கம் காரணமாக, ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்கள் அரியலூருக்குள் ஊடுருவுவது சவாலாகவே இருந்துள்ளது. இந்த மாவட்டத்தைக் கபளீகரம் செய்யத் தகுந்த தருணத்தையும் தளகர்த்தரையும் எதிர்பார்த்து காத்துக் கிடந்த காவிகளுக்கு ராஜசேகரன் பொருத்தமான தேர்வாக தெரிந்ததில் எந்த வியப்புமில்லை.
சென்னையில் தமக்கு அறிமுகமாகும் ராஜசேகரனிடம் அரியலூரில் இயக்கத்தைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்து அவரை ஊருக்கு அனுப்பி வைக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மற்ற கட்சிகளுக்கும் இந்து முன்னணிக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. அங்கெல்லாம் கட்சியில் சேர்ந்து ஒரு ஆளான பின்னர் ரியல் எஸ்டேட், கட்டபஞ்சாயத்து, ரவுடித்தனம் என வளரும் வாய்ப்பு உள்ளது. இந்து முன்னணி மற்றும் சங்க பரிவாரம் சார்ந்த அமைப்புகளில், ஏற்கெனவே தொழில்முறை ரவுடிகளாகவும் கிரிமினல்களாகவும் இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து பதவிகள் வழங்கப்படுகின்றன.
காலித்தனமும் கலவரமும்தான் இங்கே கட்சிப்பணி என்பதால், அதற்குப் பொருத்தமானவர்களை அந்தப் பதவிகளில் அமர்த்துகிறது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல்.
இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளராக கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அரியலூர் திரும்பும் ராஜசேகரன் உடனடியாக தனது “கட்சிப் பணி”களைத் துவக்குகிறான். பொன்பரப்பி வட்டாரத்தில் உள்ள இரண்டு கிருஸ்தவ வழிபாட்டு நிலையத்தைத் தாக்கி உடைத்தது மற்றும் இசுலாமிய மசூதிகளில் பாங்கு ஒலிக்க கூடாது என தகராறு செய்தது என தனது பெயரை மக்களிடையே பதிய வைக்கிறான். அதோடு எந்நேரமும் தன்னைச் சுற்றி சில்லறை ரவுடிகள் கொண்ட பட்டாளம் ஒன்றையும் திரட்டுகிறான். இந்த ரவுடிப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் தான் நந்திதினியைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்ற மணிகண்டன், மணிவண்ணன் உள்ளிட்டவர்கள்.
தன்னைச் சுற்றி இருந்த கிரிமினல் கும்பலின் பராமரிப்புச் செலவை ராஜசேகரன் ஈடுகட்டியது எப்படி?
சென்னையிலிருந்து இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கி அரியலூர் திரும்பிய அதே நேரம் அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் குளிர்சாதன இயந்திரங்களைப் பழுது பார்த்து பராமரிக்கும் காண்டிராக்ட் ஒன்றும் ராஜசேகரனுக்குக் கிடைக்கிறது. தனது நிறுவனங்களின் காண்டிராக்ட் வேலையை ஒரு லோக்கல் ரவுடியை நம்பி டால்மியா கொடுத்ததெப்படி?
அரியலூரியில் இயக்கத்தைக் கட்டும் பொறுப்பை ராஜசேகரனுக்கு வழங்கிய இந்து முன்னணி மாநில தலைமை, டால்மியா நிறுவனங்களின் ஆடிட்டராக உள்ள குருமூர்த்தியின் (துக்ளக் ஆசிரியர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரான சுதேசி ஜாக்ரன் மன்ச்சின் முக்கிய தலைவர்) சிபாரிசு மூலம்தான் டால்மியா காண்டிராக்ட்டை ராஜசேகருக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. இந்த விவரத்தை நாம் சந்தித்த பலரும் கூறினர். பல நிகழ்ச்சிகளில் சங்க பரிவாரத் தலைவர்களுடன் ஒரே மேடையில் ராஜசேகர் பங்கு பெற்றுள்ளதையும் கூறினர்.
குளிர்சாதன இயந்திரங்களின் பராமரிப்பு (AMC) என்கிற பெயரில் மாதம் தோறும் சில லட்ச ரூபாய் வருமானத்துக்கு சங்க பரிவாரத் தலைமை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இது தவிர டால்மியாவில் ஏற்படும் தொழிலாளர் பிரச்சினைகளின் போது தொழிலாளர்களை மிரட்ட ரவுடி கும்பலின் துணை அந்நிறுவனத்திற்கு தேவைப் பட்டுள்ளது – ராஜசேகர் அந்த பணியையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளான் – இதற்காக கிடைக்கும் வருமானம் தனி.
இவ்வாறு ரவுடித் தொழில் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் கிடைக்கும் அளவுக்கு மிஞ்சிய வருமானம் மற்றும், இந்து முன்னணி என்கிற அமைப்பு பலத்தின் துணையோடு காவல் நிலையங்களில் செல்வாக்கை உறுதிப் படுத்திக் கொள்வதன் மூலம் தனது ரவுடித்தனத்துக்கு கிடைக்கும் பாதுகாப்பு ஆகியவற்றின் துணையோடு தான் அரியலூரில் இந்து முன்னணியை கட்டியுள்ளான் ராஜசேகர். கடந்த ஆண்டு பத்துக்கும் குறைவான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்ட பொன்பரப்பி வட்டாரத்தில் இந்தாண்டு ஐம்பதுக்கும் அதிகமான சிலைகளை ராஜசேகர் நிறுவியுள்ளான்.
டால்மியாவில் வேலை வாங்கிக் கொடுப்பதாக இளைஞர்களை வசியப்படுத்தும் ராஜசேகர், தன்னுடைய வட்டத்துக்குள் அவர்கள் வந்த பின் சொந்த செலவில் கஞ்சா, சாராயம் என ஏற்பாடு செய்து கொடுத்து சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளான். நந்தினி கொல்லப்படுவதற்கு சில வாரங்கள் முன் ஆசிரியர் ஒருவரை இரவில் மறித்து தோளில் வெட்டி வழிப்பறி செய்துள்ளது மணிகண்டன், மணிவண்ணன், மணிமொழி, வெற்றிச் செல்வன், திருமுருகன் உள்ளிட்ட இந்து முன்னணி கும்பல்.
சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் பொன்பரப்பியைச் சேர்ந்த வன்னிய சாதிப் பெண் ஒருவரை இந்த கும்பல் கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளது. பின்னர் இது ஊர் பஞ்சாயத்தில் விவகாரமான போது ராஜசேகரே தலையிட்டு பஞ்சாயத்து பேசியுள்ளான். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு தொகையைக் கொடுத்து விட்டு விசயத்தை அப்படியே அமுக்கியுள்ளனர்.
Raja sekar
ராஜசேகரையும், மணிகண்டனையும் கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட சுவரொட்டி
ராஜசேகரின் துணையும் இந்து முன்னணி என்கிற அமைப்பின் பின்னணியும் தமக்கிருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் ஏய்க்கலாம், எவரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்கிற துணிவு செந்துறை இந்து முன்னணி குண்டர்களுக்கு பிறந்துள்ளது.
எந்நேரமும் வேலை வெட்டியில்லாமல் ஊருக்குள் மைனர் தனம் செய்து திரிந்த இந்த கும்பலுக்கென்று பொன்பரப்பியில் ஒரு அறையை வாடகைக்குப் பிடித்துக் கொடுத்துள்ளான் ராஜசேகர். வெறும் முன்னூறு ரூபாய் வாடகைக்குப் பெறுமானமுள்ள அந்த வீட்டுக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகையாக கொடுக்கப்படுகின்றது. பொன்பரப்பி வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் சிலரிடம் இந்த வீட்டில் இருப்பவர்கள் பற்றியும் அவர்களது செயல்பாடு பற்றியும் விசாரித்தோம். நாங்கள் கேட்ட அனைவருமே ஏதாவது உண்மையைச் சொன்னால் தங்களுக்கு ஆபத்து வந்து விடும் என அஞ்சினர். பெயர் வெளியிடப்படாது என்கிற உத்திரவாதத்தின் பேரில் சிலர் பேச முன்வந்தனர்.
சிறீரங்கத்தைச் சேர்ந்த குணா என்கிற குணசேகரனும் ராஜா என்பவரும் இந்து முன்னணியில் முழு நேர ஊழியர்களாக அந்த வீட்டில் தங்கியிருப்பதாகச் சொன்ன பகுதி மக்கள், நந்தினியை கொன்ற மணிகண்டனும், மணிவண்ணனும் அந்த வீட்டுக்கு தினசரி வந்து போவார்கள் என்றும் தெரிவித்தனர். அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் சிலிண்டர்களைத் திருடி விற்பது, பகுதியில் உள்ள ஆடுகளைத் திருடி அடித்துத் தின்பது என சில்லறைத் திருட்டுக்களை செய்வதோடு எந்நேரமும் கஞ்சா போதையில் இவர்கள் திளைத்துக் கிடந்துள்ளனர்.
மேலும், கஞ்சா போதையோடு இரவு நேரங்களில் விலைமாதர்களை அழைத்து வந்து இரவு முழுவதும் கொட்டமடித்துள்ளனர். இவர்களுக்காக ராஜசேகரே அரியலூரில் இருந்து விலைமாதர்களை தனது வெள்ளை நிற ஜைலோ காரில் அழைத்து வருவதுண்டு என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்களின் அருவெறுப்பான செயல்களில் மக்கள் ஆத்திரமுற்று இருந்தாலும், எதிர்த்துக் கேட்டால் நம்மை ஏதும் செய்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் அமைதியாக இருக்கின்றனர்.
நந்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்ட காட்சிகளைக் காணொளியாக கண்ட போது நமது நெஞ்சே அடைத்துக் கொண்டது. ஒரு மனிதனால் இந்தளவுக்கு விகாரமாக கொலை செய்ய முடியுமா என திகைத்துப் போனோம். தன்னால் கருவுற்ற ஒரு அப்பாவிப் பெண்ணை நண்பனோடு சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து அவளது பிறப்புறுப்பைச் சிதைத்துக் கொல்வதை ஒரு ‘மனிதனால்’ செய்ய முடியும் என்பதைக் கண்ட போது விக்கித்துப் போனோம்.
கடந்த ஓராண்டாக ராஜசேகரின் ரவுடிப் படையிலும் இந்து முன்னணியிலும் முக்கிய தளபதியாக செயல்பட்டதே மணிகண்டனுக்கு அத்தனை கொடூரமாக நந்தினியை கொல்லும் வெறியை வழங்கியுள்ளது. மத்தியில் தமது சக அமைப்பு அதிகாரத்தில் இருக்கும் தெனாவெட்டு, போலீசின் துணை, பணம், இந்து அமைப்பின் பின்னணி, சாதித் திமிர் ஆகிய அனைத்தும் சேர்ந்து சில்லறைக் காலிகளாக இருந்த இவர்களை கொலை வெறியர்களாக்கியுள்ளது.
Nandini (6)
சிதைந்த நிலையில் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்படும் நந்தினியின் உடல்
நந்தினியைக் கொன்ற பின் அவளது உடலை ஒரு வெள்ளை எஸ்.யூ.வி மாடல் காரில் போட்டுத் தூக்கி வந்து தான் கிணற்றில் போட்டுள்ளான் மணிகண்டன். ராஜசேகரைத் தவிர மணிகண்டனுக்கு அறிமுகமான வேறு எவரிடமும் அந்த ரக கார் இல்லை என்பதை எமது விசாரணைகளில் உறுதிப்படுத்திக் கொண்டோம். நந்தினி கொலை விவகாரத்தின் பின்னுள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வர போராடி வரும் சமூக ஆர்வலர்கள் ராஜசேகரின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்திருந்த போதும், இதுவரை அவனை அழைத்து விசாரிக்க மறுத்து வருகிறது காவல் துறை.
ஏற்கனவே பொன்பரப்பியில் நடந்த பாலியல் வல்லுறவு விவகரத்தை பணத்தால் அடித்து தீர்த்தது போல் நந்தினியின் குடும்பத்தாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என ராஜசேகர் கணக்குப் போட்டுள்ளான். ஏழைகள் தானே பணத்தை விட்டெறிந்து விடலாம் மிஞ்சிப் போனால் தனது இந்து முன்னணி செல்வாக்கை கொண்டு சமாளித்து விடலாம் என ராஜசேகர் கணக்குப் போட்டிருக்கிறான்.
நந்தினியின் கொலையில் நேரடியாக தொடர்புடைய மணிகண்டனையும் அவனது கூட்டாளிகளையும் தற்போது கைது செய்துள்ளது காவல்துறை. ஆனால், இந்தக் கொலைகளுக்கு மூளையாக செயல்பட்ட ராஜசேகரோ வெளியில் சுதந்திரமாக நடமாடுவதோடு மணிகண்டனைப் போன்ற கொலைகாரப் பட்டாளம் ஒன்றையும் உடன் அழைத்துக் கொண்டு திரிகிறான். நந்தினிக்கும் பொன்பரப்பியைச் சேர்ந்த அந்த பெயர் தெரியாத பெண்ணுக்கும் நேர்ந்த கொடுமைகள் வேறு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாதெனில் உடனடியாக இந்த கும்பலைக் கைது செய்து உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கை.
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து ஜனவரி 14-ம் தேதி சிறியளவில் துவங்கிய போராட்டம் ஒரே வாரத்தில் தமிழகத்தின் வீதியெங்கும் மாபெரும் மக்கள் எழுச்சியாக வளர்ந்துள்ளது. மெரினா கடற்கரையிலும் தமிழகமெங்கும் இரவு பகலாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போராடினர். ஆண்களும் பெண்களும் பெருமளவில் குழுமியிருந்தாலும் ஒரே ஒரு சந்தர்பத்தில் கூட எவ்வித பாலியல் சீண்டல்களுக்கும் பெண்கள் ஆளாகவில்லை என்பதை அகில இந்திய அளவில் ஊடகங்கள் ஆச்சர்யமாக குறிப்பிடுகின்றன – இது தமிழகம் பெற்ற கவுரவம். அதே ஜனவரி 14-ம் தேதி தான் நந்தினியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது அரியலூரில் உள்ள சிறுகடம்பூர் என்கிற குக்கிராமத்தில் உள்ள பெண்ணுக்கு நேர்ந்த எதிர்பாராத அசம்பாவிதம் அல்ல. இது தமிழகத்தின் அவமானம்.
2002 குஜராத் இனப்படுகொலையின்போது கவுசர் பீ என்ற இசுலாமியப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அதே கொடுமையைத்தான் நந்தினி என்ற “இந்து” பெண்ணுக்கும் இழைத்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள். ஆர்.எஸ்.எஸ் ஒழுக்கசீலர் சண்முகநாதனிடம் கவர்னர் மாளிகை இருந்ததால் அவர் பாழுங்கிணற்றைத் தேடி அலையவில்லை. மணிகண்டன் சண்முகநாதனைப் போல இன்னும் வளரவில்லையாதலால், குற்றத்தை மறைக்க அவனுக்கு ஒரு பாழுங்கிணறு தேவைப்பட்டிருக்கிறது.
marna periyar
சங்க பரிவாரத்தின் விஷக் கொடுக்குகளைக் கிள்ளியெறியும் மாபெரும் வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது.
பாஜக பாசிஸ்டுகள் இசுலாமியர்களுக்கு மட்டுமே எதிரானவர்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் இனிமேலாவது சிந்திக்கவேண்டும். ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் ஒரு முடிவுக்கு வந்த பின் நாம் காளைகளின் கொம்பைப் பிடிக்கச் செல்ல வேண்டியதில்லை; சங்க பரிவாரத்தின் விஷக் கொடுக்குகளைக் கிள்ளியெறியும் மாபெரும் வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது.
அந்தக் கடமையை நிறைவேற்றுவீர்களா என்று நம்மைக் கேட்கிறாள் நந்தினி.
(நிறைவு பெற்றது.)
– வினவு செய்தியாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக