ஞாயிறு, 29 ஜனவரி, 2017

மெரீனாவில் நடக்க இருந்த இளைஞர் கட்சி கூட்டம் அனுமதி மறுப்பு ! போலீஸ் குவிப்பு !Tamilnadu Youth Party meeting canceled



சமூக வலைதளங்களில் மாணவர்கள் நாளை போராட்டம் நடத்தவுள்ளதாகப் பரவிய செய்திகளை அடுத்து, மெரினாவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் 23 வரை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இந்த வரலாறு காணாத போராட்டம் உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்தது. தமிழக மாணவர்களைக் கண்டு மற்ற மாநில மாணவர்களும் போராட்டத்தில் ஈடுப்பட தொடங்கினர். அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம், கடந்த திங்கள்கிழமை கலவரமாக மாறியது. சென்னையில் வாகனங்கள், மீனவக் குப்பம் ஆகியவை சேதமடைந்தன. இது தொடர்பாக, இதுவரை 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக மெரினாவில் மாணவர்கள்கூட திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மெரினா கடற்கரையில் காந்தி சிலையில் இருந்து விவேகானந்தர் இல்லம் வரை வரிசையாக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் எதிர்காலத்திற்காக போராட வேண்டும், தமிழக மக்களை பாதுகாக்க மாணவர்கள் கை கோர்க்க வேண்டும் என்றுகூறி, tamilnadu youth party meet என்ற முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பிலும் குரூப் ஒன்றை மாவட்டவாரியாக கடந்த சில நாட்களுக்குமுன் உருவாக்கினர். இதில், இதுவரை 30 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ http://tnyouthparty.com/ என்ற இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தையும் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள் மீண்டும் நாளை ஜுன் 29ஆம் தேதி ஒன்றுகூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, tamilnadu youth party meet என்ற முகநூல் பக்கத்தில் மெரினாவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால், பெசன்ட் நகரில் போராட்டம் நடத்த வேண்டும் அல்லது போராட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று மாணவர்கள் கூறி வருகின்றனர்.

இதுதவிர, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாடிய சந்திரமோகன் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது: தஞ்சாவூர் விவசாயிகள் தொழிற்சங்கத் தலைவரை சந்திப்பதற்குச் சென்றோம். அப்போது, டிஜிபி அலுவலகத்திலிருந்து விவசாய தொழிற்சங்கத் தலைவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில், உங்களைச் சந்திப்பதற்காக போராட்டக்காரர்கள் வருவார்கள். அவர்களுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் நல்க வேண்டாம் என்று கூறியுள்ளார். என்னதான் நடந்தாலும், விவசாயிகளுக்காக போராடுவதை நாங்கள் விடமாட்டோம். எங்கள் இளம் தலைமுறை விவசாயிகளை பாதுகாப்பதற்காக போராடுவார்கள் என்று சந்திரமோகன் பதிவிட்டுள்ளார். இவ்வாறு தமிழர்களுக்காக போராடும் மாணவர்களுக்கு காவல் துறை தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக, சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும். மெரினா கடற்கரை மக்கள் பொழுதுபோக்குக்காக கூடும் இடம் என்றும், கலங்கரைவிளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள பகுதிகளை போராட்டம் நடத்த ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் போராட்டம் நடத்துவதற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுதவிர, அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
எனவே, மெரினா கடற்கரையில் போராட்டம் என்று சொல்லி அங்கு கூடுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக