ஞாயிறு, 1 ஜனவரி, 2017

வளர்மதி : சின்னம்மா அப்புரூவர் ஆகியிருந்தா ஜெயலலிதாவும் இல்லை அதிமுகவும் இல்லை !

விகடன் :அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இருந்து கழுகார் அனுப்பிய தலைப்பு இதுதான். அடுத்த சில மணி நேரத்தில் அலுவலகத்தில் லேண்ட் ஆனார் கழுகார்.
‘‘இதுவரை அம்மா தி.மு.க-வாக இருந்தது. இனி, அது சின்னம்மா தி.மு.க. ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவி அம்மா வடிவில் கண்டோம். புரட்சித் தலைவி அம்மாவை மதிப்புக்குரிய சின்னம்மா வடிவில் கண்டு, கழகப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவோம்’ என்று சூளுரைத்துள்ளார்கள். ‘அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில்கொண்டு சின்னம்மா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி, மொத்தமும் சசிகலா கையில்தான். அவரே அ.தி.மு.க-வை ஆக்கவும் அழிக்கவும் வல்லவராக ஆகிவிட்டார். இதுவரை பின் சீட் டிரைவிங்கில் இருந்து வந்த சசிகலா, முன் சீட்டுக்கு வந்துவிட்டார். அதனால்தான் `சசிபாரதம் ஆரம்பம்’ என்று சொன்னேன்” என்றபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.  இவரை போல இன்னும் எத்தனையோ கேவலமான மனிதர்கள் அடிமை முகாமில் உண்டு


‘‘சசிகலா தனது காய் நகர்த்தலை கன கச்சிதமாக நடத்தி முடித்துவிட்டார். பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதாக இருந்தால் 20 நாட்கள் அவகாசம் தேவை. அதற்குள் யாராவது சிக்கல் செய்யலாம். அதனால், காதும் காதும் வைத்தது மாதிரி சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்துவிட்டார்கள். அதாவது, இப்போது நடந்துள்ளது பொதுச்செயலாளர் தேர்தல் அல்ல. பொதுச்செயலாளர் நியமனம்தான். இனிமேல்தான் தேர்தலே நடத்த வேண்டும்.”

‘‘ஓ! அப்படியா?”

‘‘ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டதற்கு மறுநாளில் இருந்து, அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க-வுக்குள் கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. சசிகலாவை சந்திக்க தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க நிர்வாகிகள் போயஸ் கார்டனுக்குப் படையெடுத்தனர். ‘சின்னம்மாதான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும்’ என்று இவர்கள் வலியுறுத்தினர். சில ஊடகப் பிரமுகர்களும் சசிகலாவை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புகள் மூலம் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடம் சசிகலாவுக்குத்தான் என்ற பிம்பத்தை அ.தி.மு.க-வில் படிப்படியாகக் கட்டமைத்தனர். ‘சின்னம்மாதான் அடுத்த பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார்’ என்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சசிகலா பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று கட்சியின் கிளை அமைப்புகள், மாவட்ட அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பிவைத்தனர். சசிகலாவுக்கு ஆதரவாக நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகளும், விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. நாளிதழ்களிலும் விளம்பரங்கள் வரிசைகட்டின. சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டன. அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டக் கூடாது என்று அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், கட்சியின் பொதுக்குழு கூடுவதைத் தடுக்க முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டனர்.”
‘‘இந்த பீடிகைகள் எல்லாம் எதற்காக நடந்தன?”

‘‘சசிகலா நேரடியாக பொதுச்செயலாளராக வர முடியாது என்பதால்தான் இதை எல்லாம் செய்தார்கள். அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆகி 5 ஆண்டுகள் நிறைவடைந்த ஒருவரைத்தான் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க-வின் ‘பை-லா’ சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் சசிகலா இந்தக் கட்சியில் சேர்க்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகும். எனவே, சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் அ.தி.மு.க-வின் ‘பை-லா’ திருத்தப்படலாம் என்று கூறப்பட்டது. அப்படி எந்தத் திருத்தமும் இதில் வரவில்லை. பொதுச்செயலாளராக இப்போது நியமனம் செய்துவிட்டு, பின்னர், தேர்தல் வைத்து தேர்ந்தெடுத்துக்கொள்ளத் திட்டமாம்.”

‘‘ம்!”

‘‘தம்பிதுரை அல்லது எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக போட்டுவிட்டு சில மாதங்கள் கழித்து சசிகலாவை பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யலாம் என்ற திட்டம் இருந்தது. அல்லது ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஓராண்டு காலம் கட்சிக்கு பொதுச்செயலாளர் இல்லாமல் அவரது நாற்காலியைக் காலியாகவைத்து இருப்பது. அல்லது சசிகலாவை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்வது... இப்படி பல யோசனைகள் இருந்தனவாம். இவை அனைத்தையும் சசிகலா குடும்பத்தினர் ஏற்கவில்லையாம். ‘சர்ச்சை எப்போதும் இருக்கத்தான் செய்யும். இதைப் பார்த்தால் சின்னம்மா எப்போதும் பொதுச்செயலாளர் ஆக முடியாது. இந்தப் பரபரப்பிலேயே அவரை பொதுச்செயலாளர் ஆக்கிவிட வேண்டும்’ என்று அந்தக் குடும்பத்தினர் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட சசிகலா புஷ்பாவுக்காக விண்ணப்பம் வாங்க, கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க அலுவலகம் வந்த அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் தாக்கப்பட்ட சம்பவம் காரணமாகக் கடைசிக்கட்டப் பரபரப்பு எழுந்தது. இதைக் காரணம் காட்டி நீதிமன்றத்தை அணுகி பொதுக்குழுவுக்குத் தடைபோடுவார்களோ என்றெல்லாம் பயம் இருந்தது.”

‘‘அப்படியா?”

‘‘இதனால் 28-ம் தேதி இரவே, பொதுக்குழு நடந்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபம் மற்றும் மண்டபத்தைச் சுற்றி உள்ள பகுதிகளை போலீஸார் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்திருந்தனர். 29-ம் தேதி காலையில் மண்டபத்தின் அருகே கோயம்பேடு - பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது. மண்டபத்தைச் சுற்றி இருந்த அப்பார்ட்மென்ட்களில்கூட போலீஸார் நின்றிருந்தனர். சசிகலாவுக்கு எதிராக யாரும் கறுப்புக் கொடியுடன் நுழைந்துவிடக் கூடாது என்பதில் போலீஸார் கவனமாக இருந்தனர். காலை 7 மணிக்கெல்லாம் அ.தி.மு.க நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் பொதுக்குழுவுக்கு வந்தனர். ஓ.பி.எஸ்., தம்பிதுரை உள்ளிட்ட சிலர் மட்டும்தான் கார்களில் வந்தனர். பதற்றமும், பரபரப்புமான சூழலில் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு கூடியது. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,770 பேரும் பங்கேற்றனர். ஜெயலலிதா பங்கேற்ற அந்தக் காலப் பொதுக்குழுக்கூட்டங்களை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த நூர்ஜகான் தொகுத்து வழங்கினார். ஆனால், இந்த முறை அ.தி.மு.க முன்னாள் ராஜ்யசபா எம்.பி ரபி பெர்னார்ட் தொகுத்து வழங்கினார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நடந்த பொதுக்குழுவின்போது பொதுக்குழு மேடையில் ஜெயலலிதா, ஓ.பி.எஸ் உள்ளிட்ட சிலர் மட்டுமே அமர்ந்திருப்பர். ஆனால், அ.தி.மு.க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பொதுக்குழு மேடையில் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, அன்வர் ராஜா, சரோஜா உள்ளிட்ட 45 பேர் உட்கார்ந்திருந்தனர். 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, தம்பிதுரை வழிமொழிந்தார். 14 தீர்மானங்களைப் படித்து முடித்த உடன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுரத்தில்லாமல் கைகளைத் தட்டினர்.”

‘‘சோகத்தில் இருந்திருப்பார்கள்!”

‘‘14 தீர்மானங்களில் 5-வது தீர்மானம்தான் முக்கியமான ஒன்று. ‘பொதுச்செயலாளர் முதல்வர் அம்மா விண்ணுலகம் சேர்ந்த நிலையில் அ.தி.மு.க-வைக் காப்பாற்றவும், வழிநடத்தவும், கட்சி பொதுச்செயலாளர் நியமனத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது’ என்று தீர்மானத்தில் கூறி இருக்கிறார்கள். சசிகலா,  அ.தி.மு.க-வில் 5 ஆண்டுகள் உறுப்பினர் ஆக இல்லாத நிலையில் அவரைப் பொதுச்செயலாளராக தற்காலிகமாக நியமிப்பதாகவே பொதுக்குழுவில் சொல்லி இருக்கின்றனர். `சட்டவிதி 20 பிரிவு(2)-ல் கூறப்பட்டுள்ளபடி கழகப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை மதிப்புக்குரிய சின்னம்மா சசிகலா அவர்களை அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆக நியமிப்பது என பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது’ என்றும் பொதுக்குழு தீர்மானத்தில் சொல்லி இருக்கின்றனர்.

சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனேயே மண்டபத்துக்கு வெளியே, பேனர் வைத்துவிட்டனர். `அம்மாவின் ஒரே அரசியல் வாரிசு எங்கள் தியாகச் செல்வி சின்னம்மா’ என்று  புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.”

‘‘பொதுக்குழுவில் பேசும் வைபவம் நடந்ததா?”

‘‘பொதுக்குழுவில் உறுப்பினர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியபோது, ‘1996-ம் ஆண்டு போடப்பட்ட வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ஆகி இருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார்; அ.தி.மு.க-வும் இருந்திருக்காது’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் கொடுத்தார். பொன்னையன் பேசியபோது, ‘சின்னம்மா மட்டுமல்ல, சின்னம்மா குடும்பமே அ.தி.மு.க-வுக்காக உழைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க கொடி ஏற்றமுடியாத நிலை இருந்த கிராமங்களில் திவாகரன் அரிவாளுடன் சென்று கொடி ஏற்றினார்’ என்றவர், எம்.நடராஜன் பெயரைக் குறிப்பிடாமல் ‘சின்னம்மாவின் கணவர், கட்சிக்காக நிறைய ஆலோசனைகள் கூறி இருக்கிறார். சின்னம்மா குடும்பமே பண்ணையார் குடும்பம்’ என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார்.

‘அம்மாவைப் பார்க்க உங்களை அனுமதிக்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கலாம். உங்களது பாசம் எங்களுக்கும் புரிகிறது. நீங்கள் சென்று சந்திப்பதால் அம்மாவுக்கு இன்ஃபெக்‌ஷன் ஆகிவிடக்கூடாது என்பது மட்டுமல்ல. உங்களுக்கும் இன்ஃபெக்‌ஷன் வந்துவிடக்கூடாது என்பதால்தான் இந்த முடிவெடுத்தோம்’ என்றும் பொன்னையன் சொன்னார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியபோது, ‘அ.தி.மு.க. என்பது ஒரு விமானம் போன்றது. அதில் ஒரு பைலட்டும் ஒரு கோ பைலட்டும் இருப்பார்கள். ஆபத்து வந்தால் நம்மைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்த ஏற்பாடு. அம்மா பைலட். சின்னம்மா கோ பைலட்’ என்று விளக்கம் அளித்தார்”
‘‘புல்லரிக்க வைக்கிறார்களே?”

 ‘‘பொதுக்குழுவின் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு ஓ.பி.எஸ்., தம்பிதுரை உள்ளிட்டோர் போயஸ்கார்டன் பறந்தனர். ஓ.பி.எஸ் தீர்மானத்தின் நகலை சசிகலாவிடம் கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வத்திடம்  இருந்து நகலை வாங்கிய சசிகலா, கார்டனில் இருந்த ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்து அழுதார். அவருக்கு அருகில் தினகரன், டாக்டர் வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் இருந்தார்கள். பின்னர் ஓ.பி.எஸ்., தம்பிதுரை இருவரும் சசிகலாவிடம் பேசிக்கொண்டிருந்தனர். தீர்மான நகலை ஜெயலலிதா படம் முன் வைத்து சசிகலா வணங்கினார். அதன்பிறகு ஓபி.எஸ். வெளியில் வந்தார். கார்டனை விட்டு வெளியே வந்த ஓ.பி.எஸ்., ‘பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை சின்னம்மா ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்’ என்று கூறினார். வேறு சில கேள்விகளை நிருபர்கள் கேட்டபோது, சிரித்துக் கொண்டே காரில் ஏறிச் சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் ஓ.பி.எஸ்-ஐ வரச்சொன்ன சசிகலா, அவரிடம், ‘பொதுக்குழு கூட்டத்தை முடிக்கச் சொல்லுங்கள். நான் பொதுக்குழுவுக்கு வரவில்லை’ என்று சொன்னாராம். இந்தத் தகவல் அங்கு போய்ச் சேர்ந்தது!”

‘‘ம்!”

‘‘இதன் பின்னர்தான் பொதுக்குழுவில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 12.04-க்கு மேடையேறி, ‘சின்னம்மா பொதுச்செயலாளர் ஆக  இருப்பதற்கு  சம்மதம் தெரிவித்து விட்டார்’ என்று அறிவித்தார். அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கைகளைத் தட்டி வரவேற்றனர்.  அதன் பின்னர் பொதுக்குழுக் கூட்டம் முடிவுக்கு வந்தது. சசிகலா பொதுச்செயலாளர் ஆக அறிவிக்கப்பட்ட தகவல் கார்டன் வந்து சேரும் முன்னர், சில முக்கியஸ்தர்கள் பொக்கேயுடன் கார்டன் வந்துவிட்டனர். அதிகாரிகளைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

‘‘பொதுக்குழுவில் வேறு என்ன விசேஷம்?”

‘‘போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவின் நாற்காலி தனி காரில் கொண்டுவரப்பட்டது. அந்த நாற்காலியை மேடையில் போட்டு அதில் ஜெயலலிதா படத்தை வைத்தார்கள். நடுநாயகமாக அந்தப் படம் இருந்தது. அதன்முன் சிறு மேஜை வைக்கப்பட்டது. அதில் பூக்கள் இருந்தன. கண்ணீருடன் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். ஓ.பன்னீர்செல்வம் அழுதார். நிர்வாகிகளும் அழுதார்கள். ‘அம்மா இறந்த அன்று அமைச்சரவை பதவி ஏற்றது. அப்போது யாருமே அழவில்லை. இன்று அழுகிறார்கள்’ என்று ஒருவர் கமென்ட் அடித்தார்.!”

‘‘அப்படியா?” 

‘‘பொதுக்குழுவில் காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி என டிபன் வழங்கப்பட்டது. மதியம், காய்கறி வகைகளுடன் காரைக்குடி செட்டிநாடு சைவ சாப்பாடு போடப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டங்களின்போது சிக்கன், மட்டன் என அசைவ சாப்பாடு போடப்படும். இந்த முறை அசைவம் இல்லை என்றதால் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் சைவ சாப்பாட்டை சாப்பிட்டனர். ‘ஜெயலலிதா இறந்த துக்கத்தை அனுஷ்டிப்பதற்காக சைவம் போடப்பட்டது’ என்று சொல்கிறார்கள். மொத்தத்தில் சசிகலா தனது ஆபரேஷனை அமைதியாக ஆரம்பித்துவிட்டார். அவருக்கு எதிர்ப்பு என்பது அந்த மண்டபத்தில் இல்லை!”
‘‘சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கவில்லையே?”

‘‘சிறப்பு அழைப்பாளர்கள் வந்தால் அவர்களில் யாராவது சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் அந்தமாதிரியான நபர்களையே அழைக்கவில்லையாம்.!”

‘‘சசிகலா புஷ்பா சிக்கல் தொடருமா?”

 ‘‘அவர் குடைச்சல் தொடரும் என்றுதான் சொல்கிறார்கள். பொதுச்செயலாளராகப் போட்டியிட தன் கணவர் லிங்கேஸ்வர திலகரைஅனுப்பி விண்ணப்பம் வாங்கி வரச் சொல்லியிருந்தார் சசிகலா புஷ்பா. 28-ம் தேதி அ.தி.மு.க அலுவலகம் வந்த லிங்கேஸ்வர திலகரை அங்கிருந்த ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரைதான் முதலில் பார்த்திருக்கிறார். தனது நண்பர் சிந்து ரவிச்சந்திரனிடம் சொல்லி, ‘அவரை அடிச்சு விரட்டு’ என்று  உத்தரவு போட்டாராம். அதன்படிதான் சிந்து ரவிச்சந்திரன், லிங்கேஸ்வர திலகரை அடித்தார் என்கிறார்கள். சட்டப் போராட்டத்தை சசிகலா புஷ்பா தொடர்வார் என்றே சொல்லப்படுகிறது” என்றபடி எழுந்த கழுகார்,
‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர், ‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுத் தாக்கல் செய்து இருந்தார். இது நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி, தனது கருத்தாக சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். ‘ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் சந்தேகம் இருக்கிறது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. இறந்தபிறகாவது மருத்துவமனைக் காட்சிகளை வெளியிட்டு இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோது கூட புகைப்படம், வீடியோ வெளிவந்தன. ஜெயலலிதா விஷயத்தில் இதைச் செய்ய அரசு ஏன் தயங்குகிறது? ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் அங்கு ஏன் அனுமதிக்கப்படவில்லை? தொடர்ந்து பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வரும் சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மெளனம் காப்பது ஏன்? பிரேதப் பரிசோதனை செய்தால்தான் உண்மை வெளிவருமா?’ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த வார்த்தைகள் அவரது ஆர்டரில் இல்லை. ஆனால், நீதிமன்றத்தில் தனது கருத்தாகப் பதிவு செய்துள்ளார். ஜனவரி 9-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் வரப் போகிறது.

எழும்பூர் நீதிமன்றத்தில் கீதா போட்ட வழக்கு இருக்கிறது. சசிகலா புஷ்பா உயர் நீதிமன்றத்தில் போட்ட வழக்கில்,  மாநில அரசுக்கும் அப்போலோ நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் இருந்து மீண்டு வருவதே சசிகலாவுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போகும்” என்றபடி பறந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக