சனி, 14 ஜனவரி, 2017

மருத்துவர் ராமதாஸ்: பீட்டாவின் வெறும் மிரட்டலுக்கு பயந்து தடியடியை கட்டவிழ்த்து விடுவதா

Ramadoss condemns lathicharge in Avaniapuram சென்னை: தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. அந்த வெற்று மிரட்டலுக்கு பயந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீது முதலமைச்சர் தடியடியை கட்டவிழ்த்து விட்டாரா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். : தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்சுப்ரமணியன் சுவாமி சமூக வலைதளத்தில் கருத்து.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக் கோரியும் போராட்டம் நடத்திய திரைத்துறையினர் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்துள்ளது. அறவழியில் போராடியவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று கடந்த ஓராண்டாகவே மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று கூறி வந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள் நேற்று முன்நாள் ஜல்லிக்கட்டு சாத்தியமில்லை என்று இரட்டை வார்த்தையில் கூறிவிட்டு ஒதுங்கிவிட்டனர். அதனால் ஏமாற்றமடைந்த மக்கள் கொந்தளிப்பில் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவற்றின் தொடர்ச்சியாக மதுரை அவனியாபுரத்தில் இன்று போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. திரையுலகைச் சேர்ந்தவர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்ற இப்போராட்டத்தின்போது சிறு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்ட நிலையில், தேவையே இல்லாமல் தடியடி நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் தடை விதித்தால், அதுகுறித்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கூட மாநில அரசு தடைவிதிப்பது கேலிக்கூத்து.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மைய பூமியாக திகழ்வது மதுரை மாவட்டம் தான். ஆனால், அங்கு தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கடந்த 11-ஆம் தேதி மதுரை மாநகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 12-ஆம் தேதி சோழவந்தானில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதவாக குரல் கொடுத்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக கடந்த 11-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,''நானும், தமிழக அரசும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம். இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம்'' என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீராவேசமாக கூறியிருந்தார். ஆனால், அவரது கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை இன்று அவர் தங்கியுள்ள இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறது. இது தான் ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டும் லட்சனமா? தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. அந்த வெற்று மிரட்டலுக்கு பயந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீது முதலமைச்சர் தடியடியை கட்டவிழ்த்து விட்டாரா?
மதுரை மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வட இந்தியராக இருக்கும் நிலையில் தமிழர்களின் கலாச்சார உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு மரியாதை கொடுக்காமல் பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் கையாளாக மாறி தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். மதுரையிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தியதற்காகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடியடி நடத்த ஆணையிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார். tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக