இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது:சசிகலாவின் விருப்பம் இல்லாமல், மத்திய அரசின் ஆசியோடு, ஜெயலலிதா மறைவுக்குப் பின், மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார் பன்னீர்செல்வம்.
துவக்கத்தில் இருந்தே, தன்னிச்சையாக செயல்படத் துவங்கி உள்ள, பன்னீர்செல்வம், சசிகலாவை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.இருந்த போதும், தனக்கான செல்வாக்கைப் பயன்படுத்தி, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக, கட்சிப் பொதுக் குழு மூலம் நியமித்துக் கொண்டார் சசிகலா. இதுவும், பன்னீர்செல்வத்துக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அதை பன்னீர்செல்வம் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை. பொதுக் குழு மூலம், சசிகலாவை நியமித்து போடப்பட்ட தீர்மான நகல்களை, சசிகலாவிடம் நேரில் வழங்கிய மூத்த தலைவர்களோடு, பன்னீர்செல்வமும், போயஸ் தோட்டம் சென்றார்; அங்கு, சசிகலாவை சந்தித்து தீர்மான நகல்களை வழங்கினார்.
இதற்கிடையில், தன்னை, முதல்வர் பதவியில் அமர்த்திக் கொள்ள வேண்டும் என, சசிகலாவும் அவரது தரப்பினரும், பன்னீர்செல்வத்துக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தையும் தெரிந்த பின்னரும், பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அவரது உறவுகளிடம் மென்மையான போக்கையே கையாண்டு வருகிறார். ஆனால், ஆட்சி - அதிகாரத்தில் சசிகலா உறவுகளை தீவிரமாக நுழைந்து நாட்டாமை செய்ய விடாமல் ஓரளவுக்குப் பார்த்து வருகிறார்.
இதெல்லாம் பன்னீர்செல்வத்தின் மீது சசிகலாவுக்கு கடும் அதிருப்தியை கிளப்பி இருக்கிறது. முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை தினந்தோறும் போயஸ் தோட்டம் வந்து சந்தித்து, ஆட்சி நடைமுறைகள் குறித்து ஆலோசிப்பதில்லை என்ற வருத்தமும் பன்னீர் மீது சசிகலாவுக்கு இருந்தது.
இந்நிலையில், ஜனவரி 14ல், பன்னீர்செல்வம் பிறந்த நாள் என்றதும், அதற்காக, அந்நாளில் தன்னை நேரில் சந்தித்து, ஆசி பெற்று செல்வார் என, சசிகலா, எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், பொங்கல் நாளான அன்று, தனது சொந்தத் தொகுதியான தேனி மாவட்டம் போடிக்குச் சென்றார் முதல்வர் பன்னீர்செல்வம். அங்கு, பொதுமக்களை சந்தித்து உரையாடினார்; மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
அந்த சமயத்தில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்தன. பிரதமர் மோடியும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் வாழ்த்துச் சொன்னார்கள். மகிழ்ந்து போன பன்னீர்செல்வம், அதை கட்சியினர் சிலரிடம் பகிர்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அப்போது, சசிகலா வாழ்த்து சொல்லவில்லையே என சிலர், பன்னீரிடம் கேட்க, சொல்ல வேண்டியவர்கள் சொல்லிவிட்டார்கள். சொல்லாதவர்கள் பற்றி நமக்கு அக்கறையும் இல்லை; எதிர்பார்ப்பும் இல்லை என சொன்ன பன்னீர், தனக்கான பணியில் சந்தோஷமாக ஈடுபட்டார்.
பிரதமர் மோடியும், ஸ்டாலினும், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன செய்தி, சசிகலாவை சென்றடைந்தது. அதன் பின், தன் உறவுகளை அழைத்து, இந்த விஷயத்தில் என்ன செய்யலாம் என விவாதித்துள்ளார். பன்னீர்செல்வத்துக்கு, வாழ்த்துச் சொல்லாமல் இருந்தால், இருவருக்கும் இடையில் விரிசல் இருப்பது வெளிப்படையாக தெரிந்து விடும். அதனால், வாழ்த்துச் சொல்லிவிடுங்கள் என ஆலோசனை சொல்லி இருக்கின்றனர். அதையடுத்தே, இரவு வெகு நேரம் கழித்து, சசிகலா, பன்னீர்செல்வத்துக்கு, பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லியுள்ளார். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக