வெள்ளி, 13 ஜனவரி, 2017

கல்லூரியில் ஜியோ விற்கலாம் விவசாயிகளுக்காக பேசக்கூடாதாம் !

black-pongal-propaganda-by-trichy-periyar-evr-college-rsyf (7)“பொங்கல் – கருப்புநாள்”  திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி கிளை, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் பிரச்சாரம்!
வியாழனன்று (12.01.17) காலை திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் நிர்வாகத்தால் பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை அறிந்த கல்லூரி பு.மா.இ.மு கிளைத் தோழர்கள் விவசாயிகள் செத்துமடியும் போது பொங்கல் கொண்டாட்டம் நடத்தப்படுவதையும், விவசாயிகளின் இறப்புக்குக் காரணமான கிரிமினல்களின் கூட்டாளியான அரசை அம்பலப்படுத்தும் வகையில் முழக்க பதாகைகளை பிடித்துக் கொண்டு கல்லூரி வாயிலில் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர்.
இதை மோப்பம் பிடித்த போலீசு உடனே அங்கே வந்து தோழர்களிடம் தகராறு செய்தது. அதை எதிர்த்த தோழர்கள் துணிச்சலாக பிரச்சாரத்தை தொடர்ந்தனர். பிரச்சாரத்தை நின்று கவனித்த மாணவர்களை “உள்ள போ! உள்ள போ!” என மிரட்டி அனுப்பியது போலீசும், கல்லூரி நிர்வாகமும்.
இதை பொறுக்காத புமாஇமு கிளை தோழர்கள் போலீசையும், கல்லூரி நிர்வாகத்தையும் அம்பலப்படுத்தி பேசினர். மேலும், எங்கள் கருத்தை ஏன் தடை செய்கிறீர்கள் என கிளை அமைப்பாளர் விஜய் போலீசாரிடம் கேள்வி கேட்டார்.
அனுமதி வாங்காமல் செய்தால் அப்படித்தான் செய்வோம் என தொடர்ச்சியாக மாணவர்களை மிரட்டி அனுப்பப் பார்த்தது போலீசு. ஒரு கட்டத்தில் செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் “ஏன் சார் அனுமதி வாங்கலன்னு தான் இப்படி நடந்துகுறீங்களா” என போலிசாரை அம்பலப்படுத்தினார். மேலும், புமாஇமு தோழர்கள் கல்லூரிக்குள் சென்று மாணவர்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முதல்வரிடம் அனுமதி கேட்டதற்கு கடிதமாக எழுதித்தருமாறு கோரினர். கல்லூரிக்குள் ஜியோ சிம் கார்டு விற்கவோ, துணிகள் விற்கவோ அனுமதி கேட்பதில்லை. அவ்வாறு அவர்கள் அனுமதி கேட்டிருந்தால் அந்த கடிதத்தை காண்பிக்கும்படி தோழர்கள் கேட்டனர்.
முறையாக பதிலளிக்காமல் பிரச்சினையை திசை திருப்பும் கல்லூரி நிர்வாகத்தின் முயற்சியை முறியடித்து துறைவாரியாக சென்று மாணவர்களிடம் பிரச்சாரம் செய்தனர் தோழர்கள். பதறிய நிர்வாகம் சில கைக்கூலி பேராசிரியர்களைக் கொண்டு பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்தது. அதை மீறி தோழர்கள் பிரச்சாரம் செய்ததை மாணவர்கள் கூடி நின்று கேட்டதுடன் நீங்கள் சொல்வது சரிதான் என அங்கீகரித்தனர். சில பெண் பேராசிரியர்கள் பிரச்சாரத்தை செல்போனில் வீடீயோ எடுத்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீன் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் (தனித்தனியாக) போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கி சென்றனர். சில பேராசிரியர்கள் போராட்ட பராம்பரியம் கொண்ட கல்லூரி, சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் இப்படி மெளனமாக இருப்பதே அவமானமாக உள்ளது என ஆதங்கப்பட்டனர். வரலாற்றுத் துறை மாணவர்கள் “மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்” எனக் கோபமாகக் கூறினர்.
black-pongal-propaganda-by-trichy-periyar-evr-college-rsyf (1)தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான விவாசாயிகள் கருகிய பயிர்களை பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் இறந்து வரும் சூழலில் கண்துடைப்புக்காக இழப்பீடு வழங்குவது போல 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வக்கிர நாடகத்தை அரங்கேற்றி வருகிறது சின்னம்மாவின் அரசு. மறுபுறம் விவசாயிகள் தற்கொலைக்கு நியாயம் கிடைக்காத நிலையில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி ‘தமிழனின் வீர’த்தை உலகுக்கு பறைசாற்ற வேண்டுமென சில தன்னார்வ அமைப்புகள் இளைஞர்களை திசை திருப்பி வருகின்றன. இந்தப் பிரச்சினைக்காக அணிதிரளும் மாணவர்கள் இயல்பாக பா.ஜ.க, மோடி அரசை விமரிசித்தால், நீதிமன்றத்தை கேள்விகேட்டால் அதை தணிக்கும் வேலையினை இத்தன்னார்வக்குழுக்கள் செய்கின்றன.
கிரிமினல்மயமாகி தோற்றுப்போன அரசமமைப்பை அம்பலப்படுத்தி விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் மாணவர்களை வீதிக்கு அழைத்து வரும் வேலையினை பு.மா.மு தொடர்ந்து செய்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வீதியில் இறங்குவோம்! அரசை நிர்பந்திக்கும் போராட்டங்கள் – கிளர்ச்சிகள் மூலம் விவசாயிகளின் உரிமையை பெற்றுத்தருவோம்!
படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்.
  • தகவல்: பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி கிளை,
    பு.மா.இ.மு – திருச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக