வெள்ளி, 13 ஜனவரி, 2017

விகடன் விருதுகள் .. நடிகைகளுக்கு வேற ரேஞ்சு . இலக்கியவாதிகளுக்கு மகா மட்டரக மரியாதை

விகடன் விருதுகள் கவனம் குவிப்பவை. பல்வேறு தரப்பினரையும் தம்மை நோக்கி ஈர்க்கச் செய்பவை. இந்த வருடமும் விருது அறிவித்திருக்கிறார்கள். வெய்யில், சோ.தர்மன், இமையம், பிரேம் என முக்கியமானவர்கள் விருது வாங்கியிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள். எழுதுகிற அத்தனை பேருக்கும் விருது தருவது சாத்தியமில்லை. ஒருவருக்குக் கொடுத்தால் இன்னொருவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்பார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்த இயலாது. ஆனால் இந்தப் பட்டியலில் எதுவுமே சோடை போகாது என்பதால் தேர்வு குறித்தெல்லாம் விமர்சனம் எதுவுமில்லை. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த முறை விகடன் விருது வழங்கும் பிரமாண்ட விழாவை நடத்துகிறார்கள். சினிமா விருதுகள் மட்டும் மேடையில் வழங்கப்படுமாம். எழுத்தாளர்களுக்குத் தனியாக வழங்குவார்கள் என்று கேள்விப்பட்டேன். இதைத்தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. முன்பு கூட ஒரு முறை கோடு காட்டியிருக்கிறேன். கடந்த வருடம் விகடனின் டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவனாக என்னைத் தேர்ந்தெடுத்த போது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. விருதை வாங்கிக் கொள்ள சென்னை வர முடியுமா என்றார்கள். சொந்தக் காசுதான். மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு நன்றாகத்தானே இருக்கிறேன்? சென்றிருந்தேன். நுங்கம்பாக்கத்தில் ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவில் வைத்து விருதைக் கொடுத்து படம் எடுத்துக் கொண்டார்கள். அதே வருடம் வேறு பிரிவுகளில் விருது பெற்றிருந்த நயன்தாரா வந்தார். ரம்யா கிருஷ்ணன் வந்தார். அவர்களுக்குக் கிடைத்த மரியாதையே தனிதான்.

‘சொந்தக் காசு செலவு செஞ்சு பஸ் பிடிச்சு வந்து ஐநூறு ரூபாய்க்கு ரூம் வாடகைக்கு எடுத்து குளிச்சு புதுசா ஒரு செண்ட் பாட்டில் வாங்கி அடிச்சுட்டு வந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கேன்...எடுத்ததிலிருந்து ஒரு படமாவது கொடுங்கய்யா..ஃபேஸ்புக்கில் போட்டு லைக் வாங்கிக்குறேன்’ என்று கெஞ்சிக் கெஞ்சிச் சலித்துப் போனதுதான் மிச்சம். இன்றைய தினம் வரைக்கும் படத்தைக் கூட அனுப்பி வைக்கவில்லை. வெறுத்துப் போனது. கேட்பதையே விட்டுவிட்டேன். சென்னைக்கு அழைத்தவரைக் கேட்டால் ‘நீங்க அவரைக் கேளுங்க’ என்பார். அடுத்தவரைக் கேட்டால் அனுப்பி வைக்கிறேன் என்பார். 
விகடனின் தகவல் தொடர்பு மகா மட்டம்- ஒருவேளை என்னைப் போன்ற சில்லுண்டிகளுக்கு அவ்வளவுதான் மரியாதை என்று நினைக்கிறேன். ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் நூறு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக அறிவித்தார்கள். நினைவில் இருக்கிறதா? அந்தப் பணத்தை நேரடியாக வாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் நாம் கைகாட்டும் வேலையைச் செய்து கொடுப்பார்கள். அந்த நூறு இளைஞர்களில் நானும் ஒருவன். ஊர்ப்பக்கத்தில் வறட்சி நிவாரணப்பணிகளாக சிலவற்றை சிபாரிசு செய்திருந்தேன். உள்ளூர் பஞ்சாயத்து ஆட்கள் சந்தோஷமாக இருந்தார்கள். விகடனிலிருந்து நிருபர்களை அனுப்பி விசாரணையும் செய்தார்கள். இடையில் கடலூர் வெள்ளம் வந்தது. அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. விகடனிலிருந்து எந்தத் தகவலும் நேரடியாக இல்லை. ‘பணத்தை கடலூருக்கு ஒதுக்கியாச்சு’ என்று செவிவழிச் செய்தி வந்தது. ஊரில் என்னிடம் இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். விகடனிலிருந்து தகவல் சொல்லிவிட்டதாகச் சொல்லிச் சமாளிப்பேன். மரியாதைக்காவது நமக்குத் தகவல் சொல்லியிருக்கலாம் என்று வருத்தம் இல்லாமல் இல்லை.
விகடனில் பணியாற்றும் நண்பர்கள் ‘விகடனை வெளிப்படையாக விமர்சனம் செய்யாதீங்க’ என்று முகத்துக்கு நேராகவே சொல்லியிருக்கிறார்கள். விகடன் மாதிரியான வெகுஜன ஊடகங்களின் ஆதரவு நமது வளர்ச்சிக்கு உதவும்தான். விகடன் என்றில்லை- யாரிடமுமே தேவையில்லாத பகைமையை வளர்த்து கசப்பைச் சம்பாதிக்க வேண்டியதில்லை என்றுதான் நானும் கூட நினைப்பேன். ஆனால் நேரடியாக இத்தகைய அனுபவங்களைச் சந்திக்கும் போது எப்படி புலம்பாமல் இருக்க முடியும்? எல்லாவற்றையும் உள்ளே போட்டு புதைத்துக் கொள்ள வேண்டும் என்றில்லை அல்லவா? 
தம்மால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு மனிதனுக்கும் குறைந்தபட்ச மரியாதையாவது நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன தவறு? மரியாதை கொடுக்க முடியாது என்றால் சினிமாக்காரர்களுக்கும் சேர்த்து மரியாதை கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு மட்டும் இரண்டு கொம்பா முளைத்திருக்கிறது? சினிமாவால்தான் இந்தச் சமூகம் சீரழிகிறது என்று வருடத்திற்கு இரண்டு முறையாவது லாவணி பாடிவிட்டு நடிகர் நடிகையைத்தான் உயர்த்திப் பிடிப்போம் என்றால் எல்லோருக்குமே சங்கடமாகத்தான் இருக்கும்.
கடந்த வருடம் விருதை எனக்கு தபாலில் அனுப்பி வைத்திருந்தால் பெங்களூரு ஸ்டுடியோவிலேயே அந்த விருதைப் பிடிப்பது போல நின்று படத்தை எடுத்து அனுப்பி வைத்திருப்பேன். நூறு ரூபாயோடு முடிந்திருக்கும். ஒரு நாள் விடுப்பும் மிஞ்சியிருக்கும். வேஷ்டி ஒன்றை மடித்து பைக்குள் வைத்து விடுப்பு வாங்கிக் கொண்டு பேருந்து ஏறியிருந்தேன். அந்த வருடத்திலேயே விருதாளர்களின் படங்களைப் போட்டு குறைந்த அளவிலான எண்ணிக்கையில் விருதுப் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அட்டையில் நடிகர்களும் நடிகைகளும்தான் வரிசையாக நின்றிருந்தார்கள். ஆதவன் தீட்சண்யா மாதிரியான எழுத்தாளர்களுக்குக் கூட இடம் இல்லை. அது போகட்டும். ஒரு பிரதியாவது அனுப்பி வைத்தார்களா? ம்ஹூம். அப்பா உடல்நிலை சரியில்லாமல் கோவை கே.எம்.சி.ஹெச்சில் படுத்திருந்தார். பிழைக்க மாட்டார் என்று சொல்லியிருந்தார்கள். அப்பாவுக்கு வழங்கக் கூடிய கடைசிச் சந்தோஷமாக இருக்கக் கூடும் என்று அந்தப் புத்தகத்தைத் தேடி வாங்கி அழுது பிறகு கண்களைத் துடைத்துக் கொண்டு எடுத்துப் போய் காட்டினேன். 
விகடன் விருது வாங்குவது மிகப்பெரிய கெளரவம் என்று அப்பா நினைத்தார். அதை வாங்கிக் கொள்வதற்காக பேருந்து பிடித்துச் சென்றதும், அங்கே வேலைக்காரனைப் போல காய்ந்து கொண்டிருந்ததும் எனக்கு மட்டும்தான் தெரியும் அல்லது அன்றைய தினம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதவன் தீட்சண்யாவுக்கும் தெரிந்திருக்கலாம். இதையெல்லாம் நினைக்கும் போது எப்படி வெளிப்படையாக எழுதாமல் இருப்பது என்று தெரியவில்லை. அந்த மாதிரியான சூழலில் இருப்பது நம்மை நாமே குறுகச் செய்துவிடும். எவ்வளவோ நம்பிக்கையிலும் கித்தாப்பிலும் சென்னையில் இறங்கியவனுக்கு ‘நாமெல்லாம் தூசி...எப்பவுமே பொடியன்’தான் என்று பன்மடங்கு கழிவிரக்கத்தை உண்டாக்கிய தினம் என்றுதான் இன்னமும் நினைவில் நிற்கிறது. இதையெல்லாம் இப்பவும் கூட எழுதியிருக்க மாட்டேன்தான். ஆனால் சென்னையில் நடைபெறும் விழாவில் விகடன் விழாவில் சினிமாக்காரர்களுக்கு மட்டும் விருது வழங்கப்படும் என்று கேள்விப்படும் போதுதான் சுள்ளென்றாகிறது. 
அறம், சமூகம், சமத்துவம் என்றெல்லாம் பேசிவிட்டு வெறும் அரிதாரத்தை மட்டும் மேடையில் ஏற்றுவதை எப்படி விகடன் போன்ற பொறுப்புணர்வுள்ள பத்திரிக்கை செய்ய முடியும்? எழுத்தாளர்களுக்கும் பிற விருதாளர்களுக்கும் விருது கொடுப்பதாக இருந்தால் அதிகபட்சம் அரை மணி நேரம் ஆகுமா? அல்லது ஒரு மணி நேரம்? கொடுத்து அனுப்பி வைத்துவிடலாம். பல லட்ச ரூபாய் செலவு செய்யக் கூடிய பத்திரிக்கை எழுத்தாளர்களையும் பொருட்டாக மதித்து மேடையில் ஏற்றுவதுதானே நியாயம்? இதைச் செய்ய வேண்டும் என்று டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் முதல் குரலை உயர்த்தியிருக்கிறார்.

ஒருவேளை ‘அப்படியெல்லாம் இல்லை; அத்தனை விருதுகளும் மேடையிலேயே வழங்கப்படும்’ என்று விகடன் சொன்னால் சந்தோஷம்தான். எனக்குள் இருந்த மனக்குறைகளைக் கொட்டுவதற்காக இந்தக் கட்டுரையை எழுதியதாக இருக்கட்டும்.
விருதைப் புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். கடந்த வருடம் அப்படி யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் ‘சோலியைப் பார்த்துட்டு போங்க’ என்று சொல்லியிருப்பேன். எழுதுகிறவனுக்கு கிடைக்கக் கூடிய இத்தகைய அங்கீகாரங்கள் மிக முக்கியமானவை. கவனத்தை அவன் மீது குவிக்கச் செய்யும் இத்தகைய அங்கீகாரங்களும் விருதுகளும் அவனைத் தொடர்ந்து இயங்கச் செய்கின்றன. இன்றைக்கும் கூட ‘போன வருஷம் இவர்தான் டாப் 10 நம்பிக்கை மனிதர்’ என்று யாராவது அறிமுகப்படுத்தும் போது ஜிவ்வென்றிருக்கிறது. அதனால் விருதுகளை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களை மேடையேற்றி சரியான கெளரவத்தை விகடன் கொடுக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கான மரியாதை என்பதைவிடவும் இப்படி விருதாளர்களைச் சரிசமமாக பாவிப்பதுதான் அந்த விருதுக்கான மரியாதை. ஒருவேளை அப்படிச் செய்ய முடியாதெனில் அடுத்த வருடத்திலிருந்து சினிமா விருதுகளோடு நிறுத்திக் கொள்ளலாம்.  nisaptham.com/2017/01/blog-post_13.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக