திங்கள், 16 ஜனவரி, 2017

போர்க்களமான அலங்காநல்லூர்! தடையை மீறிய தாண்டவம்!


நீதிமன்றத் தடையை மீறி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்பதுதான் கேள்விக்குறியாக இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே ஆக வேண்டும் என்பது மதுரை சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் எண்ணமாக இருந்தது. கடந்த இரு நாட்களாக அலங்காநல்லூர் பகுதி பெண்கள் தங்கள் வீடுகளின் முன்னால் போட்ட கோலங்களில் பெரும்பாலானவை பீட்டாவை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் இருந்தது. இதுவே, அப்பகுதி மக்களின் மன உணர்வை பிரதிபலித்த நிலையில், ‘நேற்று முதலே அலங்காநல்லூர் வாடிவாசலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது காவல்துறை. ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்பதற்கு மட்டுமே தடை, காளைகளை வைத்து பூஜை செய்யக்கூடாது என்பதற்கு அல்ல, என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பிறகு கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் காளைகளுக்கு மக்கள் பூஜைகள் நடத்தினர்.

அலங்காநல்லூரை கிட்டத்தட்ட பிற பகுதிகளில் இருந்து போலீசார் சீல் வைத்திருந்தநிலையில் முகநூல், சமூக வலைதளங்களில் அலங்காநல்லூர் நோக்கித் திரளுவோம்! என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை சுமார் பத்து மணியளவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் அலங்காநல்லூருக்கு குறுக்குவழிகளில் வந்து குழுமினர். போலீசார் இதை எதிர்பார்க்காத நிலையில் சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டுவிட்டிருந்தனர்.
அமைதிப் பேரணி
வாடிவாசல் அருகே திரண்ட இளைஞர்களுக்கு மத்தியில், வாடிவாசல் அல்லாமல் வேறு பகுதிகளில் இருந்து காளைகளை சிலர் அவிழ்த்துவிட அது ஜல்லிக்கட்டாக மாறியது. இருந்தபோதும் ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடிய வாடிவாசல் பகுதிக்கு கோயில் மாடுகள் உட்பட எதையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேடிக்கை பார்க்க வந்த அப்பாவி இளைஞர்களை காவல்துறையினர் தடியால் அடித்து கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தங்களின் தடி உடையுமளவுக்கு காட்டுத்தனமாக இளைஞர்களின் தலையை குறிபார்த்து அடித்து ரத்தம் சொட்டச் சொட்ட விரட்டியடித்தனர். பலருக்கு கை, கால்கள் முறிந்தன. குழந்தைகள், சிறுவர்களும் காயமடைந்தனர். அலங்காநல்லூர் மைதானத்தில் இருந்த கோயில் காளைகளையும் சிறைப் பிடித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர்.
அலங்காநல்லூரில் ஏதோ கலவரம் நடப்பதுபோலவும், கலவரக்காரர்களை அடித்து விரட்டுவதுபோலவும் அவர்கள் தடியடி நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக