திங்கள், 23 ஜனவரி, 2017

தமிழகம் எங்கும் கல்வீச்சு போலீஸ் மக்கள் மோதல் பல இடங்களில் கலவரம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறுமிடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தடியடி சம்பவம், கல்வீச்சு நடைபெற்றதால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்திவந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக கவர்னர் அவசரச் சட்டம் பிறப்பித்தார். அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கும் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதையடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறுமிடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் கல்வீச்சு, போலீஸ் தடியடி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியடைந்துள்ளது.
சென்னை நடுக்குப்பம்
சென்னை நடுக்குப்பத்தில் மாணவர்களுக்கு உதவிய மீனவர்கள் பகுதியில் போலீசார் நடத்திய தடியடியில் ஒரு பெண்ணின் 5 மாத கரு கலைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல் துறையினர் கடுமையான தடியடி நடத்தினர்.
அலங்காநல்லூர்

அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஊர் கமிட்டி முடிவெடுத்தது. ஆனால் ஊர் கமிட்டியின் முடிவை போராட்டம் நடத்திவரும் பிற ஊர் இளைஞர்களும் பெண்களும் ஏற்கவில்லை. மேலும் தங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்து, தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தி வெளியேற்றினர். மேலும் அலங்காநல்லூர் ஊர் கமிட்டி, பிற ஊர் இளைஞர்களையும் பெண்களையும் வெளியேறும்படி அறிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காவல் துறையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அலங்காநல்லூர் வந்துள்ளது.
மதுரை
மதுரை தமுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீஸாரின் வேண்டுகோளை ஏற்காமல், மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமுக்கத்திலிருந்து கோரிப்பாளையம் வரை மக்கள் உள்ளதால், அவர்களைச் சுற்றி போலீஸார் பேரிகேட் அமைத்து சூழ்ந்துள்ளனர். அப்போது, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு காரணமாக லேசான தடியடி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் மீண்டும் போரட்டகரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றுகொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை திலகர் திடலில் போராட்டத்தைக் கைவிட மறுத்த மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவை
கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படிக் கூறினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் தடியடி நடத்தப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.
சிவகாசி
சிவகாசியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள்மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுவீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள்மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். ஈரோடு பேருந்து நிலையத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் வேண்டும் என்றும், பீட்டாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், போராட்டக்காரர்கள் அந்நிய குளிர்பானங்களை பேருந்து நிலையத்தில் கொட்டி அந்நிய நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பேருந்து நிலையம் போர்க்களமானது. பின்னர், சூழ்நிலையை கட்டுப்படுத்த காவல் துறையினர் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
நெல்லை
நெல்லையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடியவர்கள் தங்களது போராட்டங்களை வாபஸ் பெற்றனர். திருநெல்வேலி வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை தேசிய கீதம் பாடி நிறைவு செய்தனர். இதேபோல, கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தையும் போராட்டக்காரர்கள் நிறைவு செய்துள்ளனர்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக