வியாழன், 5 ஜனவரி, 2017

ஸ்டாலினுக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து!


மின்னம்பலம்:: விவசாயிகளின் பிரச்சனை குறித்துப் பேச தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை நேற்று மாலை திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் சந்தித்தார். அப்போது திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு ஓபிஎஸ் வாழ்த்துக் கூறினார். தஞ்சை, நாகை, திருவாரூர், உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றை பயிரிட்டு இருந்தனர். இந்த பயிர்களுக்கு அணைகள், ஏரி, குளங்களில் இருந்து போதிய நீர் கிடைக்கவில்லை. அக்டோபரில் இருந்து டிசம்பர் வரையில் பெய்யக்கூடிய பருவமழையும் கைகொடுக்கவில்லை.
இதனால், நீரின்றி பயிர்கள் கருகி போகின்றன. இந்த மனவேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்தும், மாரடைப்பிலும் இதுவரை 97 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமை செயலகத்தில் சந்தித்தார். முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவரை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்திப்பது என்பது நடக்காத காரியம். ஆனால் ஓபிஎஸ் தற்போது மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வந்தால் அவரை மறுப்பதில்லை. இந்நிலையில்தான், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது, மாரடைப்பால் மரணமடைவது போன்ற சோக நிகழ்வுகள் குறித்தும், அம் மாவட்டங்களின் நிலைமை குறித்தும் முதலைமைச்சருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அதற்கு ஓபிஎஸ் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க..ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு ஸ்டாலினை சந்திக்க ஓபிஎஸ் நேரம் ஒதுக்கியிருந்தார். இதனையடுத்து தலைமைச் செயலகம் வந்த ஸ்டாலின். முதலமைச்சரின் அறைக்குச் சென்று ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்தார். சந்தித்த உடன், திமுக செயல் தலைவராகப் பொறுப்பேற்றதற்கு ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். இதையடுத்து தமிழகத்தில் மழை பொய்த்துப் போனதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளார்கள்.
தமிழத்தின் வறட்சி நிலை குறித்து சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் இருந்தனர். ஆளும் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவரும் அடிக்கடி சந்தித்து மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவது தமிழகத்தில் புதிதாக இருந்தாலும் இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக