வியாழன், 5 ஜனவரி, 2017

பணியிடத்தில் பாலியல் தொல்லை : 69% பெண்கள் புகார் தெரிவிப்பதில்லை!


மின்னம்பலம் : பெரும்பாலான பாலியல் தொல்லை வழக்குகள் பணியிடங்களிலேயே நடைபெறுகிறது. அதில், பாதிக்கப்பட்ட 68.9% பெண்கள் குற்றவாளி மீது ஏற்படும் அனுதாபம், பயம், பின்விளைவுகள் போன்ற காரணங்களால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை என இந்தியன் நேஷனல் பார் அசோசியேஷன் (INBA), வழக்கறிஞர்கள் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு, அகமதாபாத்,பெங்களூர், கவுகாத்தி, ஹைதராபத், ஜலந்தர், கொல்கத்தா, லக்னோ, மும்பை,நியூடெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் அமைந்துள்ள பிபிஓ, ஐடி, கல்வி நிறுவனங்கள், சட்ட துறை, மருத்துவமனை, உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாயம், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் துறைகள் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 78% பெண்களும், 22% ஆண்களும் பங்கேற்றனர்.

பயம், சங்கடம், புகார் அளிப்பதற்கான செயல்முறை மீது நம்பிக்கை இல்லாமை மற்றும் பாலியல் துன்புறுத்தலுடன் இணைக்கப்பட்ட களங்கம் போன்ற காரணங்களால் பெண்கள் நடந்த சம்பவம் குறித்து புகார் தெரிவிப்பதில்லை. கண்டுபிடிப்புகள் படி, பெரும்பாலான நிறுவனங்கள் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை, தீர்வு) சட்டம், 2013-ன் கீழ் சரியான நடவடிக்கையை எடுக்க தெரிந்துக் கொள்வதில்லை.
பதிலளித்தவர்களில் 65% பேர் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என தெரிவித்துள்ள்னர். 60% மக்கள் பாலியல் துன்புறுத்தல்கள் குறைந்தது 6 மாதங்கள் வரை தொடர்கிறது என தெரிவித்துள்ளனர். 28.9% மக்கள் பாலியல் துன்புறுத்தல்கள் ஓராண்டுக்கும் மேலாக தொடர்கிறது என தெரிவித்துள்ளனர்.
அலுவலங்களில், பெண்கள் பார்க்கும் போது ஆபாச செய்கைகள், கீழ்த்தரமான கருத்துகள், தவறான எண்ணத்தில் தொட்டு பேசுதல், நேரடியாக பாலியல் உறவுக்கு அழைத்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு உயர்ந்து இருந்தாலும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு போதுமான சட்ட பாதுகாப்பு இல்லை என 42.2%பேர்தெரிவித்துள்ளனர். போதுமான சட்ட பாதுகாப்பு உள்ளது. ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இல்லை என 46.7% பேர் தெரிவித்துள்ளனர்.
பணியிடத்தில், சரியான புகார் அளிப்பதற்கான செயல்முறை,குழுக்களின் கடமைகள்,விசாரணை குழுவின் பங்கு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பெண்கள் உரிமைகள் வரையறுக்கப்பட்ட போதிலும், விதிகள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டியுள்ளது என இந்தியன் நேஷனல் பார் அசோசியேஷனை சேர்ந்த ஜமீர் நதானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறும்போது, “ பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் வேலை பறிக்கப்படும் என்னும் பயத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை. எனெனில், சமூகம் ஏற்படுத்தும் களங்கத்தால், பாதிக்கப்பட்டவர்கள் மற்ற இடங்களில் வேலைகளை தேடி கண்டுபிடிக்க முடிவதில்ல.
இந்தியாவில் 82% பெண்கள் பாலியல் வன்முறையிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள போராடியுள்ளனர். குறிப்பாக, 25 வயது முதல் 34 வயது வரை உள்ள 91 சதவிகித பெண்கள் வன்முறையை எதிர்க்க பழகியுள்ளனர். இந்த பெண்கள் எப்படி தங்களை வன்முறையில் இருந்து காப்பாற்றி கொள்கிறார்கள் என்றால், 35 சதவிகித பெண்கள் வெளிச்சம் குறைவான பகுதிகளை தவிர்ப்பதன் மூலமாகவும், 36 சதவிகித பெண்கள் தாங்கள் செல்லும் வழியை மாற்றுவதன் மூலமாகவும், 23 சதவிகித பெண்கள் ஆயுதங்கள் மூலமாகவும், 18 சதவிகித பெண்கள் பாதுகாப்பு சாதனமான அலாரம் அல்லது மிளகு ஸ்ப்ரே பயன்படுத்துவதன் மூலமாகவும் தங்களை காத்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக