திங்கள், 30 ஜனவரி, 2017

பவானி ஆற்றுக்கு தடுப்பணை கட்டுவதை தடுக்க போராட்டம்



ரோடு: கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் என கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.பவானி ஆற்றுநீரை நம்பி ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர் பாசன நிலமும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. சமீபகாலமாக மழையளவு குறைந்து வருவதால் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய இரு இடங்களில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு துவங்கியுள்ளது. இதுபோக சாவடியூர், சீரக்கடவு, பாடவயல், சாலையூர் ஆகிய 4 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டு ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 தடுப்பணை கேரள அரசு கட்டும் பட்சத்தில் பவானி ஆற்றில் இருந்து பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.
பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்தால் தமிழகத்தில் பவானி ஆற்றை நம்பியுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களும் கடும் பாதிப்படையும். ஏற்கனவே கேரள அரசு முக்காலியில் தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்ட போது தமிழக விவசாயிகளின் கடும் எதிர்ப்பினால் அப்பணி பாதியில் கைவிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அட்டப்பாடியில் சிறுவாணி, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்ட கேரள அரசின் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை ஆனைகட்டியில் தடுப்பணை கட்டுவதை தடுப்பதற்காக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை தடுக்க வலியுறுத்தி நடந்த இப்போராட்டத்தில் ஈரோட்டில் இருந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று விவசாயிகள் பங்கேற்றனர். தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் கி.வெ.பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி, கீழ்பவானி முறைநீர் பாசன சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன் உள்ளிட்ட பாசனசபை நிர்வாகிகளும், விவசாயிகளும் பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி, கி.வெ.பொன்னையன் ஆகியோர் கூறியதாவது: 5.2.2007ல் வெளியான காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பின்படி தமிழகம், கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு காவிரி நீர் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இத்தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் காவிரியின் துணை நதியான பவானி ஆற்றில் எந்த ஒரு கட்டுமான வேலையும் செய்வது நீதிமன்ற விதிகளை மீறும் செயல் ஆகும். நடுவர்மன்றத்தீர்ப்பு கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம், நீர்பங்கீட்டுக்குழு அமைக்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருகிறது.

எனவே தடுப்பணைகளை கட்டும் முயற்சியை கைவிடுமாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 23ம் தேதி கேரள அரசுக்கு கடிதமும் எழுதியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தடுப்பணை கட்டும் பணிக்கு தமிழக அரசு தடையாணை பெற்று கேரள அரசின் சட்ட விரோதமான இந்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற நடுவர்மன்றத் தீர்ப்பிற்கு எதிரான நடவடிக்கை கண்காணிக்கப்படும். எனவே, இதன் மூலம் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது தீர்ப்பிற்கு எதிராக உள்ளது என்று தான் கருத வேண்டியுள்ளது. எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தியே கோவை ஆனைகட்டியில் இருந்து கேரளா சென்று நடக்கவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை கைவிடும் வரையிலும் விவசாயிகளின் போராட்டம் தொடரும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்  தினகரன்


பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்துக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !!!
பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகளை கட்ட முனைந்துள்ளது. இவ்வாறு கட்டப்படும் தடுப்பணைகள் அங்குள்ள மலைவாழ் மக்களின் குடிநீர்த் தேவைக்காக என்று கேரள அரசு கூறினாலும், பவானி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டி தண்ணீர் தேக்குவதால் தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பவானி பாசன நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதும், இம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும்.
மேலும் காவிரி நதியின் துணை நதிகளாக உள்ள பவானி உள்பட ஆறுகளின் நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் பிப்ரவரி 24ந் தேதி முதல் அன்றாடம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. விசாரணை முடிந்து விரைவில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படவுள்ளதுடன் அதுவே இறுதியானது எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் கூட காத்திராமல் கேரள அரசு முன்கூட்டியே தடுப்பணைக் கட்ட முனைந்துள்ளது
எனவே, கேரள அரசு முனைந்துள்ள தடுப்பணைக் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
- ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக