செவ்வாய், 17 ஜனவரி, 2017

மெரீனாவில் வரலாறு காணாத மக்கள் எழுச்சி!

மின்னம்பலம் :ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் போலீசார் நடத்தும் அத்துமீறல்களுக்கு எதிராகவும், இளைஞர் போராட்டம் மாநிலம் முழுக்க பரவத் தொடங்கியுள்ளன. ‘மாணவர்களை விடுதலை செய் அல்லது எங்களையும் கைது செய்' என்ற தன்னெழுச்சி முழக்கம் தமிழகத்து நகரங்களை அதிரவைத்துக்கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தவர்கள் இப்படி ஒரு வரலாறு காணாத எழுச்சி தமிழகத்தில் ஏற்படும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். ஒருநாள் அல்லது 2 நாள் போராடுவார்கள் என்றுதான் நினைத்திருப்பார்கள். இப்படி மனப்பால் குடித்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்தது அலங்காநல்லூர் மண். இரவு பகலாக அந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்களை காவல்துறை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது. அவர்களை விடுவிக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் வெடித்துள்ளன.
மெரினாவில் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 7 மணிமுதல் தொடர்ந்து 8 மணி நேரமாக மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் விவேகானந்தர் இல்லம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவிடாமல் செய்திருக்கும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவண்ணம் உள்ளனர் மாணவர்கள். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். மேலும் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் சென்னை மாணவர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர். மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்டாலினுக்கு எதிராக கோஷம்
போராட்டம் நடைபெறும் இடத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்றபோது, அங்கிருந்த போராட்டக்காரர்கள் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முழக்கமிட்டனர். அரசியல்வாதிகள் போராட்டத்தில் பங்கு பெற வேண்டாம் என்று அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது போராட்டக்காரர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசும், மாநில அரசும் எந்தவித முயற்சியும் எடுக்காமல் மக்களை ஏமாற்றிவிட்டது. அலங்காநல்லூர் உள்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டில் ஈடுபட்டதாக இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தது மட்டுமல்லாமல், காளை மாடுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக கைதானவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு வந்துள்ளேன். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்துக்கு எதிராகச் செயல்படும் பீட்டா அமைப்பை தடைசெய்யவும் வலியுறுத்தியுள்ளேன்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடக்கும் என்று தினமும் கூறிவந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்பதாகக் கூறுகிறார். இப்போது ஜல்லிக்கட்டு நடைபெற மீண்டும் முயற்சி எடுப்பதாகக் கூறுகிறார். அவரது பேச்சு நம்பிக்கையளிப்பதாக இல்லை. மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை தை மாதத்துக்குள் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி, ஜெ.அன்பழகன் ஆகியோரும் வந்திருந்தனர்.
அதிகாரிகள் பேச்சு
மெரினாவில் போராட்டம் நடத்திவரும் மாணவர்கள், இளைஞர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்று போராட்டக்கார்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அது போல கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். ஆகவே கலைந்து செல்லுங்கள் என்று காவல்துறையினர் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இளைஞர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக