ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கன்னடா்கள் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் : சீமான் அறிவிப்பு


  கன்னட இளைஞர்களும், பொதுமக்களும் கன்னடர்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா எனப்படும் எருது ஓட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகப் போராடுவது மிகுந்த மனமகிழ்ச்சியையும், பெருத்த நம்பிக்கையையும் தருகின்றது. அவர்களது போராட்டம் சிறக்கவும், போராட்ட நோக்கம் வெல்வதற்கும் தமிழ்த்தேசிய இனத்தின் சார்பாக புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தோடு கம்பலா விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் எழுச்சிமிகுப் போராட்டங்களில் கர்நாடக நாம் தமிழர் கட்சி பங்கேற்கும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ”பல்வேறு மொழிவழித்தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து வாழும் ஓர் ஒன்றியமாக இந்தியா விளங்குகின்றது. இதில் வாழும் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்த பண்பாட்டு அடையாளங்களையும், தனக்கே உரிய பாரம்பரிய மரபுகளையும் நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகின்றது. இவை யாவற்றையும் சிதைத்து அழித்து, தேசிய இனங்களின் உரிமைகளை அடியோடு மறுத்து இந்தியாவை ‘இந்து நாடாக’கட்டமைக்க முயல்கிறது இந்துத்துவத்தலைமைப் பீடம்.
அதற்கான முன்முயற்சியாக தேசிய இனங்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, அடையாளம், வரலாறு, விளையாட்டு, மரபு என எல்லாவற்றையும் சிதைக்கின்ற வேலையினைத் தொடங்கியிருக்கிறது. அதற்கான முன்னோட்டம்தான் புதிய கல்விக்கொள்கை தொடங்கி இந்தித் திணிப்புவரையுமான இந்துத்துவத்தின் வேர்பரப்பும் அத்தனைச் செயல்பாடுகளும், தமிழர்களின் தொன்ம வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையும், கன்னடர்களின் கம்பளாவுக்கு விதிக்கப்பட்டத் தடையும் அதன் நீட்சியேயாகும். தேசிய இனங்களுக்கு எதிரான ஆரியத்தின் இத்தகையச் செயல்பாடுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி, தங்களது தனித்த அடையாளங்களைத் தற்காத்துகொள்ள, தேசிய இனங்கள் தங்களது அடையாளத்தோடு ஓரணியில் சங்கமிக்க வேண்டியது வரலாற்றுப் பெருங்கடமையாகும். தமிழ்த்தேசிய இனத்தின் பண்பாட்டின் மீது தொடுக்கப்படும் போருக்கு எதிராக எம்மின இளையப் புரட்சியாளர்கள் கிளர்ந்தெழுந்து உலகமே வியக்கும்வண்ணம் மாபெரும் அறவழிப்போராட்டத்தை நிகழ்த்தி வரலாற்றில் ‘தைப்புரட்சியாக’ பதிவு செய்திருக்கிறார்கள். இதன்மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் பரவிவாழும் தமிழர்களிடையே ஓற்றுமையும், இனவெழுச்சியும் ஏற்பட்டு, தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் விழிப்புற்றிருக்கிறது. இளையோர் கூட்டத்தின் வரலாற்று பெரும்எழுச்சி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதலை மீட்டிருப்பதோடு, தமிழர்களின் அத்தனைப் பண்பாட்டு விழுமியங்கள் குறித்தும், பாரம்பரிய அடையாளங்கள் குறித்தும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி, அதற்கே திரும்ப வழிவகை செய்திருக்கிறது. தமிழ் இளையோர் எம்மண்ணில் நிகழ்த்திய ‘தைப்புரட்சியை’ அடியொற்றி கன்னட இளைஞர்களும், பொதுமக்களும் கன்னடர்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா எனப்படும் எருது ஓட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகப் போராடுவது மிகுந்த மனமகிழ்ச்சியையும், பெருத்த நம்பிக்கையையும் தருகின்றது. அவர்களது போராட்டம் சிறக்கவும், போராட்ட நோக்கம் வெல்வதற்கும் தமிழ்த்தேசிய இனத்தின் சார்பாக புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தோடு கம்பலா விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் எழுச்சிமிகுப் போராட்டங்களில் கர்நாடக நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் எனவும் உறுதியளிக்கிறேன். ஜனநாயகப் புரட்சி வெடிக்கட்டும்! அநீதிக்கு எதிரான போர் வெல்லட்டும்!” என்று கூறப்பட்டுள்ளது. minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக