செவ்வாய், 31 ஜனவரி, 2017

சுபவீ: எது பகை இலக்கு, என்பது இந்தப் போராட்டத்தில் இறுதிவரையில் தெளிவுபடுத்தப்படாமலே போயிற்று.

police station burntஅண்மையில் நடந்து முடிந்த மாணவர் போராட்டம் பற்றிய இரண்டு கருத்துகளில் எவர் ஒருவருக்கும் மாறுபாடு இல்லை. ஒன்று, மாணவர்களின் உறுதி பற்றியது. இன்னொன்று, அவர்களின் போராட்ட ஒழுங்கு பற்றியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் வியந்து பார்த்ததும், அங்கங்கு ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்தியதும், இந்த இரண்டு பார்வைகளின் அடிப்படையில்தான். 16ஆம் தேதி தொடங்கிய போராட்டம், ஓரிரு நாள்களுக்கு நீடிக்கும் என்றுதான் பலரும் கருதினர். அதிகம் போனால், பொங்கல் விடுமுறை முடிந்து கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் திறக்கப்படும் வேளையில் மாணவர்கள் கலைந்து போய் விடுவார்கள் என்றே அனைவரும் கணித்தனர். மாணவர்களோடு சேர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் அமீர் கூட, ‘இன்னும் இரண்டு நாள்களில் இந்தப் போராட்டம் நீர்த்துப் போகலாம், ஆனால், இப்போது உருவாகியுள்ள எழுச்சி என்றைக்-கும் நீர்த்துப் போகாது’ என்றுதான் தொலைக்காட்சியில் கூறினார்.
எல்லோருடைய கணிப்பும் தவறாகிவிட்டது. ஆறு நாள்கள் இரவு பகலாக, கொட்டும் பனியிலும், குளிரிலும் போராட்டம் தொடர்ந்தது. ஆண்களும், பெண்களுமாய்த் திறந்த வெளியில் கூடி நின்றனர். எனினும், குறை சொல்ல முடியாத வகையில், கண்ணியமும் அங்கே குடிகொண்டிருந்தது. அந்த உறுதி அரசையும் கூட மலைக்க வைத்தது.

;பொதுவாக, கூட்ட உளவியல் என்று ஒன்று உண்டு. சிலர் பலராகும்போது, கட்டுப்பாடு தறிகெட்டுப்போகும். பல்லாயிரம்பேர் கூடியிருக்கிற இடம், குப்பைக் கூளமாக மாறுவது இயற்கை. ஆனால், எல்லாவற்றையும் மாணவர் கூட்டம் வென்று காட்டியது. அவர்கள் அங்கே தங்கிப் போராடிய அத்தனை நாள்களிலும், ஓர் ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டது. சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அதே நிலைமை அச்சு அசலாகப் பின்பற்றப்பட்டது. இவையெல்லாம் போராட்டத்தின் நோக்கத்திற்கு வலிமை சேர்த்தன

நாம் அறிந்த வரையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஓரிரு நாள்களில் இப்படி ஓர் அவசரச் சட்டம் இயற்றப்பட்டதில்லை. மாணவர் எழுச்சியின் வலிமைதான், அதைத் தீர்மானித்திருக்கிறது. இறுதிக்கட்டத்தில்தான் அரசு பெரும் பிழை ஒன்றைச் செய்தது. நீதிபதி அரி பரந்தாமன் அவர்களை மாணவர்களிடம் பேச வைத்து, சட்டம் சரியாகத்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்னும் உண்மையை, 23ஆம் தேதி மாலை அரசு உணர்த்தியது.
அதனைக் காலையிலேயே செய்திருந்தால், வேண்டாத நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியிருக்காது.
ஆறு நாள்கள் அமைதியாக மட்டுமின்றி, மாணவர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட தமிழக அரசின் காவல்துறை, திடீரென்று ஏழாவது நாள் தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியது. எல்லாவற்றினும் மிகப்பெரிய கொடுமை எதுவென்றால், ஊடகங்கள் வெளியிட்டிருக்கிற, வாகனங்களுக்குக் காவலர்களே தீ வைக்கும் காட்சிதான். மாணவர்களை அடித்துத் துவைப்பதற்கு முன்பு, அதனை நியாயப்படுத்துவதற்காக, இப்படிச் சில செயல்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

;இங்குதான், நமக்குப் பல வினாக்கள் எழுகின்றன. மாணவர்களின் போராட்டம் நியாயம் என்கிற அடிப்படையில் மக்கள் அதனை ஆதரித்திருக்கலாம். ஆனால் சட்டத்தின் ஆட்சி என்று வருகிறபோது நியாயம், அநியாயம் என்பதற்கெல்லாம் இடமில்லை. சட்டம் என்ன சொல்கிறது என்று மட்டும்தான் பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால், நான்கு பேருக்கு மேல் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடுவதையே சட்டத்திற்குப் புறம்பான கூடுதல் என்றுதான் காவல்துறை கூறும். அப்படி இருக்க, பல்லாயிரக்கணக்கானவர்கள் நாடு முழுவதும் ஒரே இடத்தில், கூடியிருக்கும்போது, அதனை ஆறு நாள்கள் அனுமதித்த அரசு, திடீரென்று ஏழாவது நாள் அதனை கலைக்க முற்பட்டதற்கு என்ன காரணம்?

அனைவரும் கூடியிருப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததிலும் ஓர் அரசியல் இருக்கிறது. சட்டென்று கலைக்க முயன்றதிலும் ஓர் அரசியல் இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் பல்வேறு எதிர்கால அரசியல் ரகசியங்கள் இருக்கின்றன">எவ்வாறாயினும் மாணவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. முறைப்படியான சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு நிகழ்வு மீதமிருக்கிறது. இப்போது தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ள சட்டத்தை, 9ஆவது அட்டவணையில் சேர்ப்பதன் மூலமே, அதற்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடியும். எவ்வாறாயினும் இந்தச் சட்டமும் நிரந்தரமானது என்றோ, எவராலும் எக்காலத்திலும் மாற்றவே முடியாது என்றோ கூற இயலாது. ஏனெனில் நிரந்தரச் சட்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை.

எந்த ஒரு சட்டத்தையும் நீதிமன்றம் சென்று மாற்றக்கோருகிற உரிமை, அல்லது திருத்தம் கோருகிற உரிமை எல்லோருக்கும் உண்டு. அரசமைப்புச் சட்டமே பலமுறை திருத்தப்பட்டும், மாற்றப்பட்டும் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 9ஆம் அட்டவணையிலும் சேர்த்து விட்டால், இப்போதைக்குப் பாதுகாப்பாக எதைச் செய்ய முடியுமோ, அதைச் செய்திருக்கிறோம் என்று பொருள். இந்த அளவில், மாணவர்களின் தைப்புரட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று வரலாறு குறித்துக் கொள்ளும்.

;பீட்டாவைத் தடை செய்ய வேண்டுமா?
 நடந்துமுடிந்த மாணவர்கள் போராட்டத்தில், மிகுதியும் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இரண்டு. ஒன்று, சல்லிக்கட்டு; இன்னொன்று, பீட்டா. சல்லிக்கட்டின் மீது மாளாத ஆர்வமும், பீட்டாவின் மீது தாள முடியாத வெறுப்பும் வெளிப்பட்டன. வெகுமக்களின் உணர்வுகளை மதிக்காத பீட்டா அமைப்பு, கடும் தாக்குதலுக்கு உள்ளானது இயற்கைதான். இருந்தாலும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை ஏற்க இயலாது. நாட்டைக் காட்டிக்கொடுக்கிற அல்லது நாட்டின் நலனுக்கு நேர் எதிரான செயல்களில் ஈடுபடுகிற அமைப்பைத்தான் சட்டப்படி தடை செய்ய முடியும்.

பீட்டா அமைப்பு நீதிமன்றத்திற்குத்தான் செல்கிறது. நீதிமன்றத்திற்குச் செல்வதையே தடை செய்வது ஜனநாயக நாட்டில் இயலாத மற்றும் கூடாத ஒன்று. மேலும் பீட்டா அமைப்பைத் தடை செய்துவிட்டால், வேறு யாரும் சல்லிக்கட்டை எதிர்த்து நீதிமன்றத்திற்கே செல்ல மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. நீதிமன்றத்திலும் நின்று நிலைக்கக் கூடிய வகையில், சட்டம் இயற்றுங்கள் என்று அரசைத்தான் நாம் வலியுறுத்த முடியும். நம் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமானவையாக இருந்தாலும் எப்போதும் மாற்றுக் குரல்களுக்கு ஜனநாயகத்தில் இடம் இருக்கவே செய்கிறது. அரசுகளை நோக்கி நீள வேண்டிய கரங்கள், பீட்டாவை நோக்கி நீள்வது ஒருவிதமான திசை திருப்பலே ஆகும். களத்தில் நிற்கும் மாணவர்களிடம் இவை போன்ற உண்மைகளை விளக்காமல், “யாருடா அந்த பீட்டா, என் பேட்டா செருப்பாலேயே அடிப்பேன்” என்றெல்லாம் சிலர் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உரையாற்றிய காட்சிகளை நாம் பார்த்தோம். உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழலிலும் உண்மைகளைத் தெளிவுபடுத்தும் போக்கினைக் கையாள அறிவுச் சமூகம் முயன்றிட வேண்டும்.

கணினி யுகமும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழ்நாடே ஓரணியில் திரண்டு நிற்கிறது என்றாலும், அது குறித்த வேறு பார்வைகளுக்கும் நாம் இடம் தருதல் வேண்டும். ஏறுதழுவுதல் என்பது, நம் பழந்தமிழ்ப் பண்பாடு. நாயக்கர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, அது சல்லிக்கட்டாக மாறியது. காளை மாடுகளின் கொம்புகளில் சல்லிக்காசுகளைக் கொண்ட கட்டுகளைக்கட்டி, காளைகளை அடக்குவோர், அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் வீர விளையாட்டே சல்லிக்கட்டு. அது காலப்போக்கில், தவறாக ஜல்லிக்கட்டு என்று ஒலிக்கப்படுகிறது. இப்போது அந்த சல்லிக்கட்டு நடைமுறையில் இல்லை. ஏறுதழுவுதல்தான் நடைபெறுகின்றது.
ஏறுதழுவுதல் என்பதும் கூட, ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்பாடு என்று கூறிவிட முடியாது. முல்லை நில மக்களிடம் அந்த வழக்கம் இருந்திருக்கிறது. “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாள் ஆய மகள்” என்கிறது முல்லைக்கலி. முல்லை நிலத்து ஆயர்களிலும் மூவகையினர் உண்டு. கோட்டினத்து ஆயர், கோவினத்து ஆயர், புல்லினத்து ஆயர் என அவர்கள் அழைக்கப்படுவார்கள். காளைகளை வளர்ப்போர், பசு வளர்ப்போர், ஆடுகள் வளர்ப்போர் என்பது அப்பிரிவினையின் பொருள். காளைகளை வளர்ப்போர்தான் ஏறு தழுவுதலில் பேரார்வம் காட்டியவர்கள். வீர யுகத்தின் விளையாட்டு அது.
கணினி யுகத்தில் வாழும் இன்றைய இளைஞர்கள் அந்த வீர யுகத்தின் விளையாட்டை வேண்டி நின்ற போராட்டம் வரலாற்றில் ஒரு வியப்புதான். அதில் பிழை ஒன்றுமில்லை. நம் தொன்மையான பண்பாட்டில் நமக்குள்ள விருப்பம் ஆழ்மனத்தில் படிந்து கிடக்கும். அதன் வெளிப்பாடாகவும் இந்தப் போராட்டம் இருந்திருக்கலாம். இதில் விலங்குகள் வதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. எனினும், கொம்புகள் குத்தி இளைஞர்கள் இறந்து போவதை ஒவ்வோர் ஆண்டும் நாம் பார்த்திருக்கிறோம். அதனைத் தவிர்க்கலாமே என்னும் எண்ணத்தில்தான் ஏறுதழுவுதலுக்கான மாற்றுக் குரல்களும் வெளிப்படுகின்றன. எந்த விளையாட்டில்தான் ஆபத்தில்லை என்று கேட்பது இதற்கான விடையாகுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அனுமதிப்பதும் - அவமதிப்பதும்
மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் இரண்டு செய்திகள் அழுத்தமாகச் சொல்லப்படுகின்றன. தலைமையே இல்லாமல் தன்னெழுச்சியாக நடந்த போராட்டம் என்றும், அரசியல் வாதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்த போராட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ‘இங்கு யாரும் தலைவர்கள் இல்லை, நாங்கள் எல்லோருமே தலைவர்கள்’ என்பது சொல்வதற்கும், கேட்பதற்கும் சுவையாக இருக்கிறது. எனினும் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நாம் புறந்தள்ளி விட முடியாது. இறுதியில், யார் முடிவெடுப்பது என்னும் கேள்வி எழும்போது, வேறுபட்ட நிலைகள் ஏற்பட்டதற்கு அதுதான் காரணம். ஒரு தலைவர் என்று இல்லாமல் கூட்டுத்தலைமை என்று வேண்டுமானால் சிந்திக்கலாம். எப்படி இருந்தாலும் ஓர் இயக்கத்திற்குத் தலைமை என்பது தேவையான ஒன்றாகவே இருக்கிறது.
அரசியல்வாதிகளே வேண்டாம் என்று மாணவர்கள் கூறியதைத் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது, அது அவர்களின் உரிமை. அதில் நாம் குறுக்கிட முடியாது. ஆனாலும் ஒரு செய்தியை இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு கட்சி அல்லது ஒரு தலைவரின் தலைமையை அவர்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆதரவைத் தெரிவிக்க வருகிற தலைவர்களிடம் ஆதரித்து உரையாற்ற வேண்டாம் என்று கூட கேட்டுக்கொள்ளலாம். ஆனால் அப்படி வருகின்ற அரசியல் தலைவர்களின் மீது, தண்ணீர்ப் பைகளை வீசி அவமதிக்க வேண்டியதில்லை. ஒருவரை உள்ளே அனுமதிப்பது வேறு, வெளிப்படையாக அவமதிப்பது வேறு என்பதை, கண்ணியமாக ஒரு போராட்டத்தை நடத்திய நம் பிள்ளைகள் ஏன் உணரவில்லை?
எந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு வேண்டாம் என்று மாணவர்கள் கூறினார்களோ, அதே அரசியல்வாதிகள்தான் மாணவர்கள் வேண்டிய சட்டத்தை, சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.  கீற்று.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக