வியாழன், 12 ஜனவரி, 2017

விவசாயிகள் மரணம் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தமிழக அரசு !

விவசாயிகளை முழுமையாகக் காப்பாற்றும் வரை மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம், போராட்டம் என டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்
people-power-protestவினவு :விவசாயிகளின் மரணத்திற்கும் கருகிய பயிர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது விவசாயிகளை வஞ்சிக்கும்  கண்துடைப்பு இதை ஏற்கமுடியாது. இந்த அரசு விவசாயிகளை காப்பாற்றாது என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணம் தான் இந்த அறிவிப்பு
கர்நாடக காங்- பா.ஜ.க-வின் அடாவடியாலும், மோடி அரசின் துரோகத்தாலும் இந்த ஆண்டும் காவிரியில் தமிழகத்தின் தண்ணீர் பங்கீட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் தீர்வு காண முடியாமல் திராணியற்று நிற்கின்றது. பருவ மழையும் பொய்த்ததால் தஞ்சை டெல்டா விவசாயம் கருகியது மட்டுமல்ல குடிநீருக்கே மக்கள் விலங்குகள் போல் அலையும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்து எச்சரிக்கின்றனர்.

ஆறுகள், ஏரி, குளம் கண்மாய் அனைத்தும் வறண்டுபோன நிலையில், வரைமுறையற்ற மணல் கொள்ளையால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விவசாயிகள் கடன் சுமையாலும், விளைச்சலுக்கு கட்டு்படியான விலை இல்லாமலும் அழிவின் விளிம்பில் நிற்கின்றனர். தமிழக அரசும், வேளாண்மை துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டலையோ, எச்சரிக்கையையோ, அறிவுறுத்தலையோ வழங்காதது கண்டனத்திற்குரியது. விவசாயத்தின் அழிவிற்கும், விவசாயிகள் மரணத்திற்கும் நேரடியாக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
உலகுக்கே சோறு போடும் உழவர்களுக்கு நன்றி செலுத்துவதுதான் உழவர் திருநாள்.  பெரும்பாலான  விவசாயிகளின் வீடுகள் பயிரை இழந்து, சொந்தங்களை இழந்து, இழவு வீடாக மாறியுள்ள நிலையில் பொங்கல் விழா ஒரு கேடா ? நமது வீட்டில் இழவு விழுந்தால் பொங்கலை நாம் கொண்டாடுகிறோமா? எனவே இந்த பொங்கல் தினத்தை கருப்பு தினமாக கருதி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
கர்நாடகாவும், கேரளாவும் உயிரிழந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து, வறட்சிப் பகுதிகளை பதிவு செய்து மத்திய அரசிடம்  வறட்சி நிவாரணம் பெற்று விட்டது. தமிழக அமைச்சர்கள் காலில் விழுவதற்கும், கும்பிடுவதற்கும் ஒதுக்கும் நேரத்தை ரத்து செய்துவிட்டு தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். இல்லை என்றால் பதவி விலக வேண்டும். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராசன் போன்றோர் விவசாயிகளின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களின் எல்லா நிகழ்ச்சிகளையும் விவசாயிகள் புறக்கணிப்பதுடன் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
people-power-protest3மத்திய மாநில அரசுகள் விவசாயத்தையும் விவசாயிகளையும் வாழ்விப்பதற்கு பதிலாக அவர்கள் நிலங்களை கைப்பற்றி, அகதிகளாக நகரத்தை நோக்கி விரட்டுவது என்பதை கொள்கையாக வைத்திருக்கிறது. ஆற்றுமணல் கொள்ளை, மீத்தேன் திட்டம், பணமதிப்பு நீக்கம், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிக்காமல், அவற்றை அழித்தல் ஆகியவற்றினை அசுர வேகத்தில் செயல்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் போராடினாலோ அவர்களை போலீசை வைத்துத் தாக்கி, பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்துகிறது.
பாதிப்புகளை தடுக்க முயலாமல், வெள்ள பேரழிவிலும், வறட்சி பேரழிவிலும் மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் திட்டம் போட்டு செயல்படுகின்றனர். வறட்சி பாதித்துள்ள முக்கியப் பகுதியான நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் தமிழகத்தில் வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் சம்பளப் பணம் வழங்கப்படவில்லை. தமிழக கரும்பு விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளாக சுமார் 2,000 கோடி நிலுவைத் தொகையை வழங்கவில்லை. பெரம்பலூரில் சொசைட்டியில் பால் கொடுத்தவர்களுக்கு சொசைட்டி மூன்று மாதமாக நிலுவைத் தொகை வழங்கவில்லை. ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் எப்படி ஊழல் செய்யலாம், எப்படி கொள்ளையடிக்கலாம் எனப் போதைக்கு அடிமையான குடிகாரனாக மாறி நிற்கிறது. இத்தகையவர்கள் விவசாயிகள் மரணத்திற்கும், கருகிய பயிர்களுக்கும் கண்ணீர் சிந்துவார்கள், பிரச்சினையை தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையில்  மாற்று வழியை பற்றி சிந்திக்க வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறோம்.
மீண்டும் மீண்டும் மனு கொடுப்பது, கவர்ச்சி அறிவிப்புகளை கண்டு ஏமாறுவது, தானாக ஏதாவது நடக்கும் என விவசாயிகள் வெயிலில் ஏன் காத்திருக்க வேண்டும்? பாதிக்கப்பட்ட மக்கள்தான், நிவாரணம் கிடைக்கவும், நிரந்தரத் தீர்வு காணவும், போராடியாக வேண்டும். இது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல என்பதைப் பிற மக்களுக்கு உணர்த்தினால் மட்டுமே விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்.
கருகிய பயிர்களைக் கண்டோ, வாங்கிய கடனை நினைத்தோ தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைய வேண்டாம். இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. வங்கிக்கடன், கந்து வட்டிக் கடன், அரசின் நிவாரணம், இழப்பீடு என அனைத்தையும் நம்மால் எதிர் கொள்ள முடியும். மக்கள் அதிகாரம்தான் மாற்று என்பதை நாம் புரிந்து கொண்டால், செயல்படுத்தினால் இந்த நாட்டையும், மக்களையும், இயற்கை வளங்களையும் காக்க முடியும். ஏனென்றால் காக்க வேண்டிய அரசுகட்டமைப்பு தோற்றுப்போய்விட்டது.
உரிய நிவாரணம் கொடுத்து, விவசாயிகளை முழுமையாகக் காப்பாற்றும் வரை மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம், போராட்டம் என டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்.
தோழமையுடன்
வழக்குரைஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக