ஞாயிறு, 8 ஜனவரி, 2017

வறட்சியால் யாரும் இறக்கவில்லை:அமைச்சர் தங்கமணி! ( தங்கமணியா அல்லது ........?)


மின்னம்பலம் : தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக உணவு உற்பத்தி கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்துப் போனதால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இன்னொரு பக்கம் தற்கொலை செய்து கொண்டவர்கள், மரடைப்பால் இறந்தவர்கள் என அனைவரின் மரணத்திற்கும் வறட்சியோ, தண்ணீர் இல்லாமல் விவசாயம் பட்டுப் போனதோ காரணம் கிடையாது என கூறும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, வறட்சி நிலை ஆய்வு குறித்த மேற்பார்வை அலுவலர் மதுமதி, கலெக்டர் ஆசியா மரியம் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொதுமக்கள் காய்ந்த பயிருக்கு இழப்பீடு, குடிநீர் பிரச்னை, கால்நடை தீவன பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர். அதனை பரிசீலனை செய்வதாக அமைச்சர்கள் உறுதி அளித்தார்கள். இந்த ஆய்வின்போது எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம், செல்வக்குமார சின்னை யன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர்,சந்திர சேகரன், பொன்.சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை, வறட்சி நிலை, பயிர் சேதம் மற்றும் குடிநீர் பிரச்சினை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடுமையான வறட்சி நிலவுகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் நாமக்கல் மாவட்டத்தில் ஏறத்தாழ 60 சதவீதம் அளவுக்கு மழை பொழிவு குறைந்துள்ளது. குடிநீர் தேவை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து கணக்கெடுப்பு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிந்து விடும். அதன் பிறகு அந்த விபரம் மாநில அரசுக்கு அறிக்கையாக அளிக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில், வறட்சி காரணமாக விவசாயிகள் யாரும் இறக்கவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை இது போன்ற நிகழ்வுகளை அரசியல் காரணமாக சொல்கிறார்களே தவிர விவசாயிகள் வறட்சியால் இறந்தார்கள் எனச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. வறட்சி பாதிப்பு என்பது இயற்கையின் இடர்பாடு, அதை அரசியலாக்க வேண்டும் என்பதற்காக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வறட்சிக்கு, விவசாயத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் அளிக்கப்படும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக